IND vs ZIM : வெற்றி பெற்றாலும் ராகுலின் கேப்டன்ஷிப் மற்றும் பவுலர்களை விளாசும் இந்திய ரசிகர்கள்

IND vs ZIM Axar Patel
- Advertisement -

ஜிம்பாப்வேக்கு எதிராக பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் 2 போட்டிகளில் அபாரமாக செயல்பட்டு அடுத்தடுத்த வெற்றிகளுடன் கோப்பையை கைப்பற்றிய இந்தியா ஆகஸ்ட் 22ஆம் தேதியான நேற்று நடைபெற்ற கடைசி சம்பிரதாய போட்டியில் களமிறங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 289/8 ரன்கள் எடுத்தது. 63 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த தொடக்க வீரர்கள் கேப்டன் கேஎல் ராகுல் 30 (46) ரன்களிலும் ஷிகர் தவான் 40 (68) ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

அடுத்து களமிறங்கிய சுப்மன் கில் மற்றும் இஷான் கிசான் ஆகியோர் நங்கூரமாகவும் மிகச் சிறப்பாகவும் பேட்டிங் செய்து 3-வது விக்கெட்டுக்கு 140 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை பலப்படுத்திய போது இஷான் கிசான் 50 (61) ரன்களில் ரன் அவுட்டானார். அதை பயன்படுத்திய ஜிம்பாப்வே அடுத்து வந்த தீபக் ஹூடா 1 (3), சஞ்சு சாம்சன் 15 (13), அக்சர் படேல் 1 (4) என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை சொற்ப ரன்களில் அவுட் செய்து 300 ரன்களை அடிக்க விடாமல் மடக்கிப் பிடித்தது. மறுபுறம் 15 பவுண்டரி 1 சிக்சருடன் அபாரமாக பேட்டிங் செய்த சுப்மன் கில் தனது முதல் சதத்தை அடித்து 130 (97) ரன்கள் குவித்து அவுட்டானார்.

- Advertisement -

போராடிய ஜிம்பாப்வே:
ஜிம்பாப்வே சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ப்ராட் எவன்ஸ் 5 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து 290 ரன்களை துரத்திய அந்த அணிக்கு சீன் வில்லியம்ஸ் 45 (46) ரன்கள் எடுத்ததை தவிர இன்னசென்ட் கயா 6, கைடானோ 13, முன்யங்கோ 15, கேப்டன் சகப்வா 16, ரியன் புர்ள் 8 என முக்கிய வீரர்கள் அனைவரும் இந்தியாவின் தரமான பந்துவீச்சில் சீரான இடைவெளிகளில் சொற்ப ரன்களில் அவுட்டாகி சென்றனர். அதனால் மீண்டும் படு தோல்வி உறுதியென்று கருதப்பட்ட தனது அணிக்கு சமீபத்திய வங்கதேச தொடரில் வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய சிகந்தர் ராசா மிடில் ஆர்டரில் களமிறங்கி அதிரடியாக பேட்டிங் செய்து வெற்றிக்கு போராடினார்.

ப்ராட் எவன்ஸ் உடன் இணைந்து இந்திய பவுலர்களை வெளுத்து வாங்கிய அவர் ஒரு கட்டத்தில் இந்தியாவுக்கு சிம்ம சொப்பனமாக மாறி சதமடித்து 8வது விக்கெட்டுக்கு 104 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து முழுமூச்சுடன் வெற்றிக்கு போராடினார். ஆனால் கடைசி நேரத்தில் சுதாரித்து பந்துவீசிய இந்திய பவுலர்கள் 9 பவுண்டரி 3 சிக்சருடன் 115 (95) ரன்களில் அவரை அவுட் செய்து 49.3 ஓவரில் ஜிம்பாப்வேவை 276 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கி 13 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றுக் கொடுத்தனர்.

- Advertisement -

வெற்றியாளர் ஜிம்பாப்வே:
இந்த வெற்றியால் 3 – 0 (3) என்ற கணக்கில் வைட்வாஷ் வெற்றியுடன் இந்தியா கோப்பையை வென்றது. இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய சுப்மன் கில் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை வென்றார். இருப்பினும் இந்த தொடரின் முதல் 2 போட்டிகளில் சொற்ப ரன்களுக்கு அவுட்டாகி சொந்த மண்ணில் படுதோல்வியை சந்தித்து தொடரை இழந்த ஜிம்பாப்வே இப்போட்டியில் முதல் முறையாக வெற்றிக்கு போராடியது இந்திய ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றது.

குறிப்பாக 300 ரன்கள் அடித்திருக்க வேண்டிய இந்தியாவை 289 ரன்களுக்கு மடக்கிப் பிடித்து அந்த அணி பேட்டிங்கில் மிடில் ஆர்டரில் உயிரை கொடுத்து வெற்றிக்காகப் போராடியது. அதிலும் சிக்கந்தர் ராசா 115 ரன்கள் விளாசிய நிலையில் வேறு ஏதேனும் ஒரு பேட்ஸ்மென் 50 ரன்கள் அடித்திருந்தால் இந்தியா நிச்சயமாக தோல்வியடைந்திருக்கும் என்று இந்திய ரசிகர்களே எதிரணியை பாராட்டுகிறார்கள். அதேசமயம் அந்தளவுக்கு சுமாராக பந்துவீசிய இந்திய பவுலர்களையும் ரசிகர்கள் கலாய்க்கின்றனர். அக்சர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய சுழல் பந்துவீச்சாளர்களை தவிர்த்து எஞ்சிய அத்தனை பவுலர்களும் 6க்கும் மேற்பட்ட எக்கனாமியில் ரன்களை வாரி வழங்கினர்.

- Advertisement -

சுமாரான கேப்டன்ஷிப்:
குறிப்பாக 48வது ஓவரில் 1, 4, 6, 1, 4 என 15 ரன்களை வழங்கிய ஆவேஷ் கான் 6.95 என்ற எக்கனாமியில் வெற்றியை தாரை வார்க்க பார்த்தார். ஆனால் அதிர்ஷ்டவசமாக கடைசி பந்தில் விக்கெட் எடுத்த அவர் கடைசி ஓவரிலும் விக்கெட்டை எடுத்து வெற்றிபெற வைத்தார். அதே போல் சுப்மன் கில் மட்டும் சிக்கந்தர் ராசா கொடுத்த கேட்சை கோட்டை விட்டிருந்தால் தோல்வி உறுதியாகியிருக்கும்.

அதைவிட 8வது விக்கெட்டுக்கு 104 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்கும் அளவுக்கு கடைசியில் அழுத்தத்தை கையாள முடியாமல் திணறிய கேப்டன் கேஎல் ராகுல் நல்ல பேட்ஸ்மேன் ஆனால் துணை கேப்டனாக கூட செயல்படுவதற்கு தகுதியற்றவர் என்றும் இதனாலேயே முதலிரண்டு போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்யவில்லை என்றும் ரசிகர்கள் தாறுமாறாக கலாய்க்கிறார்கள்.

இதையும் படிங்க : ஆசியக்கோப்பை : இந்திய பயிற்சியாளர் டிராவிடுக்கு கொரோனா உறுதி – புதிய பயிற்சியாளர் யார்?

மொத்தத்தில் இந்த போட்டியில் அதிர்ஷ்டத்தின் உதவியுடன் வென்ற இந்தியாவுக்கு தோல்வி பயத்தை காட்டிய ஜிம்பாப்வே வெற்றி பெற்றதற்கு சமம் என இந்திய ரசிகர்கள் மனதார பாராட்டுகிறார்கள்.

Advertisement