இந்திய அணியுடன் விளையாடுவது தெருக்குழந்தைகளுடன் விளையாடுவதற்கு சமம்னு சொன்னேனா? பாக் வீரர் கொந்தளிப்பு

Iftikhar Ahmed
- Advertisement -

ஆசிய கண்டத்தின் பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட்டை விளையாட்டாக பார்க்காமல் அதை கௌரவமாக கருதி ஆக்ரோசத்துடன் வெற்றி பெறுவதற்காக போராடுவார்கள். அதனால் அவ்விரு அணிகள் மோதும் போட்டிகள் அனல் பறக்கும் என்பதாலேயே இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி உலக அளவில் பிரசித்தி பெற்றதாக இருந்து வருகிறது. போதாக்குறைக்கு தற்போது எல்லை பிரச்சினை காரணமாக இருதரப்பு தொடர்களில் தவிர்த்து விட்டு ஆசிய மற்றும் உலக கோப்பைகளில் மட்டுமே மோதுவதால் இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டிகள் உச்சகட்ட எதிர்பார்ப்பு மிகுந்ததாகவும் விலை மதிப்பு மிக்கதாகவும் உருவாகியுள்ளது.

அந்த வரிசையில் செப்டம்பர் 2ஆம் தேதி 2023 ஆசிய கோப்பை தொடரிலும் அக்டோபர் 14ஆம் தேதி 2023 உலகக்கோப்பை தொடரிலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுவது அனைவரிடமும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. அதில் வெற்றி வாகை சூடி தங்களது நாட்டுக்கு பெருமை சேர்ப்பதற்காக இரு அணிகளை சேர்ந்த வீரர்களும் இறுதிக்கட்டமாக தயாராகி வருகிறார்கள். அதற்கு நிகராக ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வெல்லப்போவது யார் என்ற விவாதங்களை வெறியுடன் காரசாரமாக பேசி வருகிறார்கள்.

- Advertisement -

போலியான செய்தி:
குறிப்பாக காலம் காலமாக தோற்று வருவதால் உலகக் கோப்பையை வெல்லாவிட்டாலும் பரவாயில்லை இம்முறை இந்தியாவை அவர்களுடைய சொந்த மண்ணில் வீழ்த்த வேண்டும் என்று பாகிஸ்தான் ரசிகர்கள் வெறித்தனமான கருத்துக்களுடன் சமூக வலைத்தளங்களில் காணப்படுகிறார்கள். அதன் உச்சமாக நவாஸ் எனும் பெயர் கொண்ட ஒரு ரசிகர் “இந்தியாவுக்கு எதிராக போட்டிகள் நடைபெறும் போதெல்லாம் அது சாதாரண தெருக்குழந்தைகளுக்கு எதிராக விளையாடுவது போன்ற உணர்வை எங்களுக்கு கொடுக்கும் என்று” பிரபல பாகிஸ்தான் வீரர் இப்திஃகார் அகமது சொன்னதாக ட்விட்டரில் பதிவிட்டார்.

அது சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் அமைந்ததால் உடனடியாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய 2 நாடுகளிலுமே ட்ரெண்டிங் ஆனது. ஆனால் உண்மையாகவே அப்படி சொல்லாத அந்த கருத்து போலியாக சமூக வலைதளங்களில் பரவியதை பார்த்து கோபமடைந்த இப்ஃதிகார் அகமது தாம் அவ்வாறு சொல்லவில்லை என்று ட்விட்டரில் தம்முடைய அதிகாரப்பூர்வ கணக்கை பயன்படுத்தி தெளிவுபடுத்தியுள்ளார்.

- Advertisement -

குறிப்பாக சர்வதேச அளவில் விளையாடும் எந்த வீரரும் இது போன்ற கருத்துக்களை வெளியிட மாட்டார்கள் என்று தெரிவிக்கும் அவர் பணத்திற்காக ப்ளூ டிக்கை பெற்று இப்படி போலியான கருத்தை பரப்பிய அந்த ரசிகரை தடை செய்யுமாறு ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்கிற்க்கு கோரிக்கையும் வைத்துள்ளார். இது பற்றி ட்விட்டரில் அவர் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “நான் இதுவரை சொல்லாத இந்த கருத்தை இப்போது தான் அறிந்தேன். உண்மையில் எந்த கிரிக்கெட் வீரரும் இப்படி ஒரு அறிக்கையை வெளியிட மாட்டார்கள். தயவு செய்து இது போன்ற தவறான செய்தியை பரப்புவதை நிறுத்துங்கள்”

“மேலும் இது போன்ற வெறுப்பை பரப்பும் நபர்கள் மீது புகாரை கொடுங்கள். எலான் மஸ்க் ப்ளூ டிக்கை சில மக்கள் தவறாக பயன்படுத்ததால் இந்த கணக்கை தடை செய்யவும்” என்று கூறியுள்ளார். இப்படி போலியான கணக்கை உருவாக்கி இந்தியாவை தரகுறைவாக பேசுவது பாகிஸ்தான் ரசிகர்களுக்கு புதிதல்ல என்றே சொல்லலாம். ஏனெனில் ஏற்கனவே 2022 டி20 உலகக் கோப்பையில் விராட் கோலி ஃப்ரீ ஹிட் முறையில் அவுட்டாகியும் விதிமுறைகளை மீறி ரன்களை எடுத்ததற்காக பிசிசிஐக்கு எதிராக ஐசிசி எதுவும் பேசாது என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹுசைன் சொன்னதாக பாகிஸ்தான் ரசிகர்கள் போலியான செய்தியை பரப்பினர்.

இதையும் படிங்க:IND vs IRE : அயர்லாந்து சவாலில் வெல்லுமா இந்திய படை – டப்லின் மைதானம் எப்படி? வரலாற்று புள்ளிவிவரம் பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

ஆனால் தாம் அப்படி சொல்லவில்லை தயவு செய்து அதை டெலிட் செய்யுங்கள் என்று பதிவிட்டு நாசர் ஹுசைன் பாகிஸ்தான் ரசிகர்களின் முகத்திரையை கிழித்தார். அதே போல சமீபத்தில் 2023 வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கோப்பை பாகிஸ்தான் வென்றதற்காக இர்பான் பதான் பெயரில் அந்நாட்டு ரசிகர்கள் போலியான கணக்கை உருவாக்கி தங்களுக்கு தங்களே வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement