IND vs WI : 200வது போட்டியில் தோல்வியுடன் இதையும் பரிசா வெச்சுக்கோங்க – இந்தியாவுக்கு ஐசிசி கொடுத்த தண்டனை

Pandya
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை வென்ற இந்திய அடுத்ததாக 2024 டி20 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட சீனியர்கள் இல்லாத நிலைமையில் ஹர்திக் பாண்டியா தலைமையில் முழுவதுமாக இளம் வீரர்களுடன் இத்தொடரில் விளையாடி வரும் இந்தியா ஆகஸ்ட் 3ஆம் தேதி ட்ரினிடாட் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் போராடி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் ரோவ்மன் போவல் 48 ரன்களும் நிக்கோலஸ் பூரான் 41 ரன்களும் எடுத்த உதவியுடன் 20 ஓவர்களில் 149/6 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக சஹால், அர்ஷிதீப் சிங் தலா 2 விக்கெட்களை எடுத்தனர். அதைத்தொடர்ந்து 150 ரன்கள் துரத்திய இந்தியா சுலபமாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும் சவாலான பிட்ச்சில் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 20 ஓவர்களில் 145/9 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

ஐசிசி அதிரடி:
அதிகபட்சமாக திலக் வர்மா தன்னுடைய அறிமுக போட்டியில் 39 (22) ரன்கள் எடுக்க வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக ஜேசன் ஹோல்டர், ஓபேத் மெக்காய், ரோமரியா செபார்ட் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். அந்த வெற்றியால் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் சந்தித்த தோல்விக்கு இந்தியாவுக்கு பதிலடி கொடுத்துள்ள வெஸ்ட் இண்டீஸ் டி20 கிரிக்கெட்டில் நாங்கள் இன்னும் சாய்ந்து விடவில்லை என்பதை நிரூபித்தது. மறுபுறம் தன்னுடைய 200வது போட்டியில் களமிறங்கி பாகிஸ்தானின் உலக சாதனையை சமன் செய்த இந்தியா பேட்டிங்கில் சொதப்பி தோற்றது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

இந்நிலையில் இந்த போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட 1 ஓவர் மெதுவாக பந்து வீசியதால் இந்தியாவுக்கு போட்டி சம்பளத்திலிருந்து 5% அபராதமாக விதிக்கப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது. அதாவது 2.22 அடிப்படை விதிமுறைப்படி டி20 கிரிக்கெட்டில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை தாண்டி வீசும் அணிகளுக்கு ஒவ்வொரு ஓவர்களுக்கும் தலா 5% போட்டி சம்பளத்திலிருந்து அபராதமாக விதிக்கப்படுவது வழக்கமாகும். அதன் காரணமாக இந்த தண்டனையை இந்தியாவுக்கு கொடுத்துள்ள ஐசிசி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 10% அபராதம் விதிக்கப்படுவதாகவும் கூறியுள்ளது.

- Advertisement -

ஏனெனில் இந்தியாவையும் மிஞ்சி நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை தாண்டி 2 ஓவர்கள் மெதுவாக வீசியதால் வெஸ்ட் இண்டீஸ்க்கு 10% அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஐசிசி தெளிவுபடுத்தியுள்ளது. இந்த தண்டனைகளை இந்திய கேப்டன் ஹரிதிக் பாண்டியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரோவ்மன் போவல் ஆகியோர் ஒப்புக்கொண்டு ஏற்றுக் கொண்டுள்ளதால் எந்த விசாரணையும் நடத்தப்படாது என்று ஐசிசி கூறியுள்ளது. இதைத்தொடர்ந்து இவ்விரு அணிகள் மோதும் என் தொடரின் 2வது டி20 போட்டி ஆகஸ்ட் 6ஆம் தேதி நடைபெற உள்ளது.

அந்த போட்டியிலும் வென்று 2 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெறுவதற்கு வெஸ்ட் இண்டீஸ் வலைப்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மறுபுறம் முதல் போட்டியில் அசந்த நேரம் பார்த்து அடித்த வெஸ்ட் இண்டிஸ்க்கு 2வது போட்டியில் வென்று பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்ய இந்தியா போராட தயாராகியுள்ளது. மேலும் தோல்வியை சந்தித்த காரணத்தால் அந்த போட்டிக்கான இந்திய விளையாடும் 11 பேர் அணியில் சில மாற்றங்கள் நிகழும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:IND vs WI : ஒரே ஓவரில் வீழ்ந்த இந்திய அணி. இந்த ஒரு ஓவர் தான் இந்திய அணியின் – தோல்விக்கு காரணம்

இருப்பினும் 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் பயணத்தில் இளம் வீரர்கள் சில தவறுகள் செய்வது சகஜமென முதல் போட்டியின் முடிவில் ஹர்திக் பாண்டியா தெரிவித்திருந்தார். அதனால் ஒருவேளை மீண்டும் அதே 11 பேர் அணியுடன் இந்தியா களமிறங்குவதற்கும் வாய்ப்புள்ளது என்றே சொல்லலாம். இதனால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அந்த போட்டி கயானாவில் இருக்கும் ப்ரோவிடன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement