- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்தியா – ஆஸி 2வது டெஸ்ட் நடைபெறும் அடிலெய்ட் மைதானம் எப்படி? புள்ளிவிவரம், பிட்ச், வெதர் ரிப்போர்ட்

ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் கொண்ட 2024 – 25 பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் பும்ரா தலைமையில் 295 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 1 – 0* என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அதே வேகத்தில் ஆஸ்திரேலிய பிரதமர் அணியையும் பயிற்சி போட்டியில் இந்தியா தோற்கடித்தது.

அந்த உத்வேகத்துடன் 2வது போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தும் முனைப்புடன் இந்தியா போராட உள்ளது. மறுபுறம் முதல் போட்டியில் படுதோல்வியை சந்தித்த ஆஸ்திரேலியா இரண்டாவது போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் விளையாட உள்ளது. அதனால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்போட்டி நவம்பர் 6ஆம் தேதி இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் பகலிரவாக இளஞ்சிவப்பு நிற பந்தில் துவங்க உள்ளது.

- Advertisement -

அடிலெய்ட் மைதானம்:

உலகிலேயே பார்ப்பதற்கு மிகவும் அழகான மைதானங்களில் ஒன்றான இங்கே 1884 முதல் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இங்கு இதுவரை நடைபெற்ற 82 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஆஸ்திரேலியா 45 வெற்றிகளையும் 18 தோல்விகளையும் 19 ட்ராவையும் சந்தித்துள்ளது. இந்தியா இங்கே 13 போட்டிகளில் 2 வெற்றி 8 தோல்வி 3 ட்ராவை சந்தித்துள்ளது.

குறிப்பாக இங்கு பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா ஒரு முறை கூட தோற்றதில்லை. ஆனால் இங்கே இந்தியா 36க்கு ஆல் அவுட்டாகி ஆஸ்திரேலியாவிடம் மோசமான தோல்வியை சந்தித்தது. இந்த மைதானத்தில் விராட் கோலி 509 ரன்கள் குவித்து சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

வெதர் ரிப்போர்ட்:

அடிலெய்ட் நகரில் நவம்பர் 6ஆம் தேதி 40% இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக அங்குள்ள வானிலை மையம் தெரிவிக்கிறது. எஞ்சிய நாட்கள் 10 – 20% மட்டுமே மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிகிறது. எனவே முதல் நாள் ஆட்டம் தடைபட்டாலும் எஞ்சிய நாட்கள் ஆட்டம் முழுமையாக நடைபெறும் என்று நம்பலாம்.

பிட்ச் ரிப்போர்ட்:

அடிலெய்ட் பிட்ச் வழக்கம் போல அனைவருக்கும் ஆதரவாக இருக்கும் என்று அதன் தயாரிப்பாளர் டேமின் ஹுக் கூறியிருந்தார். அதில் கொஞ்சம் புற்கள் இருக்கும் என்றும் அவர் கூறியிருந்தார். அதனால் இப்போட்டி முழுவதும் நன்றாக பந்து வீசும் வேகப்பந்து வீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். குறிப்பாக இரவு நேரத்தில் இளஞ்சிவப்பு நிற பந்து எக்ஸ்ட்ராவாக ஸ்விங் மற்றும் வேகத்தை கொடுக்கும்.

இதையும் படிங்க: அஸ்வின், ஜடேஜா 2வது ஆஸி போட்டியிலாவது விளையாடுவார்களா? கேப்டன் ரோஹித் சர்மா சர்மா பதில்

அது பேட்ஸ்மேன்களுக்கு எக்ஸ்ட்ரா சவாலை ஏற்படுத்தலாம். அதே போல கடைசி 3 நாட்களில் ஸ்பின்னர்கள் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். எனவே இங்கு ரன்களை குவிக்க பேட்ஸ்மேன்கள் நங்கூரமாக விளையாடுவது அவசியம். இங்கு 379, 346, 268, 208 என்பது சராசரி நான்கு இன்னிங்ஸ் ஸ்கோர். இங்கு வரலாற்றில் 41 முறை முதலில் பேட்டிங் செய்த அணிகளும் 24 முறை முதலில் பந்து வீசிய அணிகளும் போட்டிகளில் வென்றுள்ளன. எனவே டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங் செய்து பெரிய ரன்கள் குவிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.

- Advertisement -