இந்தியாவின் தலையீடு அம்பலமானதா? 2023 உ.கோ நடைபெற்ற 5 மைதானங்களுக்கு ரேட்டிங் வழங்கிய ஐசிசி

Icc rating
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிப்பதற்காக இந்தியாவில் நடைபெற்ற ஐசிசி 2023 உலகக் கோப்பை கோலாகலமாக நிறைவு பெற்றது. அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை நடைபெற்ற அத்தொடரில் கோப்பையை வெல்வதற்காக உலகின் டாப் 10 கிரிக்கெட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா லீக் மற்றும் செமி ஃபைனலில் தொடர்ந்து 10 வெற்றிகளை பதிவு செய்து எதிரணிகளை தெறிக்க விட்டது.

ஆனால் அகமதாபாத் நகரில் நடைபெற்ற மாபெரும் இறுதிப் போட்டியில் 240 ரன்கள் மட்டுமே எடுத்து பேட்டிங்கில் சொதப்பிய இந்தியாவை தோற்கடித்த ஆஸ்திரேலியா 5வது முறையாக கோப்பையை தட்டி சென்று உலகின் புதிய சாம்பியனாக சாதனை படைத்தது. மறுபுறம் வழக்கம் போல நாக் அவுட்டில் சொதப்பிய இந்தியா 2011 போல சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் பொன்னான வாய்ப்பை கோட்டை விட்டது ரசிகர்களின் நெஞ்சங்களை உடைத்தது.

- Advertisement -

ஐசிசி தண்டனை:
முன்னதாக அனைத்து வீரர்களும் உச்சகட்ட ஃபார்மில் இருந்த நிலையில் இந்தியா தோல்வியை சந்திப்பதற்கு ஃபைனல் நடைபெற்ற அகமதாபாத் மைதானமே காரணம் என்று ஹர்பஜன் சிங் விமர்சித்திருந்தார். மேலும் இந்தியா தங்களுக்கு சாதகமாக மைதானத்தை அமைத்ததே கடைசியில் அவர்களுக்கு தோல்வியை கொடுத்ததாக ப்ரெட் லீ, ரிக்கி பாண்டிங் போன்ற ஆஸ்திரேலிய முன்னாள் ஜாம்பவான்களும் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்கள்.

இந்நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய மாபெரும் இறுதிப் போட்டி நடைபெற்ற அகமதாபாத் மைதானத்தில் இருந்த பிட்ச் பேட்டிங், பவுலிங்க்கு சமமாக இல்லாமல் மிகவும் சராசரியாக இருந்ததாக ஐசிசி ரேட்டிங் வழங்கியுள்ளது. அதே போல ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதிய செமி ஃபைனல் நடைபெற்ற கொல்கத்தா பிட்ச் சராசரியாக இருந்ததாக ஐசிசி ரேட்டிங் கொடுத்துள்ளது.

- Advertisement -

குறிப்பாக ஃபைனல் பிட்ச் சுமாராக இருந்ததாக அப்போட்டியின் நடுவர் மற்றும் முன்னாள் ஜிம்பாப்வே வீரர் ஆண்டி ஃபைகிராப்ட் அவர்களும் செமி ஃபைனல் நடைபெற்ற பிட்ச் சுமாராக இருந்ததாக அப்போட்டியின் நடுவர் மற்றும் முன்னாள் இந்திய வீரர் ஜவகர் ஸ்ரீநாத் ஆகியோர் இந்த ரேட்டிங்கை கொடுக்குமாறு ஐசிசிக்கு பரிந்துரைத்துள்ளார்கள். அதே சமயம் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய செமி ஃபைனல் நடைபெற்ற மும்பை வான்கடே பிட்ச் நன்றாக இருந்ததாக ரேட்டிங் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான அசத்தல் ஆட்டம். கில் கிறிஸ்டின் சாதனையை சமன் செய்த – ஜாஸ் பட்லர்

ஆனால் இந்தியா – தென்னாப்பிரிக்கா மோதிய கொல்கத்தா, இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதிய லக்னோ, இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிய அகமதாபாத், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதிய சென்னை பிட்ச்களும் சராசரியாக இருந்ததாக ஐசிசி ரேட்டிங் வழங்கி தண்டனையை கொடுத்துள்ளது. மொத்தத்தில் உலகக்கோப்பை பிட்ச்களை தயாரிப்பதில் இந்தியா தலையிட்டதாக எழுந்த விமர்சனங்கள் ஐசிசியின் இந்த அறிவிப்பால் உண்மை என்று அம்பலமானதா? என கேள்வி எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement