நான் இன்னும் முடிந்துபோகவில்லை, போட்டு தாக்கிய டிகே – வாய்ப்பு கொடுப்பாரா கேப்டன் ரோஹித் சர்மா

- Advertisement -

மிகுந்த பரபரப்புடன் நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடரில் மார்ச் 5-ஆம் தேதியன்று நடந்த 13-ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய ராஜஸ்தானுக்கு இளம் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 4 ரன்களில் அவுட்டாகி நடையை கட்டினார். இருப்பினும் அடுத்து களமிறங்கிய தேவ்துட் படிக்கள் 29 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் உட்பட 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் 8 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளிக்க 86/3 என மிடில் ஆர்டரில் ராஜஸ்தான் தடுமாற்றத்தை பெற்றது.

RR vs RCB Hetmayar Buttler

- Advertisement -

கலக்கிய பட்லர், திணறிய பெங்களூரு:
அப்போது களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் சிம்ரோன் ஹெட்மையர் மறுபுறம் தொடர்ந்து விளையாடிக்கொண்டிருந்த மற்றொரு தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் உடன் இணைந்து கடைசி நேரத்தில் அதிரடியான ரன் குவிப்பில் ஈடுபட்டார். கடைசி நேரத்தில் பெங்களூரு பந்துவீச்சாளர்களை பந்தாடிய இந்த ஜோடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் தொல்லை கொடுத்தது. இதில் ஹெட்மயர் 31 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் உட்பட 42* ரன்கள் குவிக்க அவருடன் முதல் ஓவரில் இருந்தே சிறப்பாக பேட்டிங் செய்த ஜோஸ் பட்லர் 47 பந்துகளில் 6 சிக்சர் உட்பட 70* ரன்கள் எடுத்தார். இவர்களின் பொறுப்பான ஆட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழந்த ராஜஸ்தான் 169 ரன்கள் எடுத்தது.

அதை தொடர்ந்து 170 என்ற இலக்கை துரத்திய பெங்களூருவுக்கு தொடக்க வீரர்கள் கேப்டன் டு பிளேஸிஸ் மற்றும் இளம் வீரர் அனுஜ் ராவத் ஆகியோர் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அபாரமான தொடக்கம் கொடுத்தனர். இதில் 20 பந்துகளில் 5 பவுண்டரி உட்பட கேப்டன் டு பிளேஸிஸ் 29 ரன்களிலும் 25 பந்துகளில் 4 பவுண்டரி உட்பட 26 ரன்களில் அனுஜ் ராவத்தும் அவுட்டானார்கள். ஆனால் அதன்பின் வந்த நட்சத்திரம் விராட் கோலி 5 ரன்களில் ரன் அவுட்டாக அடுத்து வந்த டேவிட் வில்லி டக் அவுட்டாகி நடையை கட்டினார். போதாக்குறைக்கு அடுத்து வந்த ரூதர்போர்ட் 5 ரன்களில் அவுட்டானதால் திடீரென 87/5 தடுமாறிய பெங்களூருவின் எளிதான வெற்றி கேள்விக்குறியானது.

Dinesh Karthik Rawat

பட்டைய கிளப்பிய தினேஷ் கார்த்திக்:
அந்த மோசமான தருணத்தில் களமிறங்கிய இளம் வீரர் சபாஷ் அகமது உடன் ஜோடி சேர்ந்த தமிழகத்தின் அனுபவ வீரர் தினேஷ் கார்த்திக் விக்கெட் விழுந்ததை பற்றி கவலைப்படாமல் அதிரடியான ரன் குவிப்பில் ஈடுபட்டார். அவருக்கு உறுதுணையாக நின்ற சபாஷ் அஹமத் அபாரமாக பேட்டிங் செய்து வெறும் 26 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 3 சிக்சர்கள் உட்பட 45 ரன்கள் எடுத்து முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தார். அதனால் திடீரென மீண்டும் போட்டியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் தைரியமாக நின்ற தினேஷ் கார்த்திக் முக்கியமான 18-வது ஓவரில் 2 பவுண்டரிகளை பறக்க விட்டு வெற்றியை உறுதி செய்தார்.

- Advertisement -

கடைசி வரை அவுட்டாகாமல் ராஜஸ்தானுக்கு தொல்லை கொடுத்த அவர் 23 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் உட்பட 44* ரன்களை 191.30 என்ற மிகச் சிறப்பான ஸ்ட்ரைக் ரேட் விதத்தில் விளாசினார். அவரின் அதிரடியால் தப்பிய பெங்களூரு 19.1 ஓவரில் 173/6 ரன்களை எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக டிரென்ட் போல்ட் மற்றும் சகால் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.

RR vs RCB DK

இன்னும் பினிஷ் ஆகல:
இந்த வெற்றியால் இந்த வருட ஐபிஎல் தொடரில் இதுவரை பங்கேற்ற 3 போட்டிகளில் 2-வது வெற்றியை பதிவு செய்துள்ள பெங்களூரு வெற்றி நடை போடத்துவங்கியுள்ளது. இந்த அற்புதமான வெற்றிக்கு 44* ரன்கள் விளாசி அபாரமான பினிஷிங் செய்த தினேஷ் கார்த்திக் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். தற்போது 36 வயதை கடந்துள்ள அவர் கடைசியாக கடந்த 2019-ஆம் ஆண்டு உலக கோப்பையில் விளையாடிய நிலையில் அதன்பின் அவருக்கு வாய்ப்பு கொடுக்காமல் இந்திய அணி நிர்வாகம் கழற்றி விட்டு வருகிறது.

- Advertisement -

குறிப்பாக இதுபோல ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் போதிலும் டி20 அணியில் கூட அவருக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அதன் காரணமாக கடந்த வருடம் துபாயில் நடந்த டி20 உலக கோப்பையில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. இருப்பினும் வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் விளையாடுவதே தமது லட்சியம் என தினேஷ் கார்த்திக் சமீபத்தில் தெரிவித்திருந்தார். அதற்கு ஏற்றார் போல் இந்திய அணியில் தமக்கு விளையாடும் தகுதி இன்னும் உள்ளது என்று ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் மீண்டும் தினேஷ் கார்த்திக் நிரூபித்துள்ளார்.

Dinesh Karthik 3

இது பற்றி நேற்றைய போட்டி முடிந்த பின் அவர் பேசியது பின்வருமாறு. “என்னை எனக்கு நானே நிரூபிக்க கடினமான முயற்சிகளை செய்து வருகிறேன். மேலும் கடந்த சில வருடங்களாக நான் சிறப்பாக விளையாடியிருக்க வேண்டும் என நினைத்தேன். நான் இன்னும் முடிந்து போகவில்லை என எனக்கு நானே கூறிக்கொண்டு கடந்த சில வருடங்களாக கடினமாக பயிற்சி செய்து வருகிறேன். எனக்கு ஒரு லட்சியம் உள்ளது, வித்தியாசமான ஏதாவது சாதிக்க விரும்புகிறேன்” என கூறினார்.

- Advertisement -

தினேஷ் கார்த்திக் செய்த அபார பினிஷிங் பற்றி கேப்டன் டுப்லஸ்ஸிஸ் பேசியது பின்வருமாறு. “டிகே மிகச்சிறந்த கிரிக்கெட்டை விளையாடுகிறார். என்னைப் பொறுத்தவரை அவர் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக விளையாட வேண்டும்” என பாராட்டினார்.

இதையும் படிங்க : இப்படி ஒரு தங்கத்தை எதிரணியிடம் விட்டுட்டீங்களே ! பெங்களூருவை கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்

தற்போதைய நிலைமையில் பெங்களூர் அணியில் இடம் வகிக்கும் விராட் கோலி இந்திய அணியின் கேப்டனாக இருந்தால் நிச்சயமாக வரும் டி20 உலகக்கோப்பையில் அவருக்கு இடம் கிடைத்திருக்கும். ஆனால் தற்போது இந்திய கேப்டன் பொறுப்பு ரோஹித் சர்மாவின் கையில் உள்ளதால் தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக்கு அவர் வாய்ப்பு கொடுப்பாரா என்பது அவரின் கையில் தான் உள்ளது.

Advertisement