உலக கோப்பை 2023 : முழு அட்டவணையை அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஐசிசி – இந்தியாவின் முழு அட்டவணை இதோ

- Advertisement -

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ஐசிசி உலக கோப்பை 2023 தொடர் வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் கோலாகலமாக நடைபெறுகிறது. என்னதான் டி20 உலக கோப்பை மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் வந்தாலும் சர்வதேச கிரிக்கெட்டின் உண்மையான சாம்பியனை தீர்மானிக்கும் இந்த 50 ஓவர் போட்டிகளை கொண்ட தொடர் ஐபிஎல் போன்ற எத்தனை டி20 தொடர்கள் வந்தாலும் தனக்கென்று தனித்துவமான தரத்தையும் ரசிகர்களிடம் மவுசையும் கொண்டுள்ளது. இதற்கு முன் 1987, 2011 ஆகிய வருடங்களில் இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளுடன் இணைந்து நடத்திய இந்தியா வரலாற்றில் முதல் முறையாக இந்த உலகக் கோப்பையை முழுக்க முழுக்க தங்களது நாட்டிலேயே நடத்த உள்ளது ஸ்பெஷலான அம்சமாகும்.

எனவே 2011இல் எம்எஸ் தோனி தலைமையில் 28 வருடங்கள் கழித்து கோப்பையை வென்றது போல சொந்த மண்ணில் எப்போதுமே வலுவான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் இந்தியா இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி சாம்பியன் பட்டம் வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தோல்விகளை நிறுத்துமா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அதற்கு சவாலாக அதிரடியாக விளையாடும் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக ஜொலிக்கும் ஆஸ்திரேலியா, கருப்பு குதிரையாக செயல்படும் நியூசிலாந்து போன்ற அணிகள் இந்தியாவுக்கு சவாலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

அட்டவணை வெளியீடு:
இந்த உலகக் கோப்பையில் இந்தியா உள்ளிட்ட 8 அணிகள் ஏற்கனவே உலகக்கோப்பை சூப்பர் லீக் தொடரின் வாயிலாக நேரடியாக தேர்வாகியுள்ளன. எஞ்சிய 2 அணிகளை தீர்மானிப்பதற்காக தற்போது ஜிம்பாப்வே நாட்டில் குவாலிபயர் தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த உலகக் கோப்பைக்கான முழுமையான அட்டவணையை ஐசிசி மற்றும் பிசிசிஐ இன்று மும்பையில் சிறப்பு நிகழ்ச்சியில் வெளியிட்டன. அதன்படி வரும் அக்டோபர் 5ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் கோலாகலமாக துவங்கும் இத்தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

அதே போல தொடரை நடத்தும் இந்தியா தன்னுடைய முதல் போட்டியில் வரும் அக்டோபர் 8ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இருக்கும் சேப்பாக்கத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. அத்துடன் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் போட்டி அக்டோபர் 15ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெறுகிறது. அந்த வகையில் மொத்தம் 46 நாட்கள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இருக்கும் 10 மைதானங்களில் நடைபெறும் இத்தொடரின் லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒருமுறை மோத வேண்டும்.

- Advertisement -

அதில் புள்ளி பட்டியலில் டாப் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறும். அதைத்தொடர்ந்து வரும் நவம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் மும்பை வான்கடே மற்றும் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் அரையிறுதி போட்டிகளில் வெல்லும் அணிகள் நவம்பர் 19ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெறும் மாபெரும் இறுதி போட்டியில் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்த உள்ளன. மேலும் பகல் போட்டிகள் காலை 10.30 மணிக்கும் பகலிரவு போட்டிகள் மதியம் 2 மணிக்கும் துவங்கும் நிலையில் நாக் அவுட் போட்டிகளுக்கு ரிசர்வ் நாள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் சென்னையில் இந்தியா – ஆஸ்திரேலியா, நியூசிலாந்து – வங்கதேசம், நியூசிலாந்து – ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் – தென்னாபிரிக்கா ஆகிய 5 போட்டிகள் நடைபெறுகின்றன. அத்துடன் கௌகாத்தி, ஹைதராபாத், திருவனந்தபுரம் ஆகிய மைதானங்களில் செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 3 வரை பயிற்சி போட்டிகளும் நடைபெற உள்ளன.

இதையும் படிங்க:2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான அட்டவணை இன்று வெளியாகிறது – முதல் போட்டி யார் யாருக்கு தெரியுமா?

இந்த உலக கோப்பையில் பங்கேற்கும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியின் அட்டவணை இதோ:
1. அக்டோபர் 8 : இந்தியா – ஆஸ்திரேலியா, சென்னை
2. அக்டோபர் 11 : இந்தியா ஆப்கானிஸ்தான், டெல்லி
3. அக்டோபர் 15 : இந்தியா – பாகிஸ்தான், அகமதாபாத்
4. அக்டோபர் 19 : இந்தியா – வங்கதேசம், புனே
5. அக்டோபர் 22 : இந்தியா – நியூசிலாந்து, தரம்சாலா
6. அக்டோபர் 29 : இந்தியா – இங்கிலாந்து, லக்னோ
7. நவம்பர் 2 : இந்தியா – குவாலிபயர் 2 அணி, மும்பை
8. நவம்பர் 5 : இந்தியா – தென்னாப்பிரிக்கா, கொல்கத்தா
9. நவம்பர் 11 : இந்தியா – குவாலிபயர் 1 அணி, பெங்களூரு

Advertisement