IND vs BAN : 22 மாதங்கள் கழித்து அபார கம்பேக் கொடுத்த குல்தீப் யாதவ், அஷ்வின் – கும்ப்ளே சாதனைகளை உடைத்து புதிய சாதனை

Kuldeep Yadav
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை இழந்த இந்தியா அடுத்ததாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் களமிறங்கியுள்ளது. குறிப்பாக 2023 ஜூன் மாதம் லண்டன் ஓவலில் நடைபெறும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற 2 – 0 (2) என்ற கணக்கில் இத்தொடரை கைப்பற்ற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியுள்ள இந்தியா சட்டோகிராம் கிரிக்கெட் மைதானத்தில் டிசம்பர் 14ஆம் தேதியன்று துவங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து 404 ரன்கள் குவித்தது.

கேப்டன் கேஎல் ராகுல் 22, சுப்மன் கில் 20, விராட் கோலி 1 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே அவுட்டானதால் 48/3 என தடுமாறிய இந்தியாவை மிடில் ஆர்டரில் ரிஷப் பண்ட் 46, ஸ்ரேயாஸ் ஐயர் 86, புஜாரா 90 என முக்கிய வீரர்கள் பொறுப்புடன் ரன்களை குவித்து மீட்டெடுத்தனர். அதை விட 8வது விக்கெட்டுக்கு வங்கதேசத்துக்கு சிம்ம சொப்பனமாக நின்று 87 ரன்கள் பார்ட்ன்ஷிப் அமைத்து தொல்லை கொடுத்த ரவிச்சந்திரன் அஸ்வின் 58 ரன்களும் குல்தீப் யாதவ் 40 ரன்களும் குவித்து இந்தியாவை மேலும் வலுப்படுத்தினார்கள். வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக டைஜூல் இஸ்லாம் மற்றும் மெஹதி ஹசன் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

- Advertisement -

சாதனை கம்பேக்:
அதை தொடர்ந்து களமிறங்கிய வங்கதேசம் இந்திய பவுலர்களின் அனல் பறக்கும் பந்து வீச்சில் முதல் பந்திலிருந்தே சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து தனது முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக முஸ்பிகர் ரஹீம் 28 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளையும் முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளையும் எடுத்தனர். அதைத் தொடர்ந்து 254 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2வது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. முன்னதாக இப்போட்டியில் ரவீந்திர ஜடேஜா காயமடைந்ததால் வாய்ப்பு பெற்ற குல்தீப் யாதவ் பேட்டிங்கில் முக்கியமான 40 ரன்களும் பந்து வீச்சில் 5 விக்கெட்டுகளையும் எடுத்து சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தினார்.

கடந்த 2018 வாக்கில் அஷ்வினை பின்னுக்கு தள்ளி 3 வகையான இந்திய அணியிலும் முதன்மை ஸ்பின்னராக அவதரித்த இவர் 2019 உலக கோப்பைக்குப் பின் ஃபார்மை இழந்து விக்கெட் எடுக்க முடியாமல் தவித்ததுடன் காயமடைந்து வெளியேறினார். அதனால் ஐபிஎல் தொடரிலும் கொல்கத்தா அணியில் கழற்றி விடப்பட்ட அவர் கடுமையான போராட்டத்திற்கு பின் இந்த வருடம் டெல்லி அணியில் அபாரமாக செயல்பட்டு மீண்டும் முழுமையான ஃபார்முக்கு திரும்பியுள்ளார்.

- Advertisement -

அதனால் இந்திய அணியிலும் வாய்ப்புகளை பெறத் துவங்கியுள்ள இவர் 22 மாதங்கள் கழித்து டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ளார். கடைசியாக கடந்த 2021 பிப்ரவரி மாதம் சொந்த மண்ணில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடியிருந்த இவர் கடுமையாக போராடி மீண்டும் பெற்ற இந்த வாய்ப்பில் 16 ஓவரில் 6 மெய்டன் உட்பட 40 ரன்களை மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார்.

அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் வங்கதேசத்துக்கு எதிராக சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த இந்திய சுழல் பந்து வீச்சாளர் என்ற ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் அனில் கும்ப்ளே ஆகியோரது சாதனைகளை தகர்த்த அவர் புதிய சாதனை படைத்தார். அந்த பட்டியல்:
1. குல்தீப் யாதவ் : 5/40, சட்டோகிராம், 2022*
2. ரவிச்சந்திரன் அஸ்வின் : 5/87, பட்டுள்ளா, 2015
3. அனில் கும்ப்ளே : 4/55, சட்டோகிராம், 2004

இதையும் படிங்க: லிட்டன் தாஸிடம் சொன்னது என்ன? திட்டம் போட்டு வம்பிழுந்திங்களா – அனல் பறந்த ஸ்லெட்ஜிங் பற்றி சிராஜ் பதில்

அந்த வகையில் மிகச் சிறந்த கம்பேக் கொடுத்துள்ள குல்தீப் யாதவ் மீண்டும் இந்திய அணியில் முதன்மை ஸ்பின்னராக தமக்கென்று ஒரு நிரந்தர இடத்தை பிடிப்பதற்கான வேலைகளை துவங்கியுள்ளார். குறிப்பாக 2019இல் அப்போதைய பயிற்சியாளர் மற்றும் கேப்டன் ரவி சாஸ்திரி – விராட் கோலி ஆகியோர் இவருக்கு அதிக ஆதரவு கொடுத்த நிலையில் இப்போதைய ராகுல் டிராவிட் – ரோகித் சர்மா கூட்டணி எந்த அளவுக்கு ஆதரவு கொடுக்கிறது என்பதை பொறுத்து அது அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement