ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 28ஆம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெற்ற 47வது போட்டியில் குஜராத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் தோற்கடித்தது. அந்தப் போட்டியில் குஜராத் நிர்ணயித்த 210 ரன்கள் இலக்கை ராஜஸ்தான் 15.5 ஓவரிலேயே அடித்து நொறுக்கி வென்றது. அந்த வெற்றிக்கு 14 வயது இளம் வீரர் வைபவ் சூரியவன்சி சதத்தை அடித்து 101 (38) ரன்கள் விளாசி முக்கிய பங்காற்றினார்.
அத்துடன் டி20 வரலாற்றில் இளம் வயதில் சதத்தை அடித்த வீரர் என்ற உலக சாதனையையும் அவர் நிகழ்த்தினார். மேலும் 35 பந்துகளில் 100 ரன்கள் அடித்த அவர் ஐபிஎல் வரலாற்றில் வேகமான சதத்தை அடித்த இந்திய வீரராகவும் சாதனை படைத்தார். அவருக்கு சச்சின் டெண்டுல்கர் முதல் ஏராளமான முன்னாள் இந்நாள் வீரர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
குறைத்து மதிப்பிட்டு:
இந்நிலையில் சூரியவன்சியை பார்க்கும் போது தம்முடைய கேரியரின் கடைசி காலத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற உள்ளூர் போட்டியில் 17 வயது சச்சின் டெண்டுல்கர் தம்மை அடித்து நொறுக்கியது நினைவுக்கு வருவதாக வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் இயன் பிஷப் தெரிவித்துள்ளார். அந்தப் போட்டியில் இவர் எங்கே நம்மை அடிக்கப் போகிறார் என்று குறைத்து மதிப்பிட்டு சச்சினுக்கு எதிராக பவுலிங் செய்ததாகவும் பிஷப் கூறியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “டெர்பிஷைர் அணிக்காக நான் விளையாடிய போது செஸ்டர்ஃபீல்டு மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக ஒரு போட்டியில் விளையாடினோம். நாங்கள் முதலில் பேட்டிங் செய்து எவ்வளவு ரன்கள் அடித்தோம் என்பது நினைவில்லை. அந்த மைதானத்தில் நல்ல பவுன்ஸ் இருந்தது. அந்தப் போட்டியில் என்னுடைய மார்பளவு உயரம் மட்டுமே இருந்த சச்சின் டெண்டுல்கர் வந்து சில பந்துகளை எதிர்கொண்டார்”
நொறுக்கிய சச்சின்:
“அதைப் பார்த்த நான் சரி இவரை வைத்து சமாளித்து விடலாம் என்று நினைத்தேன். அந்த சிறுக் குழந்தை என்னை எங்கே அடிக்க முடியாது என்று நினைத்தேன். அதனால் தூரமாக இருந்து ஓடி வந்த நான் கொஞ்சம் பேக் ஆஃப் லென்த் பந்தை வீசி தவறு செய்தேன். அந்தப் பந்தை சச்சின் மைதானத்தின் டீப் மிட் விக்கெட் திசையின் ஓரத்திலிருந்த மரத்தின் பக்கம் தூக்கி அடித்தார். இதற்கு முன் அது போன்ற என்னுடையப் பந்தை வேறு யாரும் அவ்வளவு தூரத்திற்கு அடித்துப் பார்த்ததில்லை”
இதையும் படிங்க: 207/3 டூ 261க்கு ஆல் அவுட்.. 2க்கு 2.. ப்ரதிகா உலக சாதனை.. மகளிர் முத்தரப்பு தொடரில் தெ.ஆ’வை சாய்த்த இந்தியா
“17 வயதில் அன்று என்னை சச்சின் டெண்டுல்கர் அடித்ததால் இயன் பிஷப் கேரியர் பகல் வெளிச்சத்தின் முடிவில் இருக்கும் ஆச்சரியத்தை உணர்ந்தேன். இந்தக் குழந்தை அதை விட இளமையாக 14 வயதில் உலகத்தரம் வாய்ந்த பவுலர்களை அடித்தது. அதிலும் சிராஜ், பிரசித் கிருஷ்ணா போன்றவர்களை அடித்தது உங்களை ஆச்சரியமடைய வைத்திருக்கலாம்” என்று கூறினார்.



