ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 4ஆம் தேதி நடைபெற்ற 17வது லீக் போட்டியில் குஜராத்தை 3 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வீழ்த்தியது. அகமதாபாத் நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் கேப்டன் கில் 89*, சாய் சுதர்சன் 33, ராகுல் திவாடியா 23* ரன்கள் எடுத்த உதவியுடன் 200 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
அதைத் துரத்திய பஞ்சாப்புக்கு கேப்டன் ஷிகர் தவான் 1, ஜானி பேர்ஸ்டோ 22, பிரப்சிம்ரன் சிங் 35, சாம் கரண் 5, சிக்கந்தர் ராசா 15, ஜிதேஷ் சர்மா 16 என முக்கிய வீரர்கள் குறைந்த ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் பஞ்சாப்பின் வெற்றி கேள்விக்குறியான போது மிடில் ஆர்டரில் அதிரடியாக விளையாடிய சசாங் சிங் 6 பவுண்டரி 4 சிக்சருடன் 61* (29) ரன்கள் குவித்து காப்பாற்றினார்.
அதிஷ்டமான பஞ்சாப்:
அவருடன் அசுடோஸ் சர்மா 31 (17) ரன்கள் எடுத்ததால் 19.5 ஓவரில் இலக்கை தொட்டு பஞ்சாப் வெற்றது. இந்த வெற்றிக்கு சந்தேகமின்றி 61* ரன்கள் அடித்து முக்கிய பங்காற்றிய சசாங் சிங் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். முன்னதாக டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் நடைபெற்ற 2024 ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் 19 வயதாகும் சசாங் சிங் எனும் இளம் வீரரை பஞ்சாப் நிர்வாகம் வாங்க முயற்சித்தது.
அப்போது அதே வீரர்களின் பட்டியலில் 32 வயதாகும் சசாங் சிங் பெயரும் இருந்தது. எனவே ஏலதாரர் மல்லிகா அந்த பெயரை ஏலத்திற்காக அழைத்தார். அப்போது பஞ்சாப் அணியினர் 19 வயதாகும் சசாங் சிங் என்று நினைத்துக் கொண்டு அந்த வீரரை வாங்கியது. ஆனால் வாங்கி முடித்த பின்பே அது 32 வயதாகும் சசாங் சிங் என்று தெரிய வந்ததால் பஞ்சாப் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா அதைத் திரும்ப பெறுமாறு ஏலதாரரிடம் கேட்டுக் கொண்டார்.
இருப்பினும் விதிமுறைப்படி அதை செய்ய முடியாது என மல்லிகா மறுப்பு தெரிவித்துவிட்டதால் வேறு வழியின்றி 32 வயதாகும் சசாங் சிங்கை 20 லட்சத்துக்கு பஞ்சாப் வாங்கியது. அது பற்றிய சில வதந்திகள் வந்த போதிலும் கடைசியில் தாங்கள் சரியான வீரரை வாங்கியதாக பஞ்சாப் நிர்வாகம் அறிவித்தது. அப்படி துரதிஷ்டவசமாக வாங்கப்பட்ட சசாங் சிங் இப்போட்டியில் 70/4 என தடுமாறிய நிலையில் மற்ற வீரர்கள் கைகொடுக்க தவறிய போது அபாரமாக விளையாடி பஞ்சாப்புக்கு வெற்றி எனும் அதிர்ஷ்டத்தை பெற்றுக் கொடுத்தார்.
இதையும் படிங்க: அதுக்காக தவான் பாய்க்கு நன்றி சொல்றேன்.. குஜராத் வெற்றியை பறித்த அசுடோஸ் சர்மா பேட்டி
சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த அவர் உள்ளூரில் 55 டி20 போட்டிகளில் 724 ரன்கள் 15 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். அத்துடன் ஐபிஎல் தொடரில் டெல்லி, ராஜஸ்தான், ஹைதராபாத் போன்ற அணிகளில் வாங்கப்பட்டும் வாய்ப்பு பெறாமல் பெரும்பாலும் பெஞ்சில் அமர்ந்திருந்த அவர் 32 வயதாகியும் மனம் தளராமல் போராடி இப்போட்டியில் சாதித்துள்ளது ரசிகர்களை பாராட்ட வைக்கிறது.



