
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கையை நட்சத்திரம் விராட் கோலி 12 வருடங்கள் கழித்து ரஞ்சிக் கோப்பையில் விளையாடினார். கடந்த நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா தொடர்களில் சுமாராக விளையாடிய அவர் இந்தியா முதல் முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெறாமல் வெளியேற ஒரு காரணமாக அமைந்தார். அதனால் விமர்சனங்களை சந்தித்த அவர் ஃபார்முக்கு திரும்புவதற்காக ரஞ்சிக்கோப்பையில் ரயில்வேஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடினார்.
ஆனால் 12 பந்துகள் எதிர்கொண்டு நங்கூரமாக விளையாடத் துவங்கிய அவரை 29 வயது ரயில்வேஸ் பவுலர் ஹிமான்சு சங்வான் 6 ரன்களில் க்ளீன் போல்ட்டாக்கினார். அதனால் விராட் கோலியின் ஆட்டத்தை காண வந்த 15000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள். இந்நிலையில் அவுட்டாக்கிய பந்திலேயே விராட் கோலி கையெழுத்திட்டு தமக்கு ஸ்பெஷல் பரிசு கொடுத்ததாக ஹிமான்சு தெரிவித்துள்ளார்.
அதை விட 5வது ஸ்டம்ப் லைனில் வீசினால் விராட் கோலியின் விக்கெட்டை எடுக்கலாம் என்று தங்களுடைய அணியின் பஸ் டிரைவர் கூறியதாகவும் ஹிமான்சு தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “விராட் கோலியிடம் பந்தை கையெழுத்திடுமாறு கொடுத்த போது இதில் தான் என்னை அவுட்டாக்கினீர்களா? அது மிகவும் அழகான பந்து. நீங்கள் நல்ல பவுலர். தொடர்ந்து கடினமாக உழையுங்கள். உங்களுக்கு வாழ்த்துக்கள் என்று கூறினார்”
“அது என்னுடைய வாழ்வின் மிகவும் முக்கியமான விக்கெட். ஏனெனில் விராட் கோலி நம்முடைய மொத்த நாட்டின் உத்வேகமாக இருக்கிறார். என் வாழ்வில் முதல் முறையாக அவ்வளவு ரசிகர்கள் நாங்கள் விளையாடுவதை பார்க்க வந்ததைப் பார்த்தேன். எனவே அது எங்கள் அணிக்கு ஸ்பெஷலான விஷயம். அந்தப் போட்டிக்கு முன்பாக ரிஷப் பண்ட், விராட் கோலி விளையாட உள்ளதாக பேச்சுக்கள் காணப்பட்டன”
“அப்போது போட்டி நேரலையில் ஒளிபரப்பப்படும் என்பதும் எங்களுக்குத் தெரியாது. பின்னர் பண்ட் விளையாட மாட்டார் என்றும் கோலி விளையாடுவார் நேரலை ஒளிபரப்பும் உள்ளது என்பதையும் நாங்கள் தெரிந்து கொண்டோம். அப்போது ரயில்வேஸ் அணியின் முன்னணி பவுலரான என்னால் அவருடைய விக்கெட்டை எடுக்க முடியும் என்று எங்கள் அணி வீரர்கள் சொன்னார்கள்”
இதையும் படிங்க: ஜஸ்ப்ரித் பும்ரா 4 வயது மாப்பிளையாக வந்து வீட்டில் தொல்லை பன்றாரு.. ஆஸி விருதில் மார்ஷ் கலகலப்பு
“பேருந்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது அதனுடைய ஓட்டுநர் கூட நீங்கள் 4 – 5 ஸ்டம்ப் லைனில் வீசினால் விராட் கோலி அவுட்டாகி விடுவார் என்று சொன்னார். அதனால் எனக்குத் தன்னம்பிக்கை கிடைத்தது. மற்றவரின் பலவீனத்தை பார்க்காமல் என்னுடைய பலத்தில் நான் கவனம் செலுத்தினேன். அதன் பயனாக விக்கெட் கிடைத்தது” என்று கூறினார். மொத்தத்தில் பஸ் டிரைவருக்கு கூட விராட் கோலியின் வீக்னஸ் தெரிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.