
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. பெர்த் நகரில் துவங்கி நடைபெற்று வரும் இந்த முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கு சுருண்டது.
அதனை தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 104 ரன்களுக்கு சுருண்டதால் 46 ரன்கள் முன்னிலையுடன் தங்களது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இந்திய அணியானது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
மூன்றாவது நாள் தேநீர் இடைவேளை வரை 5 விக்கெட்டுகளை இழந்து 359 ரன்கள் குவித்துள்ளது. இதன் மூலம் தற்போது 405 ரன்கள் முன்னிலை எடுத்து வலுவாக இருக்கும் இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த சில தகவல்களை இங்கு காணலாம்.
அதன்படி இந்த போட்டியின் மூன்றாம் நாளான இன்று எஞ்சியுள்ள ஓவர்களையும் இந்திய அணி விளையாடிவிட்டால் குறைந்தது 500 முதல் 550 ரன்கள் வரை முன்னிலை பெற வாய்ப்பு உள்ளது. அப்படி இந்திய அணி 500 ரன்கள் கடக்கும் பட்சத்தில் நிச்சயம் நான்காவது மற்றும் ஐந்தாவது நாட்களில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய கடினமாக இருக்கும்.
அதேவேளையில் போட்டியின் இரண்டு நாட்கள் மீதம் இருப்பதால் முடிவு எந்த அணிக்கு வேண்டுமானாலும் சாதகமாக இருக்கலாம். அதன் காரணமாக முடிந்தவரை இந்திய அணி எவ்வளவு ரன்களை குவிக்க முடியுமோ குவித்துவிட்டு பெரிய இலக்கினை ஆஸ்திரேலிய அணிக்கு நிர்ணயிக்க வேண்டும்.
இதையும் படிங்க : முதல் 15 போட்டிகளிலேயே இப்படி ஒரு இமாலய ரன் குவிப்பா? அசத்திய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் – விவரம் இதோ
பின்னர் பந்துவீச்சில் முதல் இன்னிங்சில் செயல்பட்டது போன்றே ஆஸ்திரேலிய அணியை ரன் குவிக்க முடியாமல் அழுத்தத்திற்கு தள்ளி சிறப்பாக பந்து வீசினால் நிச்சயம் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவது உறுதி.