- Advertisement -
இந்திய கிரிக்கெட்

4 விக்கெட்ஸ்.. 9க்கு 8.. கில், ஸ்ரேயாஸ், அக்சர் அசத்தல்.. நாக்பூரை தவறாக கணக்கிட்ட இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா

இங்கிலாந்துக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் இந்தியா விளையாடும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 6ஆம் தேதி துவங்கியது. 2025 ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி தொடருக்கு தயாராகும் வகையில் நடைபெறும் அந்தத் தொடரின் முதல் போட்டி நாக்பூரில் மதியம் 1.30 மணிக்கு துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு 75 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்த பில் சால்ட் 43 ரன்களில் ரன் அவுட்டானார். அவருடன் விளையாடிய பென் டக்கெட்டை 32 ரன்களில் அவுட்டாக்கிய அறிமுக வீரர் ராணா அடுத்ததாக வந்த ஹரி ப்ரூக்கை டக் அவுட்டாக்கினார். அதே போல நம்பிக்கை நட்சத்திரம் ஜோ ரூட் 19 ரன்களில் ஜடேஜா சுழலில் சிக்கினார்.

- Advertisement -

அசத்தல் பவுலிங்:

அதனால் தடுமாறிய இங்கிலாந்து அணிக்கு மிடில் ஆர்டரில் நிதானமாக விளையாடிய கேப்டன் ஜோஸ் பட்லர் அரை சதத்தை அடித்து 52, ஜேக்கப் பேத்தல் 51 ரன்கள் விளாசி அசத்தினார்கள். ஆனால் அவர்களைத் தவிர்த்து லியாம் லிவிங்ஸ்டன் 5, பிரைடன் கார்ஸ் 10 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்கள். இறுதியில் ஜோப்ரா ஆர்ச்சர் 21* ரன்கள் எடுத்தும் 47.4 ஓவரில் இங்கிலாந்தை 248 ரன்களுக்கு இந்தியா சுருட்டியது.

இந்தியாவுக்கு அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 3, ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டுகளை எடுத்தார்கள். அடுத்ததாக 249 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு சுமாரான ஃபார்மில் இருக்கும் கேப்டன் ரோஹித் சர்மா 2 ரன்னில் அவுட்டாகி பெரிய ஏமாற்றத்தை கொடுத்தார். அவருடன் அறிமுகமாக விளையாடிய ஜெய்ஸ்வால் 15 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

- Advertisement -

இந்தியா வெற்றி:

ஆனால் அடுத்ததாக வந்த சுப்மன் கில் நிதானமாக விளையாடிய நிலையில் எதிர்புறம் வந்த ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக விளையாடினார். ஆர்ச்சருக்கு எதிராக அடுத்தடுத்த சிக்ஸர்களை பறக்க விட்டு அசத்திய அவர் 9 பவுண்டரியுடன் சதத்தை அடித்து 59 (36) ரன்கள் விளாசி அவுட்டானார். அடுத்ததாக வந்த அக்சர் பட்டேல் தம்முடைய பங்கிற்கு அதிரடியாக விளையாடி 52 (47) ரன்கள் விளாசி அவுட்டானார்.

மறுபுறம் தொடர்ந்து நங்கூரமாக விளையாடிய கில் வெற்றியை உறுதியை செய்து 87 ரன்களில் அவுட்டானார். இறுதியில் பாண்டியா 9*, ஜடேஜா 12* ரன்கள் எடுத்த உதவியுடன் 38.4 ஓவரில் 251-6 ரன்கள் எடுத்த இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதனால் 1 – 0* (3) என்ற கணக்கில் இந்தத் தொடரிலும் இந்தியா முன்னிலை பெற்று அசத்தியுள்ளது.

இதையும் படிங்க: 10 இன்னிங்ஸ்களில் ஒருமுறை கூட 20 ரன்களை அடிக்கல.. ரோஹித்தை தொடரும் சோகம் – விவரம் இதோ

இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக சாகிப் மஹ்மூத், அடில் ரசித் 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. குறிப்பாக நாக்பூரில் வரலாற்றில் முதல் பேட்டிங்கை (3) விட சேசிங் செய்த அணிகளே (6) அதிகம் வென்றுள்ளன. அதை சரியாக கணக்கிடாத இங்கிலாந்து 2023 உலகக் கோப்பைக்கு பின் முதலில் பேட்டிங் செய்த 9 போட்டிகளில் 8வது தோல்வியை பதிவு செய்துள்ளது.

- Advertisement -