
கடந்த ஆண்டு இறுதியில் சொந்த மண்ணில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய கிரிக்கெட் அணியானது மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் இழந்தது. அதனை தொடர்ந்து ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரை நான்குக்கு ஒன்று (4-1) என்ற கணக்கில் இழந்தது. இதன் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பையும் இந்திய அணி தவறவிட்டது.
இப்படி அடுத்தடுத்த இரண்டு டெஸ்ட் தொடர்களில் தோல்வியை சந்தித்து பின்னடைவை சந்தித்த இந்திய அணியானது அண்மையில் நடைபெற்று முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது இந்தியாவில் இந்த 2025-ஆம் ஆண்டிற்கான 18-ஆவது ஐபிஎல் தொடரானது கோலாகலமாக நடைபெற உள்ளது.
கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் நடைபெற இருக்கும் இந்த தொடருக்கு பின்னர் இந்திய அணியானது இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற இருக்கும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்நிலையில் இந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் அடுத்ததாக 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை கருத்தில் கொண்டு இந்த மாற்றங்கள் நிகழலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் சாம்பியன்ஸ் டிராபி தொடரை ரோகித் சர்மா கைப்பற்றி உள்ளதால் அவரே இந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கும் கேப்டனாக செயல்படுவார் என்று தெரிகிறது. அதேபோன்று இந்த டெஸ்ட் அணியில் ஜெய்ஸ்வால் துவக்க வீரராகவும், மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் விராட் கோலி, சுப்மன் கில் ஆகியோருக்கு இடம் கிடைக்கும் என்றும் மேலும் மிடில் ஆர்டரில் இளம் வீரர்களான தேவ்தத் படிக்கல், அபிமன்யு ஈஸ்வரன், சர்ஃபராஸ் கான் போன்ற வீரர்களும் இடம் பிடிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி ரஞ்சி போட்டியில் சிறப்பாக விளையாடி வரும் கருண் நாயருக்கும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆல்ரவுண்டர்களாக ஜடேஜா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், நிதீஷ்குமார் ரெட்டி ஆகியோரும் விக்கெட் கீப்பர்களாக ரிஷப் பன்ட், கே.எல் ராகுல், ஜுரேல் ஆகியோரும் இடம் பெறலாம் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க : என்னால நிச்சயமா அந்த பார்மேட்ல விளையாட முடியாது.. அது ரொம்ப கஷ்டம் – வருண் சக்ரவர்த்தி வெளிப்படை
மற்றபடி வேகப்பந்து வீச்சாளர்களாக பும்ரா, முகமது ஷமி, ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, சிராஜ் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு பும்ரா இந்த இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் உடற்தகுதியின் அடிப்படையில் தான் தேர்வு செய்யப்படுவார் என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.