ரவிந்திர ஜடேஜாவை பழிக்கு பழி தீர்த்த ஆர்சிபி வீரர் – ரசிகர்களை எகிற வைக்கும் பரபர பின்னணி

- Advertisement -

கிரிக்கெட்டில் எப்போதுமே தங்களது அணிக்காக விளையாடும் வீரர்கள் முழு திறமையை வெளிப்படுத்தி எதிரணியினருடன் வெற்றிக்காக போராடுவார்கள். அதில் ஏதேனும் ஒரு சமயங்களில் ஒரு குறிப்பிட்ட வீரர் எதிரணி வீரரிடம் அடி வாங்கினால் ஒருசில வீரர்கள் அதை அப்படியே மறக்காமல் வைத்திருந்து மீண்டும் ஒரு சமயம் வரும்போது மிகச் சிறப்பாக செயல்பட்டு பழி வாங்கி விடுவார்கள். அதுபோன்ற தருணம் தற்போது பரபரப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடரில் நடந்தேறியதைப் பற்றி பார்ப்போம். புனே நகரில் மே 4-ஆம் தேதி நடைபெற்ற 49-வது லீக் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் மோதிக்கொண்டன.

maxwell 1

- Advertisement -

கடைசி வரை மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற அப்போட்டியில் சென்னையை 13 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த பெங்களூரு இந்த வருடம் பங்கேற்ற 11 போட்டிகளில் 6-வது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் 4-வது இடத்திற்கு முன்னேறி பிளே-ஆப் சுற்று வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூருவுக்கு அதன் கேப்டன் டு பிளேஸிஸ் 38 (22), மஹிபால் லோம்ரர் 42 (27), விராட் கோலி 30 (33) என முக்கிய வீரர்கள் தேவையான ரன்களை எடுத்ததால் 20 ஓவர்களில் அந்த அணி 173/8 ரன்கள் சேர்த்தது.

சென்னை பரிதாபம்:
அதை துரத்திய சென்னைக்கு ருதுராஜ் கைக்வாட் 28 (23) டேவோன் கான்வே 56 (37) என நல்ல ரன்களை அதிரடியாக எடுத்து 54 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்தனர். ஆனால் நடுவரிசையில் ராபின் உத்தப்பா 1 (3) அம்பத்தி ராயுடு 10 (8) ஆகிய முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் ஏற்பட்ட சரிவின் போது அதிரடி காட்டிய மொயின் அலி 34 (27) ரன்கள் எடுத்து வெற்றிக்காகப் போராடி ஆட்டமிழந்தார். இறுதியில் எம்எஸ் தோனியும் கடைசி நேரத்தில் 2 ரன்னில் அவுட்டாகி கைகொடுத்த தவறியதால் 20 ஓவர்களில் 160/8 ரன்களை மட்டுமே எடுத்து அந்த அணி பரிதாபமாக தோற்றது. பெங்களூரு சார்பில் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை எடுத்த ஹர்ஷல் பட்டேல் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

Hasaranga Moin Ali

இதனால் பங்கேற்ற 10 போட்டிகளில் 7-வது தோல்வியை பதிவு செய்த நடப்புச் சாம்பியன் சென்னை மும்பையைத் தொடர்ந்து லீக் சுற்றுடன் 2-வது அணியாக வெளியேறுவது உறுதியாகியுள்ளது. முன்னதாக இந்த போட்டியில் கடைசி 5 ஓவர்களில் வெற்றிக்கு 56 ரன்கள் தேவை என்ற நிலையில் சிறப்பாக பேட்டிங் செய்ய வேண்டும் என்பதற்காக கேப்டன் பதவியை தோனியிடம் ஒப்படைத்த ரவீந்திர ஜடேஜா களத்தில் இருந்தார்.

- Advertisement -

பழி வாங்கிய ஹர்ஷல்:
அப்போது 16-வது ஓவரை வீசிய பெங்களூருவின் நம்பிக்கை நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் படேல் வீசிய அந்த ஓவரின் கடைசி பந்தில் ரவீந்திர ஜடேஜா விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது அந்த விக்கெட்டை ஜடேஜாவை பார்த்த வகையில் மிகுந்த ஆக்ரோசமாக ஹர்ஷல் படேல் கொண்டாடியது அனைவரையும் யோசிக்க வைத்தது. அதற்கான காரணத்தை அறிவதற்காக அப்படியே 2021 ஐபிஎல் தொடருக்கு சென்று மும்பை வான்கடே மைதானத்தில் இதே சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதிய போட்டியை பற்றி பார்ப்போம்.

அன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை 19 ஓவர்களில் 154/4 என்ற சுமாரான நிலையில் இருந்தபோது கடைசி ஓவரை வீசுதற்காக அந்த வருட ஐபிஎல் தொடரில் கொத்துக்கொத்தாக விக்கெட்டுகளை அள்ளி மும்பை போன்ற வலுவான அணிக்கு எதிராக ஹாட்ரிக் உட்பட 5 விக்கெட்டுகளை எடுத்து ஊதா தொப்பியை அணிந்திருந்த ஹர்ஷல் படேல் வந்தார். அப்போது யாருமே எதிர்பாராத வகையில் முதல் 2 பந்துகளில் அடுத்தடுத்து சிக்சர்களை ஜடேஜா பறக்க விட்ட நிலையில் 3-வது பந்தில் ஹர்ஷல் படேல் வீசிய நோ பால் பந்தில் மீண்டும் சிக்சரை பறக்க விட்ட ஜடேஜா கொஞ்சம் கூட கருணை காட்டாமல் மீண்டும் வீசப்பட்ட 3-வது பந்தில் மெகா சிக்சரை பறக்க விட்டார்.

- Advertisement -

37 ரன்கள்:
அதன்பின் 4-வது பந்தில் அவர் கொடுத்த கேட்சை டானியல் கிறிஸ்டின் கோட்டைவிட அதில் 2 ரன் எடுத்த ஜடேஜா அடுத்த பந்தில் சிக்ஸரும் கடைசி பந்தில் 4 ரன்களும் என மொத்தம் 37 ரன்களை பறக்கவிட்டு ஐபிஎல் வரலாற்றில் 20-வது ஓவரில் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேன் மற்றும் ஒரு ஓவரில் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற கிறிஸ் கெய்ல் சாதனையை சமன் செய்து வரலாறு படைத்தார்.

அந்த தொடரில் அதுவரை அற்புதமாக பந்து வீசிய ஹர்சல் படேலை அந்த ஒரே ஓவரில் அடித்து துவைத்த ஜடேஜா காலத்திற்கும் மறக்காத வகையில் ஒரு அவப்பெயரை பரிசளித்து சென்னைக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்து இருந்தார். ஆனால் அதை மறக்காமல் வைத்திருந்த ஹர்ஷல் பட்டேல் நேற்றைய போட்டியில் அவரை முக்கியமான நேரத்தில் அவுட் செய்து வெறித்தனமாக கொண்டாடினார்.

இதையும் படிங்க : பேசாம 2 மேட்ச் பெஞ்ச்ல உட்கார வைங்க ! நட்சத்திர சி.எஸ்.கே வீரர் மீது அதிருப்தியடைந்து கலாய்க்கும் ரசிகர்கள்

இதைப்பார்த்த ரசிகர்கள் 37 ரன்கள் அடித்ததற்கு ஜடேஜாவை பழிவாங்கி விட்டார் என்று சமூக வலைதளங்களில் வெளிப்படையாகவே பதிவிட்டு வருகிறார்கள்.

Advertisement