வங்கதேசத்துக்கு எதிராக விரைவில் இந்திய கிரிக்கெட் மணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. அதற்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் மயங் யாதவ் முதல் முறையாக நாட்டுக்காக விளையாடத் தேர்வாகியுள்ளார். கடந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக அறிமுகமான அவர் தொடர்ந்து 155கி.மீ வேகத்தில் பந்து வீசி தனது முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.
அதனால் ஐபிஎல் வரலாற்றிலேயே முதல் 2 போட்டிகளில் ஆட்டநாயகன் விருது வென்ற முதல் வீரராகவும் மயங் யாதவ் சாதனை படைத்தார். மேலும் உம்ரான் மாலிக் போல் அல்லாமல் நல்ல லைன், லென்த் ஆகியவற்றை பின்பற்றி அபாரமாக பந்து வீசிய அவரை 2024 ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் தேர்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன.
லக்ஷ்மன் ஆலோசனை:
ஆனால் அதன் பின் காயத்தை சந்தித்த மயங் யாதவ் தற்போது மீண்டும் குணமடைந்துள்ளதால் இந்தியாவுக்கு தேர்வாகியுள்ளார். இந்நிலையில் மயங் யாதவ் விரைவாக குணமடைய என்சிஏவில் ஜாம்பவான் விவிஎஸ் லக்ஷ்மன் உதவி செய்ததாக அவருடைய பயிற்சியாளர் தேவேந்தர் சர்மா கூறியுள்ளார். அத்துடன் வங்கதேச டி20 தொடரில் அசத்தினால் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் மயங் யாதவ் தேர்வாக வாய்ப்புள்ளதாகவும் தேவேந்தர் சர்மா கூறியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அனைத்து பாராட்டுகளும் லக்ஷ்மன் சார் அவருக்குச் செல்ல வேண்டும். என்சிஏ’க்கு சென்றது முதல் மயங் யாதவ் மீது அவர் ஸ்பெஷல் ஆர்வத்தை காட்டினார். முதலில் தன்னுடைய முதன்மை பலத்தில் வேலை செய்து பின்னர் பந்து வீசுமாறு அவர் மயங் யாதவுக்கு தெளிவான வழிகாட்டுதல்களை கொடுத்தார். அது மிகவும் மெதுவான செயல்முறை. பிசிசிஐ ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை”
ஆஸ்திரேலிய தொடரில்:
“அதைப் பின்பற்றிய மயங் யாதவ் 2 மாதங்கள் முன்பாக பந்து வீசத் துவங்கினர். ஒரு மாதம் முன்பாக அவர் மீண்டும் தன்னுடைய பழைய வேகத்தை பெற்றார். கடந்த 6 வாரங்களாக அவர் ஒரு நாளுக்கு 16 ஓவர்கள் வீசி வருகிறார். இவை அனைத்தும் லக்ஷ்மன் சார் கொடுத்த ஆலோசனைகள். மயங் யாதவ் ஆஸ்திரேலியாவில் விளையாடுவதற்கான ஆர்வம் இருக்கிறது”
இதையும் படிங்க: 1886 நாட்கள்.. 5 வருடம்.. அப்படின்னா நியூஸிலாந்து டம்மி சாம்பியனா? வங்கதேசத்தை விட மோசமான சாதனை
“ஆனால் தற்போதைய நிலையில் அவர் வங்கதேச டி20 தொடரில் சோதிக்கப்படுவார். பின்னர் டெல்லி அணிக்காக ரஞ்சிக் கோப்பையில் விளையாடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. என்சிஏ தொடர்ந்து அவரை கண்காணித்து வருகிறது. எனவே தற்போது ஃபிட்டாகி மயங் யாதவ் 4 ஓவர்களை வீசினால் பின்னர் உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்பது என்னுடைய கருத்தாகும்” என்று கூறினார்.



