வரலாற்றில் இன்று : கபில் தேவ் 175 மாஸ் பேட்டிங் வீடியோ பிபிசி ஸ்ட்ரைக்கால் மிஸ் ஆகல – உண்மையான காரணம் இதோ

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளுக்கு சவாலை கொடுக்கும் வகையில் தரமான செயல்பாடுகளை வெளிப்படுத்தும் இந்தியா முதன்மையான அணியாக ஜொலித்து வருகிறது. இருப்பினும் ஆரம்ப காலங்களில் கிரிக்கெட் என்றால் என்னவென்று தெரியாமல் இருந்த இந்தியாவில் 1983 உலகக் கோப்பையை கபில் தேவ் தலைமையிலான அணி வென்றதே இன்று ஆலமரமாய் வளர்ந்து நிற்பதற்கு ஆழமான விதை போட்டது என்று சொல்லலாம். இங்கிலாந்தில் நடைபெற்ற அந்த உலக கோப்பையில் கத்துக்குட்டியாக களமிறங்கிய இந்தியா மாபெரும் ஃபைனலில் ஏற்கனவே 2 உலகக் கோப்பைகளை வென்று வெறித்தனமான வீரர்களை கொண்ட முரட்டுத்தனமான வெஸ்ட் இண்டீஸை தடுத்து நிறுத்தி சாம்பியன் பட்டம் வென்றது மொத்த நாட்டையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

அந்த வெற்றி தான் சச்சின் டெண்டுல்கர் போன்ற பல வருங்கால நட்சத்திரங்கள் உருவெடுத்து காலப்போக்கில் இந்தியா நம்பர் ஒன் அணியாக முன்னேறுவதற்கு காரணமாக அமைந்தது. மேலும் அத்தொடரில் கத்துக்குட்டியான இவர்கள் எங்கே வெல்லப் போகிறார்கள் என்று கருதிய இந்தியாவை சிறப்பாக வழி நடத்திய ஜாம்பவான் கபில் தேவ் அந்த வெற்றியின் நாயகன் என்றே சொல்லலாம்.

- Advertisement -

உண்மையான பின்னணி:
குறிப்பாக லீக் சுற்றில் டுன்பிரிட்ஜ் நகரில் நடைபெற்ற ஜிம்பாப்வேவுக்கு எதிரான நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் சுனில் கவாஸ்கர் 0, ஸ்ரீகாந்த் 0, அமர்நாத் 5, சந்தீப் பாட்டில் 1, யாஸ்பால் சர்மா 9 என டாப் முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டானதால் 17/5 என சரிந்த இந்தியாவின் கதை முடிந்ததாகவே கருதப்பட்டது. ஆனால் அடுத்ததாக களமிறங்கி அந்த காலத்திலேயே டி20 இன்னிங்ஸ் விளையாடிய கபில் தேவ் ஜிம்பாப்வே பவுலர்களை சரமாரியாக அடித்து நொறுக்கி சதமடித்தும் ஓயாமல் 16 பவுண்டரி 6 சிக்ஸருடன் 175* (138) ரன்களை 126.81 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் தெறிக்க விட்டு இந்தியாவை தனி ஒருவனாக செங்குத்தாக தூக்கினார்.

அவரது உதவியுடன் 60 ஓவரில் 266/8 ரன்கள் எடுத்த இந்தியா பின்னர் மதன் லால் 3, ரோஜர் பின்னி 2 விக்கெட்கள் எடுத்து அசத்தலாக பந்து வீசியதால் 57 ஓவரிலேயே ஜிம்பாப்வேவை 235 ரன்களுக்கு சுருட்டி 31 ரன்கள் ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மிகச் சரியாக ஜூலை 18ஆம் தேதியான இன்றிலிருந்து 40 வருடங்கள் முன்பாக அந்த வரலாற்று சிறப்புமிக்க இன்னிங்ஸ் விளையாடிய கபில் தேவ் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியதுடன் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரர் என்ற உலக சாதனையும் படைத்தார்.

- Advertisement -

அப்படி அன்றைய நாளில் அவர் விளையாடிய மாஸ் இன்னிங்ஸை இன்று நிறைய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் நினைவுகூர்ந்து பாராட்டினாலும் அதை வீடியோவாக பார்க்க முடிவதில்லை. ஆம் அன்றைய நாளில் பிபிசி ஊழிய நிர்வாகிகள் வேலை நிறுத்தம் செய்ததால் அந்த போட்டியை படம் பிடிக்காமல் போனது என்றும் அதனால் கபில் தேவ் விளையாடி ஆட்டத்தை எப்போதுமே பார்க்க முடியாது என்றும் நிறைய பேர் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் உண்மை என்னவெனில் அன்றைய நாளில் பிபிசி ஊழியர்கள் ஸ்ட்ரைக் எதுவும் செய்யவில்லை.

மாறாக அன்றைய நாளில் நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் லார்ட்ஸ் மைதானத்தில் ஆஸ்திரேலியாவையும் பாகிஸ்தானை டெர்பியில் இங்கிலாந்தும் மான்செஸ்டரில் இலங்கையை நியூஸிலாந்தும் எதிர்கொண்ட நிலையில் டுன்பிரிட்ஜ் நகரில் ஜிம்பாப்வேவை இந்தியா எதிர்கொண்டது. ஆனால் அந்த சமயத்தில் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற அணிகள் வலுவானதாக இருந்த நிலையில் கத்து குட்டியான இந்தியாவின் போட்டியை யார் பார்க்க போகிறார்கள்? என்று பிபிசி நிறுவனம் கருதியது.

இதையும் படிங்க:TNPL 2023 : போன போட்டியில் ஜீரோவாக சொதப்பினாலும் திருச்சியை ஹீரோவாக சாய்த்த வீரர் – சேலம் வென்றது எப்படி?

அத்துடன் அந்த சமயத்தில் ஒரு நாளைக்கு 2 போட்டிகளை மட்டுமே படம் பிடிக்கும் அளவுக்கு பிபிசி நிறுவனத்திடம் வசதிகளும் ஊழியர்களும் இருந்ததால் நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தங்களுடைய இங்கிலாந்து அணிகள் பங்கேற்கும் போட்டிகளை மட்டும் பிபிசி நேரலையில் ஒளிபரப்பு செய்தது. அதன் காரணமாகவே இந்தியா விளையாடிய போட்டி அன்றைய நாளில் படம் பிடிக்கப்படவில்லை. ஆனால் கடைசியில் அந்த 2 போட்டிகளை காட்டிலும் இந்தியா வென்றதால் பிபிசி நிறுவனம் வருந்தியதை விட கபில் தேவ் விளையாடிய மகத்தான இன்னிங்ஸை யூடியூப் உட்பட எங்கேயும் பார்க்க முடியவில்லையே என இந்திய ரசிகர்கள் இன்றளவும் வருந்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement