
கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. அதனை தொடர்ந்து 2025 ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியனாக களம் கண்ட அணி இந்த ஆண்டும் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இந்த 2025 ஆம் ஆண்டு அவர்களுக்கு மிக மோசமான தொடராக மாறியுள்ளது.
ஏனெனில் இதுவரை தாங்கள் விளையாடியுள்ள 9 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் 7 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ள கொல்கத்தா அணி இனிவரும் ஐந்து போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என்கிற கடினமான சூழலில் உள்ளது.
அதோடு இனிவரும் ஐந்து போட்டிகளிலும் பலமான அணிகளுக்கு எதிராக அவர்கள் விளையாட இருப்பதால் இந்த ஆண்டு அவர்கள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவது மிகவும் கடினமாக மாறியுள்ளது. கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற அந்த அணி இந்த ஆண்டு இப்படி மிகப்பெரிய சரிவை சந்தித்ததற்கு சில வீரர்களின் மோசமான ஃபார்ம் தான் காரணம் என்று பேசப்பட்டது.
இந்நிலையில் கே.கே.ஆர் அணியில் கடந்த ஆண்டு இருந்த கௌதம் கம்பீர் அளவிற்கு தற்போது பயிற்சி குழுவில் இருக்கும் நபர்களால் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை என அந்த அணியின் நட்சத்திர இளம் வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணா தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : கௌதம் கம்பீரை சுற்றி பெரிய ஈர்ப்பு இருக்கும்.
அவர் அணிக்குள் இருக்கும்போது வீரர்கள் அனைவருமே ஒரு வேட்கையுடன் இருப்பார்கள். தற்போதைய கே.கே.ஆர் அணியில் பயிற்சியாளர்கள் மற்றும் நிர்வாகிகளின் குழுவில் பெரிய மாற்றம் இல்லை ஆனால் கம்பீரின் தாக்கத்தை நாங்கள் தவறவிடுவதாக நினைக்கிறேன். மற்ற நிர்வாகிகள் எங்களை சரியாக கையாண்டாலும் கம்பீர் அமைத்து தரும் சூழல் வித்தியாசமானது என்று ஹர்ஷித் தானா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : இங்கிலாந்தில் குறைச்சு மதிப்பிட்ட என்னை 17 வயசு சச்சின் அடிச்ச மாதிரி.. சூர்யவன்சி அசத்திட்டாரு.. பிஷப் பேட்டி
என்னதான் அவர் இப்படி கூறியிருந்தாலும் கே.கே.ஆர் அணி இந்த ஆண்டு அடைந்து வரும் சரிவிற்கு காரணம் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரை வெளியேற்றியதும், நட்சத்திர வெளிநாட்டு வீரர்கள் அனைவரும் பார்மில் இல்லாததுமே காரணம் என்கிற விமர்சனமும் அவர்கள் மீதுள்ளது குறிப்பிடத்தக்கது.