- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்தியா – வங்கதேசம் 3வது நாளில் நேர்ந்த கொடுமை.. ஆடம்பரம் தேவையா? ஜெய் ஷா மீது ரசிகர்கள் அதிருப்தி

இந்தியா மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகள் மோதும் 2வது போட்டி செப்டம்பர் 27ஆம் தேதி உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூர் நகரில் துவங்கியது. மழையால் தாமதமாக துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய வங்கதேசம் 107-3 ரன்கள் எடுத்திருந்த போது மழையால் முதல் நாள் ஆட்டம் முன்னதாகவே முடித்துக் கொள்ளப்பட்டது.

அதன் பின் 2வது நாளில் மீண்டும் மழை பெய்தது. அதனால் 2வது நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. அந்த சூழ்நிலையில் செப்டம்பர் 29ஆம் தேதியன்று 3வது நாள் ஆட்டம் துவங்கிய போது காலையிலிருந்து ஒரு துளி கூட மழை பொழியாததால் போட்டி துவங்கும் என்று ரசிகர்கள் காத்திருந்தனர். அதே போல மைதான பராமரிப்பாளர்களும் ஈரத்தை சரி செய்வதற்கான வேலைகளை செய்தனர்.

- Advertisement -

தொடரும் பரிதாபம்:

அதை நடுவர்கள் காலை 10 மணி, நண்பகல் 12 மணி, மதியம் 2 மணிக்கு சோதித்தனர். அப்போது பிட்ச் மற்றும் 30 யார்ட் பகுதிகள் நன்றாக காய்ந்திருந்தும் பவுண்டரி பகுதிகளில் மழை நீர் தேங்கியிருந்தது. ஆனால் அதை வெளியேற்றுவதற்கு போதுமான வசதிகளும் இயந்திரங்களும் இல்லாததால் மைதான பராமரிப்பாளர்கள் வாலியில் பிழிந்து தண்ணீரை அள்ளினார்கள். அத்துடன் ஈரப்பதமான பகுதிகளில் காய்ந்த மண்ணைப் போட்டு சரி செய்ய முயற்சித்தனர்.

அதையும் தாண்டி ஈரப்பதம் இருந்ததால் மதியம் 3 மணிக்கு 3வது நாள் ஆட்டமும் ரத்து செய்யப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். அதனால் ஒரு துளி மழை பெய்யாத நிலையில் 6 மணி நேரம் கழித்து கூட போட்டியை துவக்க முடியாத அளவுக்கு கான்பூர் மைதானத்தில் வசதிகள் இல்லாதது அம்பலமானது. சொல்லப்போனால் கடந்த காலங்களில் இதே போல இன்னும் சில மைதானங்களில் மழை பெய்த போது வசதிகள் இல்லாததால் இந்தியாவின் போட்டிகள் ரத்து செய்யப்பட்டன.

- Advertisement -

அடிப்படையும் ஆடம்பரமும்:

சமீபத்தில் கூட ஆப்கானிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் நொய்டாவில் மோதிய போட்டி மழையால் ரத்தானது. அப்போதெல்லாம் மைதான பராமரிப்பாளர்கள் வசதிகள் இல்லாமல் ஹேர்டிரையர், மின்விசிறிகளை வைத்து மைதானத்தை உலர வைத்ததால் உலகின் பணக்கார வாரியமான இந்தியாவுக்கு என்னாயிற்று? என்று எதிரணி ரசிகர்கள் கிண்டலடித்தனர்.

இதையும் படிங்க: இதை செஞ்சா ஆஸி வாய்ப்பு கிடைக்கும்.. மயங் யாதவ் கம்பேக் கொடுக்க லக்ஷ்மன் தான் காரணம்.. கோச் பேட்டி

இதற்கிடையே ஐபிஎல் 2025 தொடரில் விளையாடும் வீரர்களுக்கு ஒவ்வொரு போட்டிக்கும் 7.5 லட்சமும் 14 போட்டிகளிலும் விளையாடும் வீரர்களுக்கு 1.05 கோடியும் போனஸ் வழங்கப்படும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா நேற்று அறிவித்தார். தற்போது அதனால் கோபமடையும் ரசிகர்கள் முதலில் இந்தியாவில் உள்ள மைதானங்களின் அடிப்படை வசதிகளை முன்னேற்றுவதில் பணத்தை செலவு செய்யாமல் இந்த ஆடம்பரம் தேவையா? என்று அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். ஏனெனில் ஏற்கனவே ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -