வீடியோ : ஆங்கிலத்தில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை – பழைய நிகழ்வால் வெறுப்பான சயீத் அஜ்மல், பேசியது என்ன

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி தரமாக செயல்பட்டாலும் அவ்வப்போது சர்ச்சை நிகழ்வுகளில் சிக்குவது வழக்கமாகும். அதே போல் அதற்காக விளையாடும் வீரர்களும் சில சமயங்களில் வேடிக்கையான நிகழ்வுகளை செய்வதும் வித்தியாசமாக பேசுவதும் வழக்கமாகும். அந்த வகையில் நட்சத்திரம் முன்னாள் கிரிக்கெட் சுழல் பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல் ஆரம்பத்தில் அட்டகாசமாக செயல்பட்டாலும் ஒரு கட்டத்தில் விதிமுறைக்கு புறம்பான பந்து வீசியதால் தடை செய்யப்பட்டார். தாமதமாக 30 வயதில் அறிமுகமானாலும் ஆரம்ப காலங்களில் தனது மாயாஜால சுழலால் எதிரணிகளை திணறடித்த அவர் 35 டெஸ்ட், 113 ஒருநாள் மற்றும் 64 டி20 போட்டிகளில் விளையாடி முறையே 178, 184, 85 விக்கெட்களை எடுத்து அசத்தலாக செயல்பட்டார்.

குறிப்பாக பாகிஸ்தான் 2009 டி20 உலக கோப்பையை வென்றதில் முக்கிய பங்காற்றிய அவர் 2012இல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 24 விக்கெட்டுகளை எடுத்து உலக அளவில் கவனத்தை ஈர்த்தார். இருப்பினும் அவரது பந்து வீச்சில் சந்தேகம் எழுந்ததால் அதை சோதித்த ஐசிசி விதிமுறைகளுக்கு புறம்பானதாக இருந்ததை கண்டுபிடித்து 2014இல் அதிரடியாக தடை செய்தது. அதன் பின் தனது பந்து வீச்சில் மாற்றங்களை செய்து கொண்டு மீண்டும் விளையாடிய அவர் முன்பு போல் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு செயல்படாத காரணத்தால் விரைவிலேயே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து காணாமல் போய்விட்டார்.

- Advertisement -

இங்கிலிஷ் பிடிக்காது:
முன்னதாக ஆசிய கண்டத்தை சேர்ந்த நிறைய வீரர்கள் நேரலை தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் செய்தியாளர்கள் சந்திப்பிலும் சரளமாக ஆங்கிலத்தில் பேசுவதற்கு தடுமாறுவார்கள் என்ற நிலைமையில் இவர் ரொம்பவே தடுமாறினார். குறிப்பாக 10 வருடங்களுக்கு முன்பாக பிரபல இங்கிலாந்து தொலைக்காட்சியின் நேரலை நிகழ்ச்சியில் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைனிடம் ஆங்கிலத்தில் பேச முடியாமல் தடுமாறிய சயீத் அஜ்மல் கடுமையான கிண்டல்களுக்கு உள்ளானார். இந்நிலையில் உலக அளவில் நம்பர் ஒன் பவுலராக வந்த போது அனைவரும் தம்மை ஆங்கிலம் கற்றுக் கொள்ள வற்புறுத்தியதாக தெரிவிக்கும் சயீத் அஜ்மல் கிரிக்கெட்டில் வெற்றிகரமாக செயல்படுவதற்கு தேவையான யுக்திகளை கற்றுக்கொள்ள வேண்டுமே தவிர ஆங்கிலம் கற்றுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று காரமாக பேசியுள்ளார்.

குறிப்பாக ஆங்கிலத்தில் தமக்கு மிகவும் பிடிக்காத வார்த்தை ஆங்கிலம் என ரமணா விஜயகாந்த் பாணியில் சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “நான் உலகின் நம்பர் ஒன் பவுலராக இருந்த போது சிலர் என்னை ஆங்கிலம் கற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார்கள். ஆனால் அவர்களிடம் எனக்கு என்ன பிடிக்குமோ அதைத்தான் நான் செய்வேன் என்று கூறிவிட்டேன். நீங்கள் எனது தாய் மொழியில் நான் பேச விரும்பினால் நான் தாராளமாக பேசுவேன். ஏனெனில் நான் உருது மொழியில் பேசுவதற்கு வெட்கப்படவில்லை”

- Advertisement -

“ஏனெனில் நான் உலகின் நம்பர் ஒன் பவுலராக இருக்கும் போது உலகமே என்னை தேடி வரும். அந்த சமயத்தில் நான் ஒருவரிடம் சென்று பேட்டி கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அவர்கள் என்னை தேடி பேட்டி எடுக்க வருவார்கள். ஆங்கில மொழியில் அந்த வார்த்தையை நான் மிகவும் வெறுக்கிறேன். ஏனெனில் இங்கு அனைவரும் உங்களுக்கு ஆங்கிலம் தெரிந்திருந்தால் நீங்கள் நல்லவர் என்றும் உங்களுக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்றால் நீங்கள் மோசமானவர் என்றும் நினைக்கிறார்கள். இது என்ன அணுகுமுறை” என்று வெறுப்பாக பேசினார்.

அவர் கூறுவது போல நிறைய இந்திய வீரர்கள் கூட ஆங்கிலம் தெரியாத சமயங்களில் ஹிந்தியில் பேசினார்கள். குறிப்பாக இந்தியாவுக்காக ஆஸ்திரேலியா மண்ணில் அபாரமாக செயல்பட்ட போது தமிழக வீரர் நடராஜன் தமிழில் தான் பேசினார். அந்த வகையில் ஆங்கிலம் என்பது ஒரு பாலமான மொழியே தவிர கட்டாயம் கற்க வேண்டிய மொழி கிடையாது.

இதையும் படிங்க: IND vs BAN : 22 மாதங்கள் கழித்து அபார கம்பேக் கொடுத்த குல்தீப் யாதவ், அஷ்வின் – கும்ப்ளே சாதனைகளை உடைத்து புதிய சாதனை

மேலும் கிரிக்கெட்டில் சாதிக்க நுணுக்கங்களை கற்றுக்கொள்ள வேண்டுமே தவிர ஆங்கிலம் கற்க வேண்டிய அவசியமும் கிடையாது. இருப்பினும் சர்வதேச அரங்கில் நீங்கள் வார்த்தை ஜாலங்களில் எதிரணியினரை சாய்க்க ஆங்கிலம் கற்றுக்கொள்வதில் தவறுமில்லை.

Advertisement