ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவில் துவங்கி வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நிறைவு பெற்றது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்ற அந்தத் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 17 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டம் வென்றது. குறிப்பாக இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வரலாறு படைத்தது.
முன்னதாக கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் நோக்கத்தில் அமெரிக்காவில் முதல் முறையாக அந்த டி20 உலகக் கோப்பையின் ஆரம்பகட்ட போட்டிகள் நடைபெற்றன. ஆனால் அமெரிக்காவின் நியூயார்க் மைதானத்தின் பிட்ச் முழுவதுமாக பவுலர்களுக்கு சாதகமாக இருந்தது. அதனால் இந்தியா உட்பட பெரும்பாலான அணிகள் 120 ரன்களை தாண்டுவதற்கே திண்டாடின.
நியாயமில்லாத பிட்ச்:
மேலும் பாகிஸ்தானுக்கு எதிராக வெறும் 119 ரன்களை கட்டுப்படுத்தி இந்தியா வென்றது போன்ற முடிவுகளே அதிகமாக கிடைத்தது. அதை விட தென்னாபிரிக்காவுக்கு எதிராக ட்ரினிடாட் நகரில் பேட்டிங்க்கு சவாலான பிட்ச்சில் நடைபெற்ற செமி ஃபைனலில் ஆப்கானிஸ்தான் வெறும் 56 ரன்கள் ஆல் அவுட்டாகி தோல்வியை சந்தித்தது. அதனால் அப்போட்டியின் பிட்ச் பேட்டிங், பவுலிங் ஆகியவற்றுக்கு சமமாக நியாயமாக இருக்கவில்லை என்று ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளர் ஜோனதன் ட்ராட் கூறியிருந்தார்.
அத்துடன் தங்களுடைய தோல்விக்கு ஐசிசி தான் காரணம் என்றும் அவர் கடுமையாக விமர்சித்தார். இந்நிலையில் 2024 டி20 உலகக் கோப்பை மைதானங்களின் பிட்ச் ரேட்டிங்கை ஐசிசி அறிவித்துள்ளது. அதில் ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதிய ட்ரினிடாட் செமி ஃபைனல் பிட்ச்சுக்கு திருப்தியற்றது என்ற ரேட்டிங்கை ஐசிசி வழங்கியுள்ளது.
ஐசிசி ரேட்டிங்:
அதாவது ட்ரினிடாட் பிட்ச் விளையாடுவதற்கு திருப்திகரமாக இல்லை என்பதை ஐசிசியே ஒப்புக் கொண்டுள்ளது. அதனால் ஜோனதன் ட்ராட் சொன்னது போல ட்ரினிடாட் பிட்ச் நியாயமாக இல்லை என்பதை ஐசிசி ரேட்டிங் உண்மையாக்கியுள்ளது. இது போக இலங்கை – தென்னாபிரிக்கா, இந்தியா – அயர்லாந்து அணிகள் மோதிய நியூயார்க் பிட்ச் திருப்தியற்றதாக இருந்ததாக ஐசிசி ரேட்டிங் வழியுள்ளது.
இதையும் படிங்க: மும்பை அணியில் இருந்து ரோஹித் சர்மா வெளியேறாமல் இருக்க இதை செய்தால் முடியும் – நிர்வாகத்தின் முடிவு என்ன?
இருப்பினும் இந்தியா – பாகிஸ்தான் மோதிய போட்டியின் பிட்ச் திருப்திகரமாக இருந்ததாக ஐசிசி கூறியுள்ளது. இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் புதிய ஃபைனல் பிட்ச் மிகவும் நன்று (வெரி குட்) என்ற ரேட்டிங்கை ஐசிசி கொடுத்துள்ளது. மொத்தத்தில் 2024 டி20 உலகக் கோப்பையில் முடிவு கிடைத்த 52 போட்டிகளில் 31 போட்டிகளின் பிட்ச் திருப்திகரமானது, 3 திருப்தியற்றது, 18 மிகவும் நன்று என்ற ரேட்டிங்கை ஐசிசி கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.