IND vs AUS : 2வது ஒன்டே நடைபெறும் இந்தியா கோட்டையான.. இந்தூர் மைதானம் எப்படி? வரலாற்று புள்ளிவிவரம், பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

- Advertisement -

ஆசிய கோப்பையை வெற்றியை தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் விளையாடும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. குறிப்பாக மொகாலியில் நடைபெற்ற முதல் போட்டியில் பேட்டிங், பவுலிங் துறையில் அசத்திய இந்தியா சிறப்பான வெற்றி பெற்று 2023 உலகக்கோப்பைக்கு தயாராகும் பயணத்தில் வெற்றி நடை போடுகிறது.

அதிலும் விராட் கோலி போன்ற சில முதன்மை வீரர்கள் இல்லாமலேயே வெற்றி வாகை சூடிய இந்தியா உலகிலேயே 3 வகையான ஐசிசி தரவரிசையிலும் ஒரே சமயத்தில் முதலிடம் பிடித்த முதல் ஆசிய அணி என்ற மாபெரும் சரித்திரம் படைத்தது. அந்த நிலையில் அதே வேகத்தில் 2வது போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்றி கடந்த பிப்ரவரியில் 3 – 0 என்ற கணக்கில் ஒய்ட்வாஷ் தோல்வியை பரிசளித்த ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் இந்தியா களமிறங்க உள்ளது.

- Advertisement -

இந்தூர் மைதானம்:
மறுபுறம் மேக்ஸ்வெல் போன்ற சில முக்கிய வீரர்கள் இல்லாமல் தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலியா 2வது போட்டியில் வென்று தொடரை வெல்லும் வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ள போராட உள்ளது. அதனால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்போட்டி செப்டம்பர் 24ஆம் தேதி மதியம் 1.30 மணிக்கு மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் இருக்கும் ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

1. கடந்த 1990இல் தோற்றுவிக்கப்பட்டு 30000 ரசிகர்கள் அமரும் வகையில் நவீன வசதிகளை கொண்ட இம்மைதானத்தில் இதுவரை 6 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளது. அந்த 6 போட்டிகளிலும் வென்றுள்ள இந்தியாவுக்கு இம்மைதானம் கோட்டையாகவும் ராசியானதாகவும் இருக்கிறது என்றே சொல்லலாம். குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கு விளையாடிய 1 போட்டியிலும் இந்தியா வெற்றி வாகை சூடியுள்ளது.

- Advertisement -

2. இந்த மைதானத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் (220) மற்றும் அதிகபட்ச ஸ்கோர் (219, வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக, 2011) பதிவு செய்த வீரராக வீரேந்திர சேவாக் சாதனை படைத்துள்ளார். மேலும் அதிக விக்கெட்களை (6) எடுத்த பவுலராக ஸ்ரீசாந்த் சாதனை படைத்துள்ளார். இங்கு இந்தியா பதிவு செய்துள்ள அதிகபட்ச ஸ்கோர் : 418/5, வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக, 2011

வெதர் ரிப்போர்ட்:
இப்போட்டி நடைபெறும் நாளன்று இந்தூர் நகரில் 40% மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவிக்கிறது. குறிப்பாக மதியம் 2 – 4 மணி வரை 30% இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருந்தாலும் அதன்பின் மேகமூட்டத்துடன் கூடிய சூழ்நிலை மட்டுமே நிலவும் என்பதால் இப்போட்டியின் முடிவு கிடைக்கும் என்று உறுதியாக நம்பலாம்.

- Advertisement -

பிட்ச் ரிப்போர்ட்:
வரலாற்றில் இந்தூர் மைதானம் எப்போதுமே பேட்டிங்க்கு சாதகமாக இருந்து வருகிறது. குறிப்பாக சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 320 ரன்கள் என்றளவுக்கு மைதானத்தில் பேட்ஸ்மேன்கள் ராஜாங்கம் நடத்துகின்றனர். போதாக்குறைக்கு 56, 68 மீட்டர் என இங்கு பவுண்டரிகள் அளவு சிறியதாக இருப்பதால் பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே விக்கெட்டுகளை எடுக்க முடியும்.

இதையும் படிங்க: IND vs AUS : 2 ஆவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதுதான் – லிஸ்ட் இதோ

அதே சமயம் மேகமூட்டமான சூழ்நிலையில் ஸ்விங் வேகப்பந்து வீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். மேலும் மிடில் ஓவர்களில் தரமான ஸ்பின்னர்கள் விக்கெட்டுகளை எடுக்க வாய்ப்புள்ளது. இங்கு இதற்கு முன் தலா 3 முறை முதலில் பேட்டிங் செய்த அணியும் சேசிங் செய்த அணியும் வென்றுள்ளதால் டாஸ் வெல்லும் கேப்டன் எந்த முடிவு எடுத்தாலும் பெரிய ரன்கள் மட்டுமே வெற்றி காண முடியும்.

Advertisement