ஆசிய கோப்பை 2022 : 6வது அணியாக தகுதி பெற்று இந்தியாவுடன் மோதப்போகும் அணி இதுதான் – பார்மட், ஒளிபரப்பு விவரம் இதோ

Asia Cup
- Advertisement -

ஆசிய கிரிக்கெட் அணிகளின் சாம்பியனை தீர்மானிக்கும் ஆசிய கோப்பை வரும் ஆகஸ்ட் 27 முதல் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெறுகிறது. விரைவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு அனைத்து ஆசிய அணிகளும் தயாராகும் வகையில் 20 ஓவர் தொடராக நடைபெறும் இந்த தொடரில் 6 அணிகள் கோப்பைக்காக களமிறங்குகின்றன. இந்த தொடரில் பங்கேற்பதற்காக அந்தந்த நாட்டு வாரியங்கள் தங்களது அணிகளை அறிவித்த நிலையில் ரோகித் சர்மா தலைமையில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இந்திய அணி துபாய்க்குச் சென்று அங்கு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

கடந்த 1984 முதல் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சார்பாக ஒவ்வொரு 2 வருடத்திற்கு ஒருமுறை நடைபெற்று வரும் இந்த தொடரில் வரலாற்றில் இதுவரை 14 தொடர்கள் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளன. அதில் 7 கோப்பைகளை வென்ற இந்தியா வெற்றிகரமான அணியாகவும் கடைசியாக கடந்த 2018இல் இதே துபாயில் நடைபெற்ற 50 ஓவர் ஆசிய கோப்பையில் ரோகித் சர்மா தலைமையில் கோப்பையை வென்று நடப்பு சாம்பியனாகவும் திகழ்கிறது. எனவே மற்ற அணிகளை காட்டிலும் வலுவான அணியாக திகழும் இந்தியா இம்முறையும் கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக இலங்கை 5 கோப்பைகளையும் பாகிஸ்தான் 2 கோப்பைகளை வென்றுள்ளது.

- Advertisement -

6வதாக ஹாங்காங்:
முன்னதாக இந்த தொடருக்காக ஏற்கனவே வெளியிடப்பட்ட அட்டவணையின் படி இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 5 அணிகளுடன் 6வது அணியை தீர்மானிக்கும் தகுதி சுற்று போட்டிகள் கடந்த சில தினங்களாக ஓமனில் நடைபெற்று வந்தது. அதில் ஆசிய கோப்பையை நடத்தும் ஐக்கிய அரபு நாடுகள், குவைத், ஹாங்காங், சிங்கப்பூர் ஆகிய 4 அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஓமனில் இருக்கும் அல் அமீரட் மைதானத்தில் ஆகஸ்ட் 25 முதல் நடைபெற்று வந்த இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும் என்ற அடிப்படையில் மொத்தம் 6 போட்டிகள் நடைபெற்றன.

அதில் சிங்கப்பூர், ஐக்கிய அரபு நாடுகள் ஆகிய அணிகளை முதல் இரண்டு போட்டிகளில் தோற்கடித்த ஹாங்காங் நேற்று நடைபெற்ற முக்கியமான கடைசி போட்டியிலும் குவைத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து பங்கேற்ற 3 போட்டிகளில் 3 வெற்றிகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் 6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது. அதனால் ஆசிய கோப்பை 2022 தொடரின் முதன்மை சுற்றில் விளையாடுவதற்கு 6வது அணியாக ஹாங்காங் தகுதி பெற்று இந்தியாவுடன் வரும் ஆகஸ்ட் 31இல் மோதுகிறது.

- Advertisement -

ஃபார்மட் – அட்டவணை:
இதை தொடர்ந்து குரூப் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அணிகளுடன் 3வது அணியாக ஹாங்காங் அமைந்துள்ளது. குரூப் பி பிரிவில் இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் இடம் பிடித்துள்ளன. இதையடுத்து வரும் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 2 வரை துபாய் மற்றும் சார்ஜாவில் நடைபெறும் ஆசிய கோப்பை லீக் சுற்றில் ஒவ்வொரு குரூப் பிரிவிலும் இடம் பிடித்துள்ள அணிகள் மற்றொரு அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். அதில் முதல் 2 இடங்களை பிடிக்கும் தலா 2 அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும்.

அதன்பின் வரும் செப்டம்பர் 3 முதல் 9 வரை நடைபெறும் சூப்பர் 4 சுற்றில் அதிக வெற்றிகளைப் பெற்று முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் வரும் செப்டம்பர் 11ஆம் தேதியன்று துபாயில் நடைபெறும் மாபெரும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்த உள்ளது. தற்போது 6வது அணியாக ஹாங்காங் தகுதி பெற்றுள்ளதால் ஆசிய கோப்பை 2022 தொடருக்கான இறுதிகட்ட லீக் சுற்றுப் போட்டிகளின் அட்டவணை இதோ:

- Advertisement -

1. ஆகஸ்ட் 27, ஆப்கானிஸ்தான் – இலங்கை, துபாய்
2. ஆகஸ்ட் 28, இந்தியா – பாகிஸ்தான், துபாய்
3. ஆகஸ்ட் 30, ஆப்கானிஸ்தான் வங்கதேசம், ஷார்ஜா
4. ஆகஸ்ட் 31, இந்தியா – ஹாங்காங், துபாய்
5. செப்டம்பர் 1, வங்கதேசம் – இலங்கை, துபாய்
6. செப்டம்பர் 2, பாகிஸ்தான் – ஹாங்காங், ஷார்ஜா

இதையும் படிங்க: தன்மீது எழுந்துள்ள கடுமையான விமர்சனங்களுக்கு முதன்முறையாக வாய்திறந்த விராட் கோலி – விவரம் இதோ

இந்த போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்தப் போட்டிகளை இந்தியாவில் இருக்கும் ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி மற்றும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் ஆப் வாயிலாக கண்டுகளிக்கலாம். அதேபோல் டிடி ஸ்போர்ட்ஸ் சேனல் வாயிலாக இலவசமாக தொலைக்காட்சியில் கண்டு களிக்கலாம்.

Advertisement