
ஆஸ்திரேலியா – இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டி மெல்போர்ன் மைதானத்தில் டிசம்பர் 26ஆம் தேதி துவங்கியது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 474 ரன்கள் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 140, மார்னஸ் லபுஸ்ஷேன் 72 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் களமிறங்கிய இந்தியாவுக்கு துவக்க வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா மீண்டும் 3 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தையும் கொடுத்தார். இதையும் சேர்த்து தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா எனப்படும் சேனா நாடுகளில் கடைசி 10 இன்னிங்ஸில் ரோகித் சர்மா 15.55 என்ற மோசமான சராசரியில் பேட்டிங் செய்துள்ளார்.
இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் சேனா நாடுகளில் கடந்த 75 வருடங்களில் மிகவும் குறைந்த பேட்டிங் சராசரியை கொண்ட இந்திய கேப்டன் என்ற மோசமான சாதனையை ரோஹித் சர்மா படைத்துள்ளார். அதிலும் இன்று தமக்கு மிகவும் பிடித்த ஃபுல் ஷாட்டை கூட சரியாக அடிக்க முடியாமல் ரோகித் சர்மா அவுட்டானார். அதனால் விரக்தியின் உச்சத்திற்கு சென்றுள்ள இந்திய ரசிகர்கள் பேசாமல் ஓய்வு பெறுங்கள் என்று ரோஹித்தை விமர்சிக்கிறார்கள்.
தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் ஜெய்ஸ்வால் மறுபுறம் நிதானமாக விளையாடினார். அவருடன் அடுத்ததாக ஜோடி சேர்ந்த கேஎல் ராகுல் நிதானமாக விளையாடிய போதிலும் 24 ரன்களில் கம்மின்ஸ் வேகத்தில் போல்ட்டானார். இருப்பினும் அடுத்து வந்த விராட் கோலி நிதானமாக விளையாட துவங்கினார்.
அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளை ஆரம்பத்தில் அடிக்காமல் விட்டு விளையாடிய அவர் சீரான வேகத்தில் ரன்களை குவித்து அசத்தினார். அவருடன் சேர்ந்து விளையாடிய ஜெய்ஸ்வால் அரை சதமடித்து 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினார். அதனால் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் 82 ரன்களில் துரதிஷ்டவசமாக ரன் அவுட்டாகி சென்றார்.
இதையும் படிங்க: இதுக்கு அவர் 6 ஆவது பேட்ஸ்மேனாகவே விளையாடி இருக்கலாம்.. ரோஹித் சர்மாவை கலாய்க்கும் ரசிகர்கள்
அடுத்த சில ஓவர்களில் விராட் கோலியும் அவுட் சைட் அவுட் ஆஃப் ஸ்டம்ப் பந்தை தொட்டு ஸ்காட் போலண்டிடம் 36 ரன்களில் தனது விக்கெட்டை பரிசாக கொடுத்தார். அந்த வகையில் மீண்டும் திருந்தாமல் அவர் அவுட்டாகி சென்றது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. இறுதியில் ஆகாஷ் தீப்பும் டக் அவுட்டானதால் 153-2 என இருந்த இந்தியா 2வது நாள் முடிவில் 164-5 என திணறி வருகிறது. இன்னும் 310 ரன்கள் பின் தங்கியிருப்பதால் இந்தப் போட்டியிலும் இந்தியா வெற்றி பெறுமா என்பது சந்தேகமாக பார்க்கப்படுகிறது. களத்தில் பண்ட் 6*, ஜடேஜா 4* ரன்களுடன் உள்ளனர்.