
சார்ஜாவில் ஆப்கானிஸ்தான் – வங்கதேச அணிகள் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. அத்தொடரில் சிறப்பாக விளையாடிய வங்கதேசம் 3 – 0 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தானை ஒயிட்வாஷ் செய்து கோப்பையை வென்றது. அடுத்ததாக அபுதாபியில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3 – 0 என்ற கணக்கில் ஒய்ட்வாஷ் செய்த ஆப்கானிஸ்தான் கோப்பையை வென்று வங்கதேசத்துக்கு பதிலடி கொடுத்தது.
அத்தொடரின் கடைசிப் போட்டி அக்டோபர் 14ஆம் தேவையான நேற்று அபுதாபியில் நடைபெற்றது. அப்போட்டியில் முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் 50 ஓவரில் 293/9 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக துவக்க வீரர் இப்ராஹிம் ஜாட்ரன் 7 பவுண்டரி 2 சிக்சருடன் 95 (111), முகமது நபி அதிரடியாக 62* (37), ரஹ்மதுல்லா குர்பாஸ் 42 (44) ரன்கள் எடுத்தார்.
வங்கதேசத்துக்கு அதிகபட்சமாக சாய்ஃப் ஹசன் 3 விக்கெட்டுகளை எடுத்தார். அடுத்து விளையாடிய வங்கதேசத்தை அபாரமாக பந்து வீசிய ஆப்கானிஸ்தான் வெறும் 93 ரன்களுக்கு சுருட்டி வீசியது. அதிகபட்சமாக சாய்ஃப் ஹசன் 43 ரன்கள் எடுத்த நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு அதிகபட்சமாக பிலால் சமி 5 விக்கெட்டுகள் எடுத்தார்.
அதனால் 200 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட்டில் வங்கதேசத்துக்கு எதிராக தங்களது பெரிய வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்தது. மறுபுறம் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக முதல் முறையாக 100 ரன்களுக்குள் அவுட்டாகி வங்கதேசம் மோசமான சாதனை படைத்தது. முன்னதாக இத்தொடரின் 2வது போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரர் இப்ராஹிம் 95 (140) ரன்களில் அவுட்டாகி சதத்தை நழுவ விட்டார்.
இருப்பினும் அதற்காக மனம் தளராத அவர் இப்போட்டியில் அபாரமாக விளையாடி சதத்தை நெருங்கினார். அப்போது பந்தை அருகிலேயே அடித்த அவர் சிங்கிள் எடுக்க முயற்சித்தார். அதற்குள் வங்கதேச வீரர் பந்தை எடுப்பதைப் பார்த்த எதிர்ப்புறமிருந்த ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன் மறுப்பு தெரிவித்தார். அதனால் மீண்டும் வெள்ளைக்கோட்டுக்கு செல்ல முயற்சித்த இப்ராஹிம் டைவ் அடித்தார்.
இதையும் படிங்க: பயந்தது போதும்.. பழைய காலத்து செலக்டர்ஸ் வேணாம்.. ரூல்ஸை இப்படி மாத்துங்க.. ரஹானே கோரிக்கை
அதற்குள் வங்கதேச வீரர் ஸ்டம்ப் மேலே பந்தை எறிந்ததால் 95 ரன்களில் ரன் அவுட்டான இப்ராஹிம் மீண்டும் சதத்தை நழுவ விட்டார். அப்படி அடுத்தடுத்தப் போட்டிகளில் வெறும் 5 ரன்களில் 2 சதங்களை நழுவ விட்டதால் கோபமடைந்த அவர் பவுண்டரி எல்லையில் தன்னுடைய பேட்டை அடித்து நொறுக்கும் வகையில் தூக்கி எறிந்தார். இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 90களில் பலமுறை அவுட்டானாதை அனைவரும் அறிவார்கள். அதே போல இவரும் அடுத்தடுத்த போட்டிகளில் 90களில் 2 சதத்தை நழுவ விட்டு பரிதாபத்தை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.