இந்தியா – ஆஸி மாபெரும் ஃபைனலில் வெல்லப்போவது யார்? வரலாறு சொல்வது என்ன.. விரிவான அலசல்

IND vs AUS Final
- Advertisement -

உலக கிரிக்கெட்டின் புதிய சாம்பியனை தீர்மானிக்கும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி நவம்பர் 19ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெறுகிறது. அதில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் வெற்றி கண்ட இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இவ்விரு அணிகளில் டிராவிஸ் ஹெட், டேவிட் வார்னர், மிட்சேல் மார்ஷ் ஆகியோர் டாப் ஆர்டரில் அதிரடியாக ரன்களை சேர்க்க தயாராக இருக்கின்றனர்.

ஒருவேளை அவர்கள் ஏமாற்றத்தை கொடுத்தால் நங்கூரத்தை போடுவதற்காக ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஸ்ஷேன் ஆகியோர் கிளாஸ் பேட்ஸ்மேனாக மிடில் ஆர்டரை அலங்கரிக்கும் நிலையில் கிளன் மேக்ஸ்வெல் அடித்து நொறுக்கி தனி ஒருவனாக வெற்றியை பெற்றுக் கொடுக்கக்கூடிய ஃபினிஷராக இருக்கிறார். இருப்பினும் விக்கெட் கீப்பர் ஜோஸ் இங்கிலீஷ் சற்று தடுமாற்றமான ஃபார்மில் இருப்பது பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

வெல்லப் போவது யார்:
ஆல் ரவுண்டர்கள் இல்லாத குறையை மிட்சேல் மார்ஷ், மேக்ஸ்வெல், டிராவிஸ் ஹெட் ஆகிய பேட்ஸ்மேன்கள் பார்த்துக்கொள்ள தயாராக இருக்கின்றனர். அதே போல ஆடம் ஜாம்பா சமீபத்திய போட்டிகளில் இந்திய பேட்ஸ்மன்களுக்கு சவாலை கொடுத்த தரமான ஸ்பின்னராக இருக்கிறார். அவர்களுடன் கேப்டன் கமின்ஸ், மிட்சேல் ஸ்டார்க், ஜோஸ் ஹேசல்வுட் ஆகியோர் அனுபவமிகுந்த வேகப்பந்து வீச்சார்களாக மிரட்டுவதற்கு தயாராக இருக்கிறார்கள்.

மறுபுறம் இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா தன்னுடைய சாதனைகளைப் பற்றி கவலைப்படாமல் அடித்து நொறுக்கும் நிலையில் அவருக்கு நிகராக சுப்மன் கில் நிதானம் கலந்த அதிரடியை காட்டி வருகிறார். அவர்களுக்கு நிகராக தேவைப்பட்டால் அதிரடியாகவும் நங்கூரமாகவும் விளையாடும் தன்மை கொண்ட உலகத்தரம் வாய்ந்த விராட் கோலி ஆஸ்திரேலியாவுக்கு மீண்டும் சிம்ம சொப்பனமாக திகழ்வார் என்று நம்பலாம்.

- Advertisement -

அவர்களைத் தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் நல்ல ஃபார்மில் மிடில் ஆர்டரை வலுப்படுத்துகின்றனர். இதில் ஸ்மித் – லபுஸ்ஷேன் ஆகியோரை விட இந்த இருவரும் இயற்கையாக அதிரடியாக விளையாடக்கூடிய திறமையைக் கொண்டிருப்பது இந்தியாவுக்கு கூடுதல் பலமாகும். அதைத்தொடர்ந்து ரவீந்திர ஜடேஜா 3 துறைகளிலும் அசத்தி இந்தியாவை எப்போதும் ஏமாற்றாத ஆல் ரவுண்டராக அசத்துதற்கு தயாராக உள்ளார். மேலும் ஆடம் ஜாம்பாவை விட மிடில் ஓவர்களில் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு குல்தீப் யதாவ் இந்திய மைதானங்களில் பெரிய சவாலை கொடுக்கும் தரமான ஸ்பின்னராக இருக்கிறார்.

இவர்களை விட ஷமி, சிராஜ், பும்ரா ஆகியோர் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை வேகத்தில் தெறிக்க விடுவதற்கு தயாராக இருக்கிறார்கள். பொதுவாக அன்றைய நாளில் யார் நல்ல ஃபார்மில் அசத்துகிறார்களோ அவர்களே வெற்றி பெறுவார்கள் என்பார்கள். அந்த வகையில் கமின்ஸ், ஸ்டார்க் ஆகியோரை விட ஷமி, பும்ரா ஆகியோர் அடங்கிய இந்திய வேகப்பந்து வீச்சு கூட்டணி தற்போது நல்ல ஃபார்மில் இருப்பது இந்தியாவுக்கு பலமாகும்.

- Advertisement -

மொத்தத்தில் இரு அணிகளுமே சம பலத்தைக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் ஆஸ்திரேலியா நாக் அவுட் போட்டிகளில் எப்போதுமே அழுத்தத்திற்கு அஞ்சாமல் அசத்தும் தன்மையை இயற்கையாகவே கொண்டுள்ளதால் கோப்பையை வெல்ல வாய்ப்பிருக்கிறது. அதே சமயம் 2013க்குப்பின் நாக் அவுட்டில் சொதப்புவதை மீண்டும் அரங்கேற்றாமல் சாதாரணமாக சிறப்பாக விளையாடினாலே சொந்த மண்ணில் ஒரு லட்சம் ரசிகர்களில் ஆதரவுடன் தற்போதுள்ள ஃபார்முக்கு 2011 போல இந்தியா கண்டிப்பாக கோப்பையை வெல்ல பிரகாச வாய்ப்பிருக்கிறது.

வரலாற்று புள்ளிவிவரம்:
1. ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இதுவரை மொத்தம் 150 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் ஆஸ்திரேலியா 87 முறை வென்று வலுவாக இருக்கும் நிலையில் இந்தியா 87 போட்டிகளில் வென்றுள்ளது. 10 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டது. உலகக் கோப்பை வரலாற்றில் இவ்விரு அணிகளும் மோதிய 13 போட்டிகளிலும் ஆஸ்திரேலியா 8 முறை வென்று வலுவாக இருக்கிறது. இந்தியா 5 வெற்றிகளை பெற்றுள்ளது.

இதையும் படிங்க: சகாப்தத்தின் லெஜெண்ட்.. ஸ்மித் – விராட் கோலி ஆகியோரில் யார் பெஸ்ட்? இயன் சேப்பல் கருத்து

2. இருப்பினும் இத்தொடரின் லீக் சுற்றில் ஆஸ்திரேலியாவை சென்னையில் இந்தியா தோற்கடித்தது. ஆனால் ஐசிசி நாக் போட்டிகளின் வரலாற்றில் 2003 உலகக்கோப்பை ஃபைனல், 2015 செமி ஃபைனல், 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் ஆகிய 3 போட்டிகளில் ஆஸ்திரேலியா வென்றுள்ளது. 1998, 2000 சாம்பியன்ஸ் டிராபி காலிறுதி, 2007 டி20 உலக கோப்பை செமி ஃபைனல், 2011 உலகக் கோப்பை காலிறுதி ஆகிய 4 போட்டிகளில் இந்தியா வென்று முன்னிலையில் இருக்கிறது.

Advertisement