வெற்றிக்கு தனியொருவனாக போராடிய ஜிம்பாப்வே நாயகன், சச்சினுக்கு நிகராக படைத்த அபார சாதனைகள் இதோ

Sikandar Raza Shubman Gill
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் பங்கேற்று வந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்த ஜிம்பாப்வே தொடரை இழந்தது. அந்த நிலைமையில் ஆகஸ்ட் 22ஆம் தேதியான நேற்று நடைபெற்ற கடைசி போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 289/8 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கி 63 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த கேப்டன் கேஎல் ராகுல் 30 ரன்களிலும் ஷிகர் தவான் 40 ரன்களிலும் அவுட்டானார்கள்.

அடுத்து களமிறங்கிய சுப்மன் கில் மற்றும் இஷான் கிசான் ஆகியோர் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து 3-வது விக்கெட்டுக்கு 140 ரன்கள் அற்புதமான பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை வலுப்படுத்தினார்கள். 42 ஓவர்கள் வரை பேட்டிங் செய்த இந்த ஜோடியில் 50 (61) ரன்கள் எடுத்திருந்தபோது இஷன் கிஷன் ரன் அவுட்டாக அடுத்து வந்த தீபக் ஹூடா 1, சஞ்சு சாம்சன் 15, அக்சர் படேல் 1 என முக்கிய வீரர்களை சொற்ப ரன்களில் காலி செய்த ஜிம்பாவே 300 ரன்களை எட்டவிடாமல் மடக்கிப் பிடித்தது. இருப்பினும் மறுபுறம் சிறப்பாக செயல்பட்ட சுப்மன் கில் 15 பவுண்டரி 1 சிக்சருடன் தனது முதல் சதத்தை அடித்து 130 (97) ரன்கள் குவித்து அவுட்டானார்.

- Advertisement -

போராடிய சிக்கந்தர்:
ஜிம்பாப்வே சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ப்ராட் எவன்ஸ் 5 விக்கெட்டுகளை எடுத்தார். அதை தொடர்ந்து 290 ரன்களை துரத்திய அந்த அணிக்கு நம்பிக்கை நட்சத்திரம் சீன் வில்லியம்ஸ் 45 (46) ரன்கள் எடுத்தாலும் இன்னசென்ட் கயா 6, கைடானோ 13, முன்யங்கோ 15, சகப்வா 16, ரியன் புர்ள் 8 என முக்கிய வீரர்கள் இந்தியாவின் தரமான பந்துவீச்சில் சொற்ப ரன்களில் அவுட்டாகி கைவிட்டனர்.

அதனால் மீண்டும் படுதோல்வி உறுதியென்று எதிர்பார்க்கப்பட்ட அந்த அணிக்கு சமீபத்திய வங்கதேச ஒருநாள் மற்றும் டி20 தொடரில் வெற்றி பெற தொடர் நாயகன் விருதை வென்று முக்கிய பங்காற்றிய நம்பிக்கை நாயகன் சிகந்தர் ராசா மிடில் ஆர்டரில் களமிறங்கி கடைசி நேரத்தில் இந்திய பவுலர்கள் வெளுத்து வாங்கினார். அதிலும் டெயில் எண்டரான ப்ராட் எவன்ஸ் உடன் இணைந்து இந்தியாவுக்கு சிம்ம சொப்பனமாக மாறிய அவர் 8வது விக்கெட்டுக்கு 104 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சதத்தை விளாசி வெற்றியின் விளிம்பு வரை அழைத்து வந்தார்.

- Advertisement -

ஜிம்பாப்வே நாயகன்:
குறிப்பாக ஆவேஷ் கான் வீசிய 48வது ஓவரில் 4, 6, 1 என 11 ரன்கள் பறக்கவிட்ட போதிலும் அதே ஓவரில் கடைசி பந்தில் ப்ராட் எவன்ஸ் 28 ரன்களில் ஆட்டமிழக்க ஷார்துல் தாகூர் வீசிய அடுத்த ஓவரில் சிக்ஸர் அடிக்க முயன்ற அவர் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அத்தோடு அந்த அணியின் போராட்டமும் முடிந்தது போல் 49.3 ஓவரில் 276 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா 13 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. அதனால் 3 – 0 (3) என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்த இந்தியா கோப்பையை வென்று அசத்தியது.

இருப்பினும் 9 பவுண்டரி 3 சிக்சருடன் 115 (95) ரன்களை 121.05 என்ற அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் வெளுத்து வாங்கி வெற்றிக்காக கடுமையாக போராடிய சிகந்தர் ராசா ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறார். குறிப்பாக டாப் ஆர்டரில் யாரேனும் ஒரு பேட்ஸ்மென் 50 ரன்களை அடித்திருந்தால் அவரின் போராட்டம் வீணாகியிருக்காது என்று இந்திய ரசிகர்களே பரிதாபப்படுகிறார்கள். அத்துடன் கடைசிவரை முழுமூச்சுடன் போராடிய ஜிம்பாப்வேயும் இப்போட்டியில் வெற்றி பெற்றதற்கு சமம் என்றும் இந்திய ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

- Advertisement -

சச்சினுக்கு நிகராக:
முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு இதே மைதானத்தில் வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் முதல் 2 போட்டிகளில் இதேபோல் சேசிங் செய்யும்போது 5வது பேட்டிங் இடத்தில் களமிறங்கி அடுத்தடுத்த சதங்களை விளாசி வெற்றி பெற வைத்த அவர் இப்போட்டியிலும் 5வது இடத்தில் களமிறங்கி சதமடித்து வெற்றிக்காக போராடினார்.

1. இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு காலண்டர் வருடத்தில் சேசிங் செய்யும் போது 5வது இடத்தில் களமிறங்கி 3 சதங்களை அடித்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்குமுன் கடந்த 2010இல் இங்கிலாந்துக்காக இயன் மோர்கன் 2 சதங்கள் அடித்திருந்ததே முந்தைய சாதனையாக இருந்தது.

இதையும் படிங்க : IND vs ZIM : வெற்றி பெற்றாலும் ராகுலின் கேப்டன்ஷிப் மற்றும் பவுலர்களை விளாசும் இந்திய ரசிகர்கள்

2. அத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டில் சேசிங் செய்யும் போது ஒரே மாதத்தில் 3 சதங்களை அடித்த பேட்ஸ்மேன் என்ற இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையையும் அவர் சமன் செய்துள்ளார். இதற்குமுன் கடந்த 1998 ஏப்ரலில் சார்ஜாவில் நடைபெற்ற கொக்ககோலா கோப்பையில் இதேபோல் சச்சின் ஒரே மாதத்தில் 3 சதங்களை சேசிங் செய்யும்போது முதல் முறையாக அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement