IND vs ZIM : வருங்கால பேட்டிங் நாயகனாக யாருமே செய்யாத சூப்பர் சாதனை படைத்த கில் – வெற்றியை நிர்ணயித்த கேட்ச் வீடியோ உள்ளே

Shuman Gill
Advertisement

ஆகஸ்ட் 22ஆம் தேதியான நேற்று ஜிம்பாப்வேக்கு எதிராக நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா திரில் வெற்றி பெற்றது. ஆகஸ்ட் 18, 20 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இத்தொடரின் முதல் 2 போட்டிகளில் எளிதாக வென்ற இந்தியா ஏற்கனவே தொடரை கைப்பற்றிய நிலையில் நேற்று நடைபெற்ற சம்பிரதாய போட்டியில் முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 289/8 ரன்கள் சேர்த்தது. கேப்டன் கேஎல் ராகுல் 30 (46) ஷிகர் தவான் 40 (68) என தொடக்க வீரர்கள் 63 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கத்தை கொடுத்து ஆட்டமிழந்தார்கள்.

Shubman Gill IND vs ZIM

அதன்பின் 3-வது விக்கெட்டுக்கு சுப்மன் கில் உடன் இணைந்து 140 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை வலுப்படுத்திய இஷான் கிசான் 50 (61) ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த தீபக் ஹூடா 1, சஞ்சு சாம்சன் 15, அக்சர் பட்டேல் 1 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் செய்த ஜிம்பாப்வே 300 ரன்கள் தொட விடாமல் அசத்தியது. மறுபுறம் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்த சுப்மன் கில் 15 பவுண்டரி 1 சிக்சருடன் சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை அடித்து 130 (97) ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். ஜிம்பாப்வே சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ப்ராட் எவன்ஸ் 5 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

போராடிய ஜிம்பாப்வே:
அதை தொடர்ந்து 290 ரன்களை துரத்திய ஜிம்பாப்வேவுக்கு சீன் வில்லியம்ஸ் 45 (46) ரன்கள் தவிர கைடானோ 13, கயா 6, முன்யங்கோ 15, கேப்டன் சகப்வா 16, ரியன் புர்ள் 8 என முக்கிய வீரர்கள் அனைவரும் இந்தியாவின் தரமான பந்துவீச்சில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதனால் திணறிய அந்த அணிக்கு சமீபத்திய வங்கதேச தொடரில் தொடர் நாயகன் விருது வென்று முக்கிய பங்காற்றிய நம்பிக்கை நட்சத்திரம் சிகந்தர் ராசா 5வது இடத்தில் களமிறங்கி இந்திய பவுலர்களை வெளுத்து வாங்கினார்.

Sikandar Raza Shubman Gill

குறிப்பாக 8வது விக்கெட்டுக்கு ப்ராட் எவன்ஸ் உடன் 104 ரன்கள் பர்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவுக்கு அச்சுறுத்தலை கொடுத்த அவர் சதமடித்து வெற்றியின் விளிம்பு வரை அழைத்து வந்தார். இருப்பினும் கடைசி நேரத்தில் சிறப்பாக பந்து வீசிய இந்தியா எவன்ஸை 28 (36) ரன்களில் அவுட்டாக்கி 49வது ஓவரில் 9 பவுண்டரி 3 சிக்சருடன் சதமடித்து 115 (95) ரன்கள் குவித்து வெற்றிக்கு போராடிய சிக்கந்தர் ராசாவையும் அவுட் செய்தது.

- Advertisement -

அற்புதமான கேட்ச்:
அதனால் 49.3 ஓவரில் 276 ரன்களுக்கு ஜிம்பாப்வேயை சுருட்டிய இந்தியா 3 – 0 (3) என்ற கணக்கில் வைட்வாஷ் வெற்றியுடன் கோப்பையை வென்று இளம் வீரர்களுடன் மீண்டும் சாதித்துக் காட்டியுள்ளது. இருப்பினும் இந்த போட்டியில் போராடிய ஜிம்பாப்வே மற்றும் சிகந்தர் ராசாவை பாராட்டும் இந்திய ரசிகர்கள் அஜாக்கிரதையாக நடந்து கொண்ட இந்தியாவை கலாய்த்து வருகின்றனர். இரு அணிகளுமே சரி சமமாக போராடிய இந்த போட்டியின் வெற்றி சிக்கந்தர் ராசாவின் விக்கெட் தான் தீர்மானித்தது என்பதில் சந்தேகமில்லை.

மிரட்டலாக பேட்டிங் செய்த அவர் ஷார்துல் தாகூர் வீசிய 49வது ஓவரில் சிக்ஸர் அடிக்க முயன்ற போது அதை பவுண்டரி எல்லையின் அருகே இருந்த சுப்மன் கில் தரையோடு தரையாக தாவிப்பிடித்து அற்புதமான கேட்ச் பிடித்ததாலேயே இறுதியில் வெற்றி இந்தியாவின் பக்கம் வந்தது. அதனால் பேட்டிங்கிலும் 130 ரன்கள் குவித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய அவர் சந்தேகமின்றி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

- Advertisement -

வருங்கால சூப்பர்ஸ்டார்:
அத்துடன் ஜிம்பாப்வே மண்ணில் மிகவும் இளம் வயதில் சதமடித்த இந்திய வீரர் என்ற ரோகித் சர்மாவின் சாதனையையும் அதிகபட்ச ஒருநாள் ஸ்கோர் பதிவு செய்த இந்திய வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையையும் முறியடித்து புதிய சாதனை படைத்த அவர் இந்த தொடரின் 3 போட்டிகளில் 245 ரன்களை 122.50 என்ற அபாரமான சராசரி குவித்து வெற்றிக்கு பங்காற்றியதால் தொடர்நாயகன் விருதையும் வென்றார். முன்னதாக சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரிலும் 205 ரன்களை 102.5 என்ற சராசரியில் குவித்திருந்த அவர் தொடர் நாயகன் விருது வென்றார்.

இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் வெளிநாட்டு மண்ணில் 22 வயதுக்கு முன்பாக 2 தொடர் நாயகன் விருதுகளை வென்ற முதல் இந்திய வீரர் என்ற சூப்பர் சாதனையும் அவர் படைத்துள்ளார். இதற்கு முன் சச்சின் உட்பட வேறு எந்த இந்திய வீரரும் 22 வயதுக்கு முன்பாக வெளிநாடுகளில் 2 தொடர் நாயகன் விருதை வென்றதில்லை. கடந்த 2018 ஐசிசி அண்டர்-19 உலகக்கோப்பையை வென்று 2019இல் இந்தியாவுக்காக அறிமுகமான இவர் இதுவரை 9 ஒருநாள் போட்டிகளில் 499 ரன்களை குவித்துள்ளார்.

இதையும் படிங்க: வெற்றிக்கு தனியொருவனாக போராடிய ஜிம்பாப்வே நாயகன், சச்சினுக்கு நிகராக படைத்த அபார சாதனைகள் இதோ

இதனால் ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் 10 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற பெருமையும் பெற்றுள்ள அவரை சச்சின் டென்டுல்கர், விராட் கோலி ஆகியோர் வரிசையில் வருங்காலத்தில் இந்திய பேட்டிங் துறையின் முதுகெலும்பாக உருவெடுக்கப் போகிறார் என்று ரசிகர்கள் பாராட்டுகின்றனர்.

Advertisement