சச்சின், விராட், ரோஹித் வரிசையில் இந்திய பேட்டிங்கின் அடுத்த சூப்பர்ஸ்டார் அவர்தான் – ஹர்பஜன் சிங் பாராட்டு

Harbhajan
- Advertisement -

ஜிம்பாப்வேக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அபாரமாக செயல்பட்ட கேஎல் ராகுல் தலைமையிலான இளம் இந்திய அணி 3 – 0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் வெற்றியுடன் கோப்பையை முத்தமிட்டுள்ளது. தலைநகர் ஹராரேயில் ஆகஸ்ட் 18, 20 ஆகிய தேதிகளில் நடைபெற்ற முதலிரண்டு போட்டிகளில் அசத்தலாக செயல்பட்ட இந்தியா அடுத்தடுத்த வெற்றிகளை பதிவு செய்து முன்கூட்டியே கோப்பையை கைப்பற்றிய நிலையில் ஆகஸ்ட் 22ஆம் தேதியான நேற்று நடைபெற்ற கடைசி போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வென்றது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 289/9 ரன்களை சேர்த்தது.

Shuman Gill

- Advertisement -

தொடக்க வீரர்கள் கேப்டன் கேஎல் ராகுல் 40 ரன்களும் ஷிகர் தவான் 30 ரன்களும் எடுக்க அடுத்து களமிறங்கிய இஷான் கிசான் 50 ரன்கள் எடுத்தார். அவருடன் 140 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தலாக பேட்டிங் செய்த சுப்மன் கில் 15 பவுண்டரி 1 சிக்சருடன் முதல் சதத்தை விளாசி அதிகபட்சமாக 130 (97) ரன்கள் எடுத்தார். ஜிம்பாப்பே சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ப்ராட் எவன்ஸ் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அதை தொடர்ந்து 290 ரன்களை துரத்திய ஜிம்பாப்வேவுக்கு சீன் வில்லியம்ஸ் 45 ரன்கள் எடுத்தாலும் கயா 6, கேப்டன் சகப்வா 16 என முக்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார்.

அசத்திய கில்:
அதனால் 169/7 என திணறிய தனது அணிக்கு ப்ராட் எவன்ஸ் உடன் 8வது விக்கெட்டுக்கு 104 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றிக்கு போராடிய நம்பிக்கை நாயகன் சிகந்தர் ராசா 9 பவுண்டரி 3 சிக்சருடன் 115 (95) ரன்கள் குவித்து கடைசி நேரத்தில் ஆட்டமிழந்தார். அதனால் 49.3 ஓவரில் 276 ரன்களுக்கு ஜிம்பாப்வேவை சுருட்டிய இந்தியா திரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு 130 ரன்களும் கடைசி நேரத்தில் மிரட்டிய சிகந்தர் ராசா கொடுத்த கேட்ச்சை கச்சிதமாக பிடித்த சுப்மன் கில் ஆட்டநாயகன் விருதை வென்றார். மேலும் 82*, 33, 130 என இந்த தொடர் முழுவதும் கலக்கிய அவர் 5 கேட்ச்களையும் பிடித்ததால் தொடர்நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

Shubman Gill

அத்துடன் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரிலும் தொடர் நாயகன் விருதை வென்ற அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் 22 வயதுக்கு முன்பே வெளிநாடுகளில் 2 தொடர் நாயகன் விருதை வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். அத்துடன் நேற்றைய போட்டியில் 130 ரன்கள் குவித்த அவர் ஜிம்பாப்வே மண்ணில் இளம் வயதில் சதமடித்த இந்திய வீரர் என்ற ரோகித் சர்மாவின் சாதனையையும் அதிகபட்ச ஒருநாள் ஸ்கோர் பதிவு செய்த இந்திய வீரர் என்ற சச்சினின் சாதனையையும் முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

சச்சின் வரிசையில்:
கடந்த 2018இல் இந்தியா வென்ற ஐசிசி அண்டர்-19 உலகக்கோப்பையிலும் தொடர் நாயகன் விருதை வென்ற இவர் 2019 ஐபிஎல் தொடரின் சிறந்த இளம் வீரர் விருதையும் வென்று இந்தியாவுக்காக சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமாகி ஆரம்பத்தில் சுமாராக செயல்பட்டு காயத்தால் வெளியேறினார். இருப்பினும் 2021இல் பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வரலாற்று டெஸ்ட் வெற்றியை பதிவு செய்த இந்திய அணிக்கு 91 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய அவர் தற்போது ஒருநாள் கிரிக்கெட்டிலும் முத்திரை பதிக்க துவங்கியுள்ளார்.

Harbhajan

இதனால் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, ரோகித் சர்மா, தற்போது கேஎல் ராகுல் என இந்திய பேட்டிங் சூப்பர் ஸ்டார்களின் வரிசையில் வருங்கால ஸ்டாராக சுப்மன் கில் வருவார் என்று முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் கணித்துள்ளார். இது பற்றி இந்த போட்டிக்கு பின் கொடுத்த பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “அவர் நல்ல டெக்னிக் வைத்துள்ள வரிசைப்படுத்தப்பட்ட பேட்ஸ்மேன். நல்ல ஷாட்களை தேர்வு செய்வதில் அவர் சிறந்து விளங்குகிறார்.

- Advertisement -

அவருடைய பேட்டிங் தரத்தைப் பொருத்தவரை அவரை நான் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ராகுல் ஆகியோருடன் பட்டியலிடுவேன். அவர் பேட்டிங் செய்வதை பார்க்க நீங்கள் மிகவும் விரும்புவீர்கள்” “வெற்றி அடைய வேண்டும் என்ற பசியுடன் அவர் செயல்படுவது அவருடைய நல்ல குணமாகும். அணியில் சில பேட்ஸ்மென்கள் மட்டுமே ரன்களை அடிக்கவில்லை என்றால் நாம் சுமாராக செயல்படுகிறோம் என்று நினைப்பார்கள்.

இதையும் படிங்க : IND vs ZIM : வருங்கால பேட்டிங் நாயகனாக யாருமே செய்யாத சூப்பர் சாதனை படைத்த கில் – வெற்றியை நிர்ணயித்த கேட்ச் வீடியோ உள்ளே

அவரும் தாம் சுமாரான பார்மில் இருக்கும்போது அணியை தலைகுனிய வைப்பதாக நினைக்கிறார். அதுபோன்ற தரம் ஒரு சிலரிடம் மட்டுமே இருக்கும், அந்த தரம் சச்சின் டெண்டுல்கரிடம் இருந்தது” என்று கூறினார்.

Advertisement