IND vs PAK : பாகிஸ்தானுக்கு எதிரான மழையால் ரத்தானால் என்ன நடக்கும்? இந்தியாவுக்கு பின்னடைவா – ரூல்ஸ் கூறுவது இதோ

IND vs PAK Rain
- Advertisement -

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி செப்டம்பர் 2ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு நடைபெற உள்ளது. இலங்கை, வங்கதேசம் போன்ற இதர அணிகளை காட்டிலும் ஆசிய கண்டத்தின் டாப் 2 அணிகளாக கருதப்படும் இவ்விரு அணிகள் மோதும் போட்டியில் விராட் கோலி, பாபர் அசாம், ஜஸ்பிரித் பும்ரா, ஷாஹின் அப்ரிடி, ஹரிஷ் ரவூப், ரோஹித் சர்மா போன்ற நட்சத்திர வீரர்கள் நிறைந்திருப்பதால் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் இப்போட்டியில் இரு அணிகளை காட்டிலும் ஆர்வத்துடன் விளையாடுவதற்கு மழை தயாராகி வருவது ரசிகர்களுக்கு கவலை ஏற்படுத்துவதாக இருக்கிறது. ஏனெனில் இப்போட்டி நடைபெறும் இலங்கையின் கண்டியில் இருக்கும் பல்லக்கேல் நகரில் போட்டி நாளன்று சராசரியாக 60 முதல் 80% இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு அதிக வாய்ப்புள்ளதாக அங்குள்ள வானிலை மையம் தெரிவிக்கிறது. குறிப்பாக உள்ளூர் நேரப்படி மதியம் 2 மணிக்கு துவங்கும் இப்போட்டி இரவு 11 மணிக்கு நிறைவு பெறும்.

- Advertisement -

ரூல்ஸ் கூறுவது:
ஆனால் செப்டம்பர் 2ஆம் தேதி அதிகாலை முதல் இரவு வரை பல்லக்கேல் நகரில் 60, 70, 80% என்றளவில் பெய்யும் மழையின் வாய்ப்பு 50 சதவீதத்திற்கும் கீழ் குறைவதாக தெரியவில்லை. அந்த சூழ்நிலையில் மழை கருணை காட்டும் பட்சத்தில் முடிந்தளவுக்கு ஓவர்களை குறைத்து போட்டியின் முடிவை காண்பதற்காக நடுவர்கள் முயற்சிப்பார்கள். அதற்கு இரு அணிகளும் குறைந்தபட்சம் தலா 20 ஓவர்களாவது விளையாடியிருக்க வேண்டும் என்பது விதிமுறையாகும்.

ஒருவேளை முதல் இன்னிங்ஸ் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்டால் மொத்த போட்டியும் ரத்து செய்யப்படும். அதே போல முதல் இன்னிங்ஸ் விளையாடுவதற்கு மழை வழி விட்டு 2வது இன்னிங்ஸில் 20 ஓவர்கள் விளையாடிய பின் வந்தால் வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக டக் வொர்த் லீவிஸ் விதிமுறை கையாளப்படும். ஒருவேளை போட்டி மொத்தமாக ரத்து செய்யப்படும் பட்சத்தில் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி பகிர்ந்து வழங்கப்படும்.

- Advertisement -

இது போன்ற சூழ்நிலையில் ஏற்கனவே தன்னுடைய முதல் போட்டியில் நேபாளை தோற்கடித்து 2 புள்ளிகளை பெற்றுள்ள பாகிஸ்தான் தங்களுடைய லீக் சுற்றின் முடிவில் 3 புள்ளிகளை பெற்று சூப்பர் 4 சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்று விடும். ஆனால் ஒரு புள்ளியை மட்டுமே பெறக்கூடிய இந்தியா சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற தன்னுடைய கடைசி போட்டியில் நேபாளை நிச்சயம் தோற்கடித்தாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும்.

இதையும் படிங்க: IND vs PAK : இந்தியா – பாக் போட்டி நடைபெறும் கண்டி மைதானம் எப்படி? வரலாற்று புள்ளிவிவரங்கள் – பிட்ச், வெதர் ரிப்போர்ட் இதோ

இருப்பினும் கத்துக்குட்டியான நேபாளை எளிதாக தோற்கடித்து இந்தியா சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும் என்று உறுதியாக நம்பலாம். ஆனாலும் நேபாளுக்கு எதிராக 4ஆம் தேதி இதே மைதானத்தில் இந்தியா களமிறங்கும் போட்டியிலும் மழை வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது. எனவே அந்தப் போட்டியும் மழையால் ரத்து செய்யப்படும் பட்சத்தில் 1 புள்ளியை பெறும் இந்தியா மொத்தமாக 2 புள்ளிகளுடன் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்று விடும். நேபாள் இத்தொடரிலிருந்து வெளியேறி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement