WPL 2023 : என்னாங்க பித்தலாட்டமா இருக்கு? வெற்றி நடை போடும் மும்பை, 2 முறை அவுட் கொடுத்து வாபஸ் பெற்ற நடுவர்

LBW DRS
- Advertisement -

2023 மகளிர் ஐபிஎல் தொடரில் மார்ச் 12ஆம் தேதியன்று நடைபெற்ற 10வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் உத்திரபிரதேச வாரியர்ஸ் அணிகள் மோதின. மும்பையில் உள்ள ப்ராபோர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற உத்தரபிரதேசம் முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 159/6 ரன்கள் சேர்த்தது. அந்த அணிக்கு வைத்யா 6, கிரண் நவ்கிர் 17 என முக்கிய வீராங்கனைகள் சொற்ப ரன்களில் அவுட்டானாலும் கேப்டன் அலிசா ஹீலி 7 பவுண்டரி 1 சிக்சருடன் 58 (46) ரன்களும் தஹிலா மெக்ராத் 9 பவுண்டரியுடன் 50 (37) ரன்கள் எடுத்த நிலையில் மும்பை சார்பில் அதிகபட்சமாக சைகா இசாய்க் 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.

அதை தொடர்ந்து 160 ரன்களை துரத்திய மும்பைக்கு ஹெய்லே மேத்தியூஸ் 12 (17) ரன்களில் அவுட்டானலும் தொடக்க வீராங்கனை யாஷிகா பாட்டியா 8 பவுண்டரி 1 சிக்சருடன் 42 (27) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதை வீணடிக்காமல் அடுத்து வந்த நட் ஸ்கீவர் 6 பவுண்டரி 1 சிக்சருடன் 45* (31) ரன்களும் கேப்டன் ஹர்மன்பிரித் கௌர் 9 பவுண்டரி 1 சிக்சருடன் 53* (33) ரன்களும் எடுத்து சூப்பர் பினிஷிங் கொடுத்தனர். அதனால் 17.3 ஓவரிலேயே 164/2 ரன்கள் எடுத்த மும்பை 8 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி பெற்றது.

- Advertisement -

என்னாங்க பித்தலாட்டம்:
இந்த தொடரில் ஆரம்பம் முதலே வெற்றி நடை போட்டு வரும் மும்பை இதுவரை பங்கேற்ற 4 போட்டிகளிலும் 4 தொடர் வெற்றிகளை பதிவு செய்த முதல் அணியாக சாதனை படைத்து புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து பிளே ஆப் சுற்று வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது. அதை விட இந்த போட்டியில் 160 ரன்களை துரத்திய மும்பைக்கு எதிராக சோபி எக்லஸ்டென் வீசிய 5வது ஓவரின் 5வது பந்தய எதிர்கொண்ட ஹெய்லே மேத்தியூஸ் சரியாக அடிக்க தவற விட்டார். அதனால் உத்தரப்பிரதேச அணியினர் எல்பிடபிள்யூ முறையில் அவுட் கேட்ட நிலையில் நடுவர் அவுட் கொடுக்க மறுத்து விட்டார்.

அதைத்தொடர்ந்து உத்தரப்பிரதேச அணியினர் டிஆர்எஸ் எடுத்த நிலையில் ஹெய்லே மேத்தியூஸ் பாதங்களில் பந்து பட்டது அல்ட்ரா ஏஜ் தொழில்நுட்பத்தில் தெளிவாக தெரிந்தது. அத்துடன் பால் டிராக்கிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்திய 3வது நடுவர் பந்து ஸ்டம்பில் பட்டதால் களத்தில் இருந்த நடுவர் கொடுத்த முடிவை மாற்றி அவுட் என அறிவித்தார். ஆனால் அதில் திருப்தியடையாத ஹெய்லே மேத்தியூஸ் மீண்டும் 3வது நடுவர் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக டிஆர்எஸ் ரிவியூ எடுத்தார்.

- Advertisement -

குறிப்பாக இந்த தொடரில் நடுவர் வழங்கும் எந்த தீர்ப்பும் திருப்தியடையாமல் இருக்கும் பட்சத்தில் அதை ரிவியூ எடுக்கும் புதிய விதிமுறையை ஐபிஎல் நிர்வாகம் கொண்டு வந்துள்ளது. அதை பயன்படுத்தி 3வது நடுவர் கொடுத்த தீர்ப்பை மும்பை மீண்டும் பரிசீலனை செய்தது. அப்போது மீண்டும் அதை சோதித்த 3வது நடுவர் பந்து முதலில் பேட்டில் பட்டு பின்னர் காலில் உரசியது போல தெரிய வந்ததால் மாற்றி வழங்கிய தனது தீர்ப்பை வாபஸ் பெற்றுக்கொண்டு அவுட் இல்லை என்று மீண்டும் அறிவித்தார். அதை தொடர்ந்து போட்டி நடைபெற்றாலும் முதலில் உத்தரப்பிரதேச அணி ரிவ்யூ எடுத்த போது அவுட் என்று வழங்கிய 3வது நடுவர் மீண்டும் மும்பை அணி ரிவியூ எடுத்த போது அவுட் இல்லை என்று அறிவித்தது ரசிகர்களை குழப்பமடைய வைத்தது.

அதனால் முதல் சோதனையிலேயே நன்றாக சோதித்து சரியான முடிவை வழங்க வேண்டியது தானே? என்று நடுவரை ரசிகர்கள் சரமாரியாக விமர்சிக்கிறார்கள். அதை விட முதல் சோதனையில் பந்து காலில் பட்டது போல் தெரிந்த அதே வீடியோவை 2வது முறை ஆராயும் போது திடீரென்று பந்து எப்படி காலில் படாமல் பேட்டில் பட்டது போல் தெரிந்தது? என்றும் குழப்பமடையும் ரசிகர்கள் “என்னையா இது பித்தலாட்டம்” என அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்கள்.

இதையும் படிங்க:IND vs AUS : இனிமே நோ ப்ராப்லம். ஆடாமலே ஜெயிச்ச இந்திய அணி – உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி

அத்துடன் சில ரசிகர்கள் இது ஆடவர் ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக நடுவர்கள் ஆதரவாக செயல்படுவது போல் இருப்பதாகவும் வெளிப்படையாக பேசுகிறார்கள். மேலும் டிஆர்எஸ் முறையை பயன்படுத்தி தீர்ப்பு சரியாக இருந்தாலும் இல்லையென்றாலும் ஒரு முறை மட்டுமே அவுட் கொடுக்கும் நிலையை உருவாக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.

Advertisement