உலக கிரிக்கெட்டின் புதிய சாம்பியனை தீர்மானிக்கும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதி போட்டியில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் வெற்றி கண்ட இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் கோப்பையை வெல்வதற்காக பலப்பரீட்சை நடத்துகின்றன. அப்போட்டியில் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து ஆஸ்திரேலியா 6வது கோப்பையை முத்தமிடும் கனவுடன் களமிறங்குகிறது.
மறுபுறம் 2013 முதல் ஐசிசி தொடர்களில் தோல்விகளை மட்டுமே பார்த்து வரும் இந்தியா இம்முறை அதை சொந்த மண்ணில் உடைத்து ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 2011 போல கோப்பையை வென்று சரித்திரம் படைக்கும் லட்சியத்துடன் களமிறங்குகிறது. அந்த வகையில் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள இப்போட்டி நவம்பர் 19ஆம் நவம்பர் தேதி மதியம் 2 மணிக்கு அகமதாபாத் நகரில் இருக்கும் உலகின் மிகப்பெரிய மைதானத்தில் நடைபெற உள்ளது.
அகமதாபாத் மைதானம்:
1982இல் தோற்றுவிக்கப்பட்டு மோட்டேரா என்றழைக்கப்பட்ட இம்மைதானம் தற்போது 1,32,000 ரசிகர்கள் அமரக்கூடிய உலகின் மிகப்பெரிய மைதானமாக புதுப்பிக்கப்பட்டுள்ளது. இம்மைதானத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை நடைபெற்றுள்ள 32 போட்டிகளில் இந்தியா 19 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 11 போட்டிகளில் வென்றுள்ள இந்தியா 8 தோல்விகளை பதிவு செய்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா இங்கு 3 போட்டிகளில் 2 வெற்றிகளையும் 1 தோல்வியும் பதிவு செய்துள்ளது.
குறிப்பாக 2011 உலகக்கோப்பை காலிறுதியில் யுவராஜ் சிங் அசத்தலான ஆட்டத்தால் ஆஸ்திரேலியாவை இங்கே இந்தியா தோற்கடித்ததை மறக்க முடியாது. இப்மைதானத்தில் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் (342) அடித்த வீரராக ராகுல் டிராவிட் அதிக விக்கெட்களை (10) எடுத்த பவுலராக கபில் தேவ் இப்போதும் சாதனை படைத்துள்ளனர். இந்த மைதானத்தில் இந்தியா பதிவு செய்துள்ள அதிகபட்ச ஸ்கோர் 325/5, வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக, 2022.
வெதர் ரிப்போர்ட்:
நவம்பர் 19ஆம் தேதி அகமதாபாத் நகரில் மழை பெய்வதற்கு வாய்ப்பில்லை என்றும் வானம் லேசான மேகமூட்டத்துடன் மட்டுமே இருக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவிப்பதால் இப்போட்டி முழுமையாக நடைபெறும் என்று நம்பலாம்.
பிட்ச் ரிப்போர்ட்:
அகமதாபாத் மைதானம் வரலாற்றில் பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டுக்கும் சாதகமாக இருந்து வருகிறது. இருப்பினும் புதுப்பிக்கப்பட்ட இம்மைதானத்தில் வெள்ளைப்பந்து போட்டிகளுக்கு கருமண்ணால் செய்யப்பட்ட பிட்ச் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதில் நல்ல வேகம் மற்றும் பவுன்ஸ் ஆகியவை இருக்கும் என்பதால் நன்கு செட்டிலாகும் பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை குவிப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது.
ஸ்பின்னர்கள்களை பொறுத்த வரை ஆரம்பத்திலேயே புதிய பிட்ச்சில் விக்கெட்டுகளை எடுக்க மாட்டார்கள். ஆனால் போட்டி நடைபெற நடைபெற நல்ல உதவிகளைப் பெற்று மிடில் ஓவர்களில் விக்கெட்களை எடுப்பார்கள். ஆனால் வேகப்பந்து வீச்சாளர்கள் நல்ல லைன், லென்த் ஆகியவற்றை பின்பற்றினால் பெரிய சவாலை கொடுக்கலாம். குறிப்பாக இரவு நேரத்தில் அவர்கள் எக்ஸ்ட்ரா ஸ்விங்கை பெற்று அதிக விக்கெட்களை எடுக்க வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: 1க்கும் 5க்கும் போட்டி.. அதுல ஆஸியை விட இந்திய அணியின் பேலன்ஸ் வேற லெவல்.. விஸ்வனாத் கருத்து
வரலாற்றில் இங்கு நடைபெற்ற 32 ஒருநாள் போட்டிகளின் அடிப்படையில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 237 ரன்களாகும். 2023 உலகக்கோப்பையில் இங்கு நடைபெற்ற 4 போட்டிகளிலுமே எந்த அணியும் 300 ரன்கள் அடித்ததில்லை என்பது அகமதாபாத் பிட்ச் பேட்டிங், பவுலிங்க்கு சமமாக இருக்கும் என்பதை காட்டுகிறது. அதே சமயம் அந்த நான்கில் 3 முறை சேசிங் செய்த அணிகள் வென்றுள்ளது. இங்கு வரலாற்றில் நடைபெற்ற 32 போட்டிகளில் 17 முறை பேட்டிங் செய்த அணியும் 15 முறை சேசிங் செய்த அணியும் வென்றுள்ளது. எனவே இது ஃபைனல் என்பதால் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங் செய்து பெரிய ரன்கள் குவிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.