2023 உ.கோ : சென்னையில் இந்தியாவின் துவக்க போட்டி, பாகிஸ்தானுடன் மோதல் எப்போது? தேதி, மைதானங்கள் இதோ

IND vs PAK Babar Azam Rohit Sharma
- Advertisement -

ஐசிசி உலகக்கோப்பை 2023 தொடர் வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் கோலாகலமாக நடைபெறுகிறது. என்ன தான் டி20 உலக கோப்பை மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் வந்தாலும் கிரிக்கெட்டின் உண்மையான சாம்பியனை 50 ஓவர் போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடர் தான் தீர்மானிக்கிறது. இதற்கு முன் கடந்த 1987 உலக கோப்பையை பாகிஸ்தானுடன் இணைந்து நடத்திய இந்தியா மீண்டும் 1996இல் இலங்கையுடன் சேர்ந்து நடத்தியது. அதே போல் 2011இல் வங்கதேசம், இலங்கை ஆகிய நாடுகளுடன் இணைந்து நடத்திய இந்தியா வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு உலகக் கோப்பையை முற்றிலும் தங்களது நாட்டில் இம்முறை தான் நடத்துகிறது.

worldcup

- Advertisement -

அதனால் இந்தியா மட்டுமல்லாது நட்சத்திர வெளிநாட்டு வீரர்கள் அடங்கிய இதர அணிகள் பங்கேற்கும் அனைத்து உலகக்கோப்பை போட்டிகளையும் முழுமையாக நேரில் காண்பதற்கான வாய்ப்பு இந்திய ரசிகர்களுக்கு கிடைத்துள்ளது. அதை விட பொதுவாகவே சொந்த மண்ணில் எதிரணிகளை தெறிக்க விட்டு மிகச் சிறப்பாக செயல்படும் இந்தியா 2011இல் எம்எஸ் தோனி தலைமையில் கோப்பையை வென்றது போல இம்முறை சொந்த மண் சாதகத்தை பயன்படுத்தி சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் சாம்பியன் பட்டம் வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் தொடர்ந்து சந்தித்து வரும் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தேதி, மைதானங்கள்:
அதற்கு போட்டியாக நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஏற்கனவே 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற அணிகள் உட்பட மொத்தம் உலகின் எஞ்சிய டாப் 9 அணிகள் இந்தியாவுக்கு சவாலை கொடுக்க உள்ளன. இந்நிலையில் வரும் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி 1,10,000 ரசிகர்கள் அமரும் வகையில் குஜராத்தில் இருக்கும் அகமதாபாத் நகரில் கட்டமைக்கப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் 2023 உலகக்கோப்பை துவங்க உள்ளதாக பிரபல கிரிக்பஸ் இணையத்தில் செய்திகள் வெளியாகியுள்ளது.

Chepauk Chennai Cricket Stadium

அந்த துவக்க போட்டியில் கடந்த ஃபைனலில் மோதிய நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாட உள்ளன. அதே போல் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றை கடந்து வெற்றியாளரை தீர்மானிக்கும் மாபெரும் ஃபைனலும் அதே மைதானத்தில் வரும் நவம்பர் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. அத்துடன் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் போட்டியில் வெற்றிகரமான ஆஸ்திரேலியாவை தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இருக்கும் சேப்பாக்கத்தில் எதிர்கொள்ள உள்ளது தமிழக ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைக்கும் செய்தியாக அமைகிறது.

- Advertisement -

அவை அனைத்தையும் விட கிரிக்கெட்டின் பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் போட்டி வரும் அக்டோபர் 15ஆம் தேதி புதன்கிழமை உலகின் மிகப்பெரிய அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் என்று தெரிய வருகிறது. முன்னதாக தங்கள் நாட்டில் நடைபெறும் ஆசிய கோப்பைக்கு வராமல் போனால் உங்கள் நாட்டில் நடைபெறும் உலக கோப்பைக்கு வர மாட்டோம் என்று அடம் பிடித்து வந்த பாகிஸ்தான் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டும் ஐசிசி கொடுத்த அழுத்தத்தாலும் இந்தியாவுக்கு வந்து விளையாடுவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

IND vs PAK Babar Azam Rohit Sharma

அந்த வகையில் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய தென் மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களில் பாகிஸ்தான் நடைபெறும் போட்டிகள் நடைபெற உள்ளதாகவும் தெரிய வருகிறது. அதிலும் குறிப்பாக 1999 டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் தோல்வியை தாண்டி பாராட்டிய ரசிகர்களைக் கொண்ட சென்னையில் பாகிஸ்தான் பங்கேற்கும் பெரும்பாலான லீக் போட்டிகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் 2011 உலகக்கோப்பை ஃபைனலை நடத்திய மும்பை வான்கடே மைதானத்துக்கு இம்முறை ஒரு அரையிறுதியை ஒதுக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.

இதையும் படிங்க:CSK vs DC : ஆரம்பத்திலேயே டெல்லியை முடித்த தோனியின் அனுபவம் – புள்ளிபட்டியலில் சிஎஸ்கே முன்னேற்றம், பிளே ஆஃப் உறுதியானதா?

மொத்தத்தில் கொல்கத்தா, டெல்லி, இந்தூர், தரம்சாலா, கௌஹாத்தி, ராஜ்கோட், ராய்ப்பூர், மும்பை, சென்னை, பெங்களூரு, அகமதாபாத், ஹைதராபாத் ஆகிய நகரங்களில் இந்த உலகக் கோப்பையின் 48 போட்டிகள் நடைபெறுகின்றன. இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் முழு அட்டவணை ஐபிஎல் முடிந்ததும் அதிகாரப்பூர்வமாக வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement