TNPL 2023 : போன போட்டியில் ஜீரோவாக சொதப்பினாலும் திருச்சியை ஹீரோவாக சாய்த்த வீரர் – சேலம் வென்றது எப்படி?

TNPL 7
- Advertisement -

தமிழக கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வரும் டிஎன்பிஎல் 2023 டி20 தொடரில் ஜூன் 18ஆம் தேதி மதியம் 3.15 மணிக்கு திண்டுக்கல்லில் இருக்கும் என்பிஆர் காலேஜ் மைதானத்தில் நடைபெற்ற 7வது லீக் போட்டியில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் மற்றும் திருச்சி ஆகிய அணிகள் மோதின. அந்த போட்டியில் டாஸ் வென்ற திருச்சி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு அபிஷேக் தன்வர் வீசிய முதல் ஓவரிலேயே ஜாஃபர் ஜமால் டக் அவுட்டாகி சென்றார். அதேபோல மற்றொரு தொடக்க வீரர் கங்கா ஸ்ரீதர் ராஜுவும் 6 (15) ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த பிரான்சிஸ் ரோகின்ஸ் 16 (17) ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

அதனால் 32/3 என ஆரம்பத்திலேயே தடுமாறிய அந்த அணிக்கு மணிபாரதி நிதானமாகவும் அதிரடியாகவும் விளையாடி 3 பவுண்டரி 2 சிக்சருடன் அதிகபட்சமாக 40 (33) ரன்கள் எடுத்தார். அத்துடன் எதிர்ப்புறம் ஆண்டனி தாஸ் 12 (12) பெஃராரியோ 29 (16) ராஜ்குமார் 15 (7) என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாட முயற்சித்து குறைந்த ரன்களில் பெவிலியன் திரும்பினர். அதன் காரணமாக கடைசி வரை அதிரடியாக விளையாட முடியாமல் தடுமாறிய அந்த அணி 20 ஓவர்களில் 139/9 ரன்கள் மட்டுமே எடுத்தது.

- Advertisement -

ஜீரோ டூ ஹீரோ:
அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்திய சேலம் சார்பில் அதிகபட்சமாக அபிஷேக் டன்வர் 3 விக்கெட்டுகளும் ரவி கார்த்திகேயன் மற்றும் சன்னி சந்து ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 140 என்ற இலக்கை துரத்திய சேலத்திற்கு தொடக்க வீரர்கள் அமித் ஷாத்விக் 22 (21) ரன்களும் ஆகாஷ் சும்ரா 10 (7) ரன்களும் எடுத்து அவுட்டாக அடுத்து வந்த மான் பாஃப்னா 16 (10) ரன்களில் நடையை கட்டினார். இருப்பினும் 4வது இடத்தில் களமிறங்கி பொறுப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய கௌஷிக் காந்தி அதிரடியாக செயல்பட்டு அரை சதம் கடந்து வெற்றிக்கு போராடினார்.

ஆனால் எதிர்ப்புறம் வந்த மோகித் ஹரிஹரன் 15 (14) ரன்களிலும் அபிஷேக் 6 (8) ரன்களிலும் அவுட்டாகி சென்றாலும் இலக்கு குறைவாக இருந்ததை பயன்படுத்திய சேலம் 15.2 ஓவர்களிலேயே 143/5 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றி பெற்றது. அந்த அணிக்கு கடைசி வரை அவுட்டாகாமல் அசத்திய கௌஷிக் காந்தி தலா 3 பவுண்டரி சிக்ஸருடன் 52* (32) ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற வைத்த நிலையில் பெரிய இலக்கை நிர்ணயிக்க தவறி போராடிய திருச்சி சார்பில் அதிகபட்சமாக காட்சன் 3 விக்கெட்டுகளும் ஈஸ்வரன் 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

- Advertisement -

இந்த வெற்றிக்கு பந்து வீச்சில் 4 ஓவரில் ஒரு மெய்டன் உட்பட வெறும் 9 ரன்களை மட்டுமே கொடுத்த அபிஷேக் டன்வர் 3 விக்கெட்டுகளை எடுத்து முக்கிய பங்காற்றியதால் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். குறிப்பாக சேப்பாக்கத்திற்கு எதிராக நடைபெற்ற கடந்த போட்டியில் கடைசி ஓவரின் கடைசி பந்தில் நோபால்களை போட்டு தள்ளிய அவர் 18 ரன்களை வாரி வழங்கி தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

அத்துடன் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் சேர்த்து ஒரு பந்தில் அதிக ரன்கள் வழங்கிய இந்திய வீரர் என்ற படுமோசமான சாதனையும் படைத்த அவர் அன்றைய நாளில் ஜீரோவாக தலை குனிந்து சென்றார். ஆனாலும் மனம் தளராமல் பயிற்சிகளை எடுத்து இந்த போட்டியில் போராடிய அவர் மிகச் சிறப்பாக செயல்பட்டு ஆட்டநாயகன் விருது வென்று ஹீரோவாக தலை நிமிர்ந்து சென்று தன்னுடைய தரத்தை நிரூபித்தார் என்றே சொல்லலாம்.

இதையும் படிங்க:கேப்டன் பதவி 100% காலி, விராட் கோலி செஞ்ச தப்ப நீங்களும் பண்ணிருக்கீங்க – ரோஹித்தை விளாசிய ஆகாஷ் சோப்ரா

அதனால் முதல் போட்டியில் தோற்றிருருந்த சேலம் இந்த 2வது போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்து பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் பயணத்தை துவக்கியுள்ளது. மறுபுறம் 2 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்த திருச்சி புள்ளி பட்டியலில் 7வது இடத்திற்கு சரிந்துள்ளது.

Advertisement