வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு அடுத்ததாக அயர்லாந்துக்கு பறந்துள்ள இந்தியா அங்கு 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் களமிறங்கியுள்ளது. ரோகித் சர்மா போன்ற சீனியர்கள் இல்லாத நிலைமையில் இளம் வீரர்களுடன் இத்தொடரில் களமிறங்கும் இந்தியாவை நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்பிரித் பும்ரா காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்து கேப்டனாக தலைமை தாங்குவது அனைவரிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் 2024 டி20 உலக கோப்பையில் தேவையான இளம் வீரர்களை கண்டறியும் நோக்கத்தில் நடைபெறும் இத்தொடரில் ஆகஸ்ட் 18ஆம் தேதி டப்லின் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் ரிங்கு சிங் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் அறிமுகமாக களமிறங்கும் வாய்ப்பை பெற்றனர்.
அதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய அயர்லாந்துக்கு முதல் ஓவரிலேயே ஆண்டி பால்பரின் 4, லார்கன் டுக்கர் 0 என 2 முக்கிய வீரர்களை ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாக்கிய பும்ரா 327 நாட்கள் கழித்து விக்கெட்களை எடுத்து மிகச்சிறந்த கம்பேக் கொடுத்தார். அந்த நிலைமையில் வந்த ஹேரி டெக்டர் 9 (16) ரன்களில் அவுட்டாக மறுபுறம் தடுமாறிய கேப்டன் பால் ஸ்டர்லிங்கும் 11 (11) ரன்களில் பெவிலியன் திரும்பினார். போதாகுறைக்கு ஜார்ஜ் டாக்ரெல் 1, மார்க் அடைர் 16 என அடுத்து வந்த முக்கிய பேட்ஸ்மேன்களும் சொற்ப ஏன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.
குறுக்கே வந்த மழை:
அதனால் 59/6 என சரிந்த அயர்லாந்து 100 ரன்களை தாண்டுமா என்ற கவலை அந்நாட்டு ரசிகர்களிடம் ஏற்பட்ட போது மிடில் ஆர்டரில் நங்கூரமாக விளையாடிய நட்சத்திர வீரர் குர்ட்டீஸ் கேம்பர் 3 பவுண்டரி 1 சிக்ஸருடன் 39 (33) ரன்கள் எடுத்து அவுட்டானார். ஆனால் அவருடன் ஆரம்பத்தில் நிதானத்தை வெளிப்படுத்தி கடைசியில் அதிரடி காட்டிய பேரி மெக்கார்த்தி 4 பவுண்டரி 4 சிக்சருடன் 51* (32) ரன்கள் விளாசி நல்ல ஃபினிஷிங் கொடுத்தார். அதனால் ஓரளவு தப்பிய அயர்லாந்து 20 ஓவர்களில் 139/7 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக கேப்டன் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
அதை தொடர்ந்து 140 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு பவர் பிளே ஓவர்களில் ருதுராஜுடன் சேர்ந்து நிதானமாக விளையாடிய ஜெய்ஸ்வால் 46 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்தாலும் 24 (23) ரன்களில் அவுட்டாகி செல்ல அடுத்ததாக வந்த திலக் வர்மா கோல்டன் டக் அவுட்டாகி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தார். இருப்பினும் மறுபுறம் நிதானமாக விளையாடிய ருதுராஜ் கைக்வாட் 19* (16) ரன்களும் சஞ்சு சாம்சன் 1* (1) ரன்னும் எடுத்து வெற்றிக்கு போராடிக் கொண்டிருந்த போது ஜோராக வந்த மழை போட்டியை மொத்தமாக நிறுத்தியது.
அந்த சமயத்தில் இந்தியா 6.5 ஓவர்களில் 47/2 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வந்த மழை சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஓயாமல் தொடர்ந்து பெய்து மைதானத்தை தண்ணீரால் நிரப்பியது. அதனால் ஒரு மணி நேரம் வரை காத்திருந்த நடுவர்கள் போட்டியை நடத்துவதற்கு முயற்சித்த போதிலும் மழை கருணை காட்டாமல் தொடர்ந்து பெய்தது. அப்படியே நேரம் முடிந்ததால் இப்போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவித்த நடுவர்கள் டக்வொர்த் லெவிஸ் விதிமுறையை கையாண்டனர்.
அப்போது அயர்லாந்தை விட இந்தியா 2 ரன்கள் முன்னிலையில் இருந்தது. அதன் காரணமாக டக்வொர்த் லெவிஸ் விதிமுறைப்படி இந்த போட்டியில் இந்தியா 2 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதாக நடுவர்கள் அறிவித்தனர். அந்த வகையில் மழைக்கு மத்தியிலும் அசத்திய இந்தியா இளம் வீரர்களுடன் வெற்றி பெற்று 1 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே இத்தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.
இதையும் படிங்க:வீடியோ : முதல் ஓவரிலேயே 2 விக்கெட், 327 நாட்கள் கழித்து மாஸ் கம்பேக் கொடுத்த பும்ரா – திணறிப்போன அயர்லாந்து
குறிப்பாக கேப்டனாக தலைமை தாங்கிய முதல் போட்டியிலேயே பும்ரா இந்தியாவுக்கு வெற்றி பதிவு செய்து 2 விக்கெட்டுகளையும் எடுத்து சிறப்பான கம்பேக் கொடுத்துள்ளார். மறுபுறம் பேட்டிங்கில் கடைசி நேரத்தில் போராடி நல்ல ரன்களை எடுத்த அயர்லாந்துக்கு கிறிஸ் எங் 2 விக்கெட்டுகளை எடுத்தும் மழை வந்து தடுத்ததால் மேற்கொண்டு போராட முடியாமல் வெற்றியை நூலிழையில் தவற விட்டது.