IND vs PAK : இந்தியா – பாகிஸ்தான்.. முதல் ஆசிய கோப்பை போட்டி நடக்க வாய்ப்பே இல்லையாம் – வெளியான அறிக்கை இதோ

IND vs PAK Asia Cup
- Advertisement -

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 30ஆம் தேதி பாகிஸ்தானில் கோலாகலமாக துவங்கியது. விரைவில் இந்திய மண்ணில் நடைபெறும் 2023 ஐசிசி உலக கோப்பைக்கு ஆசிய கண்டத்தை சேர்ந்த அணிகள் தயாராகும் வகையில் 50 ஓவர் போட்டிகளாக நடக்கும் இத்தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் தங்களுடைய சொந்த மண்ணில் கத்துக்குட்டி நேபாளை எதிர்பார்த்ததை போலவே துவம்சம் செய்து 238 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது. அதனால் குரூப் ஏ புள்ளி பட்டியலில் 2 புள்ளிகளையும் பெற்ற அந்த அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை உறுதி செய்துள்ளது.

இந்த நிலையில் அதே பிரிவில் இடம் பிடித்துள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் போட்டியில் தற்போது வெற்றி வாகை சூடியுள்ள பாகிஸ்தானை வரும் செப்டம்பர் 2ஆம் தேதி இலங்கையின் பல்லேக்கேல் நகரில் எதிர்கொள்கிறது. அடுத்த மாதம் நடைபெறும் உலகக் கோப்பைக்கு முன்பாக இப்போதே தங்களுடைய பலவீனங்களை சரி செய்து இத்தொடரில் பாகிஸ்தானை வீழ்த்துவதற்கு தயாராகி வரும் இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் காயத்திலிருந்து குணமடைந்து களமிறங்குவது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

தயாரான மழை:
இருப்பினும் கேஎல் ராகுல் காயத்தால் வெளியேறியுள்ள நிலையில் விக்கெட் கீப்பராக விளையாடப் போவது யார் என்று எதிர்பார்ப்பும் காணப்படுகிறது. அப்படி காயங்கள் மற்றும் சோதனைகளால் குழப்பமடைந்துள்ள இந்திய அணியை இப்போட்டியில் தோற்கடித்து பாகிஸ்தான் தங்களுடைய உண்மையான வெற்றி நடையை துவங்குமா என்ற எதிர்பார்ப்பு அந்நாட்டு ரசிகர்களிடம் காணப்படுகிறது. ஆனால் இவ்விரு அணிகளை காட்டிலும் இந்த போட்டியில் விளையாடுவதற்கு மழை மிகுந்த ஆர்வத்துடன் பல்லேக்கேல் நகரில் விளையாட வருவதற்கு தயாராகியுள்ளது ரசிகர்களுக்கு ஏமாற்றமான செய்தியாக அமைந்துள்ளது.

ஆம் செப்டம்பர் 2ஆம் பல்லேக்கேல் நகரில் சராசரியாக 90% இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு அதிகப்படியான வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவிக்கிறது. குறிப்பாக இலங்கையின் நேரப்படி போட்டி துவங்கும் மதியம் 3 மணிக்கு 80% என்றளவில் இருக்கும் மழையின் அளவு 4 மணி வரை கொஞ்சமும் குறையாமல் தொடர்ந்து வெளுத்து வாங்கும் என்று வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இருப்பினும் மாலை 5 மணிக்கு மேல் இரவு முழுவதும் 60% என்றளவுக்கு மழை குறைவதற்கு வாய்ப்பில்லை எனவும் தெரிய வருகிறது. ஆனாலும் வானிலையை எப்போது மனிதர்களால் துல்லியமாக கணிக்க முடியாது என்றாலும் இந்த அறிக்கையில் 50% குறையாமல் மழை பெய்யும் என்று தெரிய வருகிறது. அதன் அடிப்படையில் பார்க்கும் போது இந்த போட்டி ஓவர்கள் குறைக்கப்பட்டு கூட நடைபெறுவதில் பெரிய சிக்கல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: எல்லாரும் சொல்ற மாதிரி நம்ம இந்திய அணிக்கு அந்த ப்ளஸ் கிடையாது – 2023 உலக கோப்பை பற்றி பயிற்சியாளரே கவலை பேட்டி

ஒருவேளை போட்டி ரத்து செய்யப்பட்டால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் வழங்கப்படும். எனவே சுமார் ஒரு வருடம் கழித்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி முழுமையாக நடைபெறுவதற்கு வருண பகவான் வழி விட வேண்டும் என்பதே தற்போதைய நிலைமையில் இருநாட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement