வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஜூலையில் நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணி நிறைய விமர்சனங்களை எழுப்பியது. குறிப்பாக 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் சுமாராக செயல்பட்ட நிலையில் புஜாரா மட்டும் கழற்றி விடப்பட்டது கேள்விகளை எழுப்பியது. அதை விட அவருக்கு பதிலாக ஐபிஎல் தொடரில் அசத்திய ருதுராஜ் கைக்வாட், ஜெய்ஸ்வால் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு ரஞ்சி கோப்பையில் அசத்திய சர்ஃபிராஸ் கான் மீண்டும் புறக்கணிக்கப்பட்டது அனைவரிடமும் அதிருப்தியை ஏற்ப்படுத்தியுள்ளது.
பொதுவாக இந்திய டெஸ்ட் அணிக்கு இந்திய உள்ளூர் தொடரான ரஞ்சிக் கோப்பையில் அசத்தும் வீரர்களை தேர்ந்தெடுக்க வேண்டுமென்ற நிலைமையில் கடந்த 3 வருடங்களாக 80 என்ற சிறப்பான சராசரியில் பேட்டிங் செய்து வரும் சர்பராஸ் கான் 3505 ரன்களை விளாசி தொடர்ந்து இந்தியாவுக்கு விளையாடும் லட்சியத்துடன் வெறித்தனமாக செயல்பட்டு வருகிறார். இருப்பினும் சமீபத்தில் ஐபிஎல் தொடர்களில் அசத்திய காரணத்தால் ஜெய்ஸ்வால், ருதுராஜ் ஆகியோர் அவரை விட ரஞ்சி கோப்பையில் குறைவான சராசரியை கொண்டிருந்தும் தேர்வாகியுள்ளனர்.
பொய்யான புகார்:
அதனால் ரஞ்சி கோப்பையை குப்பையில் தூக்கிக் கொடுங்கள் என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் விமர்சித்த நிலையில் சர்பராஸ் கான் அரசியல் காரணங்களால் புறக்கணிக்கப்பட்டு வருவதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த நிலையில் கடந்த வருடம் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் சேட்டன் சர்மா பார்வையிட சென்ற போது ஒரு ரஞ்சிக்கோப்பை போட்டியில் சதமடித்த சர்பராஸ் கான் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காத கோபத்தை அவருக்கு எதிராக தொடையில் தட்டி கையை நீட்டி வெறித்தனமாக மிரட்டும் வகையில் கொண்டாடி நன்னடத்தையின்றி நடந்து கொண்டதாலேயே தேர்வு செய்யப்படவில்லை என்று சமீபத்தில் செய்திகள் வெளியானது.
அத்துடன் களத்திற்கு வெளியே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தேர்வுக்குழுவுக்கு எதிராக பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ள சர்ப்ராஸ் கான் சர்வதேச தரத்துக்கு நிகராக ஃபிட்னஸ் கடை பிடிக்காததும் வாய்ப்பு கிடைக்காததற்கு முக்கிய காரணம் என்று தெரிய வந்தது. மேலும் மயங் அகர்வால், ஹனுமா விகாரி போன்றவர்கள் ரஞ்சி கோப்பையில் அசத்திய காரணத்தால் தேர்வு செய்யப்பட்டார்களே தவிர ஐபிஎல் செயல்பாடுகள் அடிப்படையில் தேர்வு செய்யப்படவில்லை என்றும் சர்பராஸ் கான் நன்னடத்தை மற்றும் ஃபிட்னஸ் காரணமாகவே புறக்கணிக்கப்படுவதாக செய்திகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் தேர்வுக்குழு சார்பில் வெளியான அந்த செய்திகள் அனைத்தும் பொய் என்று தெரிவிக்கும் புதிய செய்தி வெளியாகியுள்ளது. முதலில் புகார் தெரிவிக்கப்படும் அந்த போட்டியில் தேர்வுக்குழு உறுப்பினர் சலில் அன்கோலா தான் இருந்தாரே தவிர தேர்வுக்குழு தலைவர் சேட்டன் சர்மா இல்லை என்றும் அந்த சமயத்தில் தம்முடைய பயிற்சியாளர் மற்றும் மும்பை அணி வீரர்களை பார்த்து தான் சர்பராஸ் கான் அந்த வகையில் தொடையில் தட்டி கொண்டாடியதாக தெரிய வருகிறது.
இது பற்றி பெயர் வெளியிட விரும்பாத பிசிசிஐ நிர்வாகி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “டெல்லியில் நடைபெற்ற அந்த ரஞ்சிக் கோப்பை போட்டியில் தம்முடைய பயிற்சியாளர் அன்மோல் முஜும்தார் மற்றும் சக அணி வீரர்களுக்கு தனது திறமையை உணர்த்தும் வகையிலேயே சர்பராஸ் கான் அவ்வாறு கொண்டாடினார். அந்த சமயத்தில் அவருடைய திறமையை பாராட்டும் வகையில் பயிற்சியாளர் அன்மோல் தம்முடைய தொப்பியை கழற்றி தலை வணங்கினார்”
“மேலும் அந்தப் போட்டியில் மும்பை தடுமாற்றமான சூழலில் தவித்த போது அற்புதமாக பேட்டிங் செய்து அழுத்தத்தை உடைத்து சதமடித்த மகிழ்ச்சியில் தான் அவர் அவ்வாறு கொண்டாடினார். அப்படிப்பட்ட நிலையில் உங்களுடைய அணி நிர்வாகத்தை பார்த்து கையை நீட்டி கொண்டாடுவது குற்றமா? மேலும் அந்த சமயத்தில் சலில் அன்கோலோ தான் இருந்தார் சேட்டன் சர்மா அல்ல. அத்துடன் சந்திரகாந்த் பண்டிட் எப்போதுமே அவரை தன்னுடைய மகன் போலவே பாவிக்கிறார். குறிப்பாக 14 வயதிலிருந்தே பார்த்து வருவதால் சர்ப்ராஸ் மீது அவர் எப்போதும் கோபப்பட்டதில்லை” என்று கூறினார்.
இதையும் படிங்க:அறிமுக போட்டியின் முதல் பந்திலேயே அவுட் ஆனேன். அப்போ தோனி என்கிட்ட என்ன சொன்னாரு தெரியுமா? – சுரேஷ் ரெய்னா பேட்டி
அத்துடன் இந்திய கிரிக்கெட்டில் நிர்ணயிக்கப்பட்டுள்ள ஃபிட்னெஸ் தேர்வில் சர்பராஸ் தேர்ச்சி பெற்ற பின்பு தான் மும்பை அணிக்காக விளையாடி வருவதாகவும் செய்திகள் தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.