அண்மையில் நடைபெற்று முடிந்த ஒன்பதாவது ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணியானது மூன்றாவது முறையாக சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை கைப்பற்றி அசத்தியது. கடந்த 2013-ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணியானது சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்றி அசத்தியது.
எனக்கு அந்த பார்மெட் செட்டாகாது : வருண் சக்ரவர்த்தி
அதற்கடுத்து தற்போது 12 ஆண்டுகள் கழித்து இந்திய அணி மீண்டும் சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்றியது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதோடு பாராட்டடுகளையும் பெற்றிருந்தது. இந்த தொடருக்கான இந்திய அணியில் பும்ராவிற்கு பதிலாக கடைசி நேரத்தில் தமிழக சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தி இணைக்கப்பட்டிருந்தார்.
அப்படி கடைசி நேரத்தில் இணைந்த வருண் சக்கரவர்த்திக்கு முதல் இரண்டு லீக் ஆட்டங்களில் வாய்ப்பு கிடைக்காத வேளையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியின்போது வாய்ப்பு கிடைத்தது. அந்த போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய அவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இரண்டு விக்கெட்டுகளையும், நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற இறுதிப்போட்டியில் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
இதன்மூலம் மூன்று போட்டிகளில் ஒன்பது விக்கெட்டுகளை எடுத்து அந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை எடுத்த இரண்டாவது பவுலர் என்ற சாதனையை நிகழ்த்தினர். இந்நிலையில் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் அசத்தி வரும் அவருக்கு டெஸ்ட் கிரிக்கெட்டிலும் வாய்ப்பு வழங்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான நவ்ஜோத் சித்து கேட்டுக்கொண்டார்.
ஆனால் தான் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஏற்ற பவுலர் கிடையாது என்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவது மிகவும் கடினம் என்றும் வருண் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் ஆர்வம் எனக்கும் இருக்கிறது. ஆனால் என்னுடைய பந்துவீச்சுக்கு டெஸ்ட் கிரிக்கெட் ஃபார்மேட் செட்டாகாது. ஏனெனில் என்னுடைய பௌலிங் கிட்டத்தட்ட மிதவேகப் பந்துவீச்சு போன்று இருக்கும்.
இதையும் படிங்க : சி.எஸ்.கே, மும்பை அணி எல்லாம் ஜாக்கிரதையா இருங்க.. லக்னோ அணியின் பலம் குறித்து பேசிய – ஆகாஷ் சோப்ரா
அதோடு டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளை பொருத்தவரை குறைந்த அளவு ஓவர்களே நான் வீசுகிறேன். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை 20-30 ஓவர்கள் பந்துவீச வேண்டும். எனவே என்னுடைய பந்துவீச்சு ஸ்டைலுக்கு டெஸ்ட் கிரிக்கெட் செட்டாகாது என வருண் சக்கரவர்த்தி கூறியது குறிப்பிடத்தக்கது.