CWC 2023 : இந்தியா – ஆஸி போட்டியில் வெல்லபோவது யார்? வரலாற்று புள்ளிவிவரங்கள் சொல்வது என்ன? – விரிவான அலசல்

- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 தொடரில் சொந்த மண்ணில் 2011 போல கோப்பையை வென்று சரித்திரம் படைப்பதற்காக தயாராகியுள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தங்களுடைய முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இருக்கும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் மதியம் 2:00 மணிக்கு ஐசிசி தரவரிசையில் தற்சமயத்தில் நம்பர் ஒன் அணியாக இருக்கும் இந்தியா நம்பர் 2வது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும் இப்போட்டியில் அனல் பறக்கும் என்று உறுதியாக சொல்லலாம்.

இவ்விரு அணிகளை பொறுத்த வரை ஏற்கனவே 5 கோப்பைகளை வென்று வரலாற்றின் வெற்றிகரமான அணியாக ஜொலிக்கும் ஆஸ்திரேலியா எப்போதுமே ஐசிசி தொடர்களில் கில்லியாக செயல்படுவது வழக்கமாகும். மேலும் தோல்வியின் விளிம்புக்கு சென்றாலும் போராடி வெற்றி காணும் குணத்தை இயற்கையாக கொண்ட ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் பட் கமின்ஸ், மேக்ஸ்வெல், ஸ்டார்க் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் காயத்திலிருந்து குணமடைந்து வந்துள்ளது கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

வெல்லப்போவது யார்:
அத்துடன் வார்னர், ஸ்மித், லபுஸ்ஷேன் என தரமான பேட்ஸ்மேன்களை கொண்டுள்ள அந்த அணி கேமரூன் கிரீன், மார்ஷ், ஸ்டோய்னிஸ் என 3 வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர்கள் இருப்பதால் மிகவும் வலுவாகவே இருக்கிறது. அதே போல ஆடம் ஜாம்பா ஸ்பின்னராக அசத்துவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசல்வுட் ஆகியோர் வேகப்பந்து வீச்சாளர்களாக மிரட்ட தயாராக இருக்கின்றனர்.

மறுபுறம் உலகின் நம்பர் ஒன் அணியாக இருக்கும் இந்தியா எப்போதுமே சொந்த மண்ணில் கில்லி என்பதை சமீபத்திய தொடரில் 2 – 1 (3) என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து காண்பித்தது. அத்துடன் 2023 ஆசிய கோப்பையை வென்று சாதனை படைத்த இந்திய அணிக்கு ராகுல், பும்ரா, ஸ்ரேயாஸ் போன்ற முக்கிய வீரர்கள் காயத்திலிருந்து குணமடைந்து பலத்தை சேர்க்கின்றனர். அது போக கில் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் பேட்டிங் துறையிலும் ஹர்திக் பாண்டியா, ஜடேஜா ஆகியோர் ஆல் ரவுண்டர் துறையிலும் வலு சேர்க்கின்றனர்.

- Advertisement -

மேலும் ஸ்பின்னர் குல்தீப் யாதவ் உச்சகட்ட ஃபார்மில் இருப்பதைப் போலவே சிராஜ், பும்ரா, ஷமி ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களும் தெறிக்க விடும் ஃபார்மில் இந்தியாவை சமநிலை நிறைந்த அணியாக காட்சிப்படுத்துகின்றனர். அந்த வகையில் என்ன தான் ஆஸ்திரேலியா உலகக் கோப்பையின் அசுரனாக இருந்தாலும் சொந்த மண்ணில் தற்போது நல்ல ஃபார்மில் இருக்கும் இந்தியா சமீபத்திய ஒருநாள் தொடரை போலவே இந்த போட்டியிலும் வெல்வதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

வரலாற்று புள்ளிவிவரம்:
1. அந்த வகையில் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இதுவரை மொத்தம் 149 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் ஆஸ்திரேலியா 83 போட்டிகளில் வென்று வலுவாக இருக்கிறது. இந்தியா 56 போட்டிகளில் வென்ற நிலையில் 10 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டது.

- Advertisement -

2. அதே போல இத்தொடர் நடைபெறும் இந்திய மண்ணில் இவ்விரு அணிகளும் வரலாற்றில் 70 போட்டியில் மோதியுள்ளன. அதில் இந்தியா 32 போட்டிகளிலும் ஆஸ்திரேலியா 33 போட்டிகளிலும் வென்றுள்ளன. 5 போட்டி மழையால் கைவிடப்பட்டது. குறிப்பாக உலகக் கோப்பை வரலாற்றில் இதுவரை இவ்விரு அணிகள் மோதிய 12 போட்டிகளில் ஆஸ்திரேலியா 8 போட்டிகளில் வென்று முன்னிலை வகிக்கிறது. இந்தியா 4 போட்டிகளில் வென்ற நிலையில் 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது.

3. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் (3077), அதிக சதங்கள் (9) அடித்த இந்திய வீரராக ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சாதனை படைத்துள்ளார். அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த இந்திய வீரராக ரோஹித் சர்மா (209 ரன்கள்) திகழ்கிறார்.

இதையும் படிங்க: 2 போட்டியில் விலகும் கில்? ஆஸிக்கு எதிராக மும்முனை அட்டாக்.. இந்தியாவின் திட்டம் பற்றி வெளியான தகவல்

4. அதே போல ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்கள் எடுத்த இந்திய பவுலராக கபில் தேவ் (45) சாதனை படைத்துள்ளார். சிறந்த பவுலங்கை பதிவு செய்த இந்திய பவுலராக முரளி கார்த்திக் (6/27) திகழ்கிறார்.

Advertisement