- Advertisement -
இந்திய கிரிக்கெட்

தங்கத்திலும் சொக்கத்தங்கம், சுமாரான பார்மில் தவிக்கும் ராகுல் பற்றி கோச் டிராவிட் சொல்வது என்ன?

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலகக்கோப்பையின் சூப்பர் 12 சுற்று போட்டிகள் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதில் 2007க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் விளையாடி வரும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா முதலிரண்டு போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்தை தோற்கடித்தாலும் 3வது போட்டியில் தென் ஆப்பிரிக்காவிடம் வீழ்ந்து ஹாட்ரிக் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டது. இதனால் அரையிறுதிக்கு செல்ல எஞ்சிய போட்டிகளில் வெல்லும் முனைப்புடன் களமிறங்கும் இந்தியா அடுத்ததாக வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. முன்னதாக இந்த தொடரில் துணை கேப்டனாக விளையாடி வரும் கேஎல் ராகுல் பவர்பிளே ஓவர்ர்களில் அதிரடியான தொடக்கத்தை கொடுக்க வேண்டிய ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கினாலும் தடவலான பேட்டிங்கை வெளிப்படுத்தி பின்னடைவை ஏற்படுத்தி வருகிறார்.

குறிப்பாக 4, 9, 9 என இதுவரை நடைபெற்ற 3 போட்டிகளிலும் அதிக பந்துகளை எதிர்கொண்ட அவர் அடுத்து வரும் பேட்ஸ்மேன்களுக்கு பாரத்தை ஏற்படுத்தும் வகையில் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டானது ரசிகர்களை கடுப்பாக வைத்தது. கடந்த 2019க்குப்பின் இந்தியாவின் லேட்டஸ்ட் ரன் மெஷினாக அவதரித்து ரோகித் சர்மாவுடன் களமிறங்கும் தொடக்க வீரராக தனக்கென்று நிரந்தரமான இடத்தை பிடித்த அவர் நாட்கள் செல்ல செல்ல அதை தக்க வைத்துக் கொள்வதற்காக திறமை இருந்தும் அவுட்டாகி விடுவோமோ என்ற பயத்தில் தடவுகிறார்.

- Advertisement -

தங்கத்திலும் தங்கம்:
இல்லையென்றால் பெரிய இன்னிங்ஸ் விளையாடினாலும் சுயநலத்துடன் குறைவான ஸ்ட்ரைக் ரைட்டில் விளையாடி தோல்விக்கு காரணமாக அமைகிறார். அதனால் கடுப்பாகும் ரசிகர்கள் 2019 உலகக்கோப்பை செமி பைனல் முதல் இந்த வருடம் பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய மற்றும் டி20 உலகக்கோப்பை போட்டிகள் வரை அழுத்தமான பெரிய போட்டிகளில் சொதப்பும் ராகுல் கத்துக் குட்டிகளை அடித்து இந்திய அணியில் காலத்தை கடத்துகிறார் என்பதை ஆதாரத்துடன் நிரூபித்து வருகிறார்கள்.

மேலும் இவரைத் தொடர்ந்து வைத்திருந்தால் நம்மால் உலக கோப்பையை வெல்ல முடியாது என்று கொந்தளிக்கும் ரசிகர்கள் அடுத்த போட்டியிலேயே அதிரடியாக நீக்குமாறு கோரிக்கை வைக்கிறார்கள். இந்நிலையில் கேஎல் ராகுல் தரமான பேட்ஸ்மேன் என்று தெரிவிக்கும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இந்த உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி போட்டியில் அவர் அடித்த ரன்களை மறந்து விடக்கூடாது என்று கூறியுள்ளார். இதனால் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்கப்படும் என மறைமுகமாக தெரிவிக்கும் அவர் இது பற்றி வங்கதேசத்துக்கு எதிரான போட்டிக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அவர் ஏற்கனவே தன்னை நிரூபித்த அற்புதமான கிரிக்கெட் வீரர் என்று நினைக்கிறேன். அவர் பேட்டிங் சூப்பராக செய்கிறார். டி20 கிரிக்கெட்டில் குறிப்பாக டாப் ஆர்டர் வீரர்களுக்கு இது போன்ற தடுமாற்றங்கள் ஏற்படுவது வழக்கமாகும். சவாலான இந்த உலக கோப்பையின் பயிற்சி போட்டியில் அவர் பட் கமின்ஸ், மிட்சேல் ஸ்டார்க் போன்ற தரமான பவுலர்களை எதிர்கொண்டு 60, 70 ரன்களை அடித்தார். அதனால் அடுத்த சில போட்டிகளில் அவர் சிறப்பாக செயல்படுவார் என்று நான் நம்புகிறேன்”

“அவருடைய தரம் மற்றும் திறமையை அறிந்துள்ள நாங்கள் ஆஸ்திரேலிய சூழ்நிலைகளில் சிறப்பாக செயல்படுவார் என்பதையும் அறிவோம். அந்த வகையில் அவர் தற்சமயத்தில் அடிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். மேலும் இது போன்ற தருணங்களை சமாளிப்பதற்காக அவரைப் போன்ற வீரர்களிடம் நாங்கள் பேசுவதை பற்றி இங்கே சொல்ல முடியாது. ஆனால் எங்களுடைய ஆதரவு அவருக்கு உண்டு என்பதை ராகுல் அறிவார். மேலும் அவர் சில காயங்களை சந்தித்தார் என்பதையும் மறக்கக்கூடாது. அத்துடன் அவர் கேப்டன் ரோகித் சர்மாவின் நம்பிக்கை பெற்றுள்ளார்”.

இதையும் படிங்க : அப்போ பும்ரா நேராக ஐபிஎல் தொடரில் விளையாடுவார் அதானே? ரசிகர்களின் கேள்விக்கு சேட்டன் சர்மா கூறும் பதில் என்ன?

“அதனால் வெளியே என்ன பேசுகிறார்கள் என்பதில் நாங்கள் கவனம் செலுத்துவதில்லை. மாறாக எங்களது வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து எங்களுடைய ஆலோசனைகளை பின்பற்றுகிறோம். மேலும் வீரர்கள் அனைவரும் மேடு பள்ளங்களை சந்திப்பார்கள் என்பதை நாங்கள் புரிந்துள்ளோம். அந்த வகையில் நாங்கள் அனைத்து வீரர்களுக்கும் ஆதரவளிக்கிறோம். ஏனெனில் அவர்களிடம் தரம் இருப்பதாலேயே இந்த அணியில் தேர்வாகியுள்ளார்கள்” என்று கூறினார்.

- Advertisement -
Published by