இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடுகிறது. அதற்காக அறிவிக்கப்பட்டுள்ள 3 வகையான இந்திய அணியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பிப்ரவரி மாதம் நடைபெறும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடருக்கான டெஸ்ட் அணி மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. ஏனெனில் வரும் ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற அத்தொடரில் நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ள இந்திய அணியில் தற்சமயத்தில் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் அபாரமாக செயல்பட்டு நல்ல பார்மில் இருக்கும் சூரியகுமார் யாவும் மற்றும் இசான் கிசான் முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
காயமடைந்த ரிஷப் பண்ட் பதிலாக விக்கெட் கீப்பராக விளையாடும் கேஎஸ் பரத்துக்கு பேக்-அப் விக்கெட் கீப்பராக இசான் கிசான் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் சமீப காலங்களில் டி20 கிரிக்கெட்டில் அபாரமாக செயல்பட்டு வரும் சூரியகுமார் ரஞ்சி கோப்பையிலும் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் முதல் முறையாக டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. ஆனால் அதற்காக அவர்களை விட மும்மடங்கு அற்புதமாக செயல்பட்டு உச்சகட்ட ஃபார்மில் இருக்கும் மற்றொரு இளம் வீரர் சர்பராஸ் கான் மீண்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளது ரசிகர்களையும் முன்னாள் வீரர்களையும் கடுப்பாக வைத்துள்ளது.
தவறான தேர்வு:
ஏனெனில் இந்தியாவுக்காக விளையாட லட்சியத்துடன் கடந்த சில வருடங்களாகவே ரஞ்சி கோப்பையில் முரட்டுத்தனமாக விளையாடி வரும் அவர் 2019க்குப்பின் 9 சதங்கள் 5 அரை சதங்கள் 3 இரட்டை சதங்கள் 1 முச்சதம் உட்பட 2289 ரன்களை 134.64 என்ற வியக்க வைக்கும் சராசரியில் குவித்து வருகிறார். குறிப்பாக தற்போது நடைபெற்று வரும் ரஞ்சிக் கோப்பையில் 431 ரன்களை 70.51 என்ற சராசரியில் வெளுத்து வாங்கி வரும் அவருக்கு இப்போது வாய்ப்பு கொடுக்கவில்லை என்றால் வயதாகி பார்மை இழந்த பின்பு வாய்ப்பு கொடுப்பீர்களா என்று தேர்வுக்குழுவை ரசிகர்கள் சரமாரியாக விளாசி வருகிறார்கள்.
சொல்லப்போனால் 38.76, 44.75 என்பதே இசான் கிசான் மற்றும் சூரியகுமார் ஆகியோருடைய உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட்டின் பேட்டிங் சராசரியாகும். ஆனால் சர்பராஸ் கான் 80.47 என்ற அற்புதமான பேட்டிங் சராசரியை கொண்டுள்ளார். ஆனாலும் வங்கதேசத்துக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்த காரணத்தால் இசான் கிசானும் டி20 கிரிக்கெட்டில் சரவெடியாக செயல்பட்டு வரும் காரணத்தால் சூரியகுமாரும் சம்பந்தமின்றி டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். ஆனால் அவர்களுக்கு நடைபெற்று வரும் இலங்கை ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வாய்ப்பு கொடுக்காமல் பெஞ்சில அமர வைக்கப்பட்டனர்.
மொத்தத்தில் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் அசத்துபவர்களுக்கு வெள்ளைப் பந்து அணியில் வாய்ப்பு கிடைக்காமல் பெஞ்சில் அமர வைக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட்டில் சுமாராக செயல்பட்டாலும் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்பதற்காக டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மறுபுறம் உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அபாரமாக செயல்பட்டும் இந்திய டெஸ்ட் அணியில் சர்பராஸ் கான் தேர்வு செய்யப்படவில்லை. இதிலிருந்து உள்ளூர் டெஸ்ட் தொடராக கருதப்படும் ரஞ்சி கோப்பையில் வெளிப்படுத்திய செயல்பாடுகளை கருத்தில் கொண்டு ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி தேர்வு செய்யப்படவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.
Ranji trophy performances should be the first criteria for test selections!
— Irfan Pathan (@IrfanPathan) January 14, 2023
Very hard on Sarfaraz Khan who has literally broken the door down in first class cricket. You can't do more than he has.
— Harsha Bhogle (@bhogleharsha) January 13, 2023
Spare a thought for Sarfaraz khan. I don’t understand what else he needs to do to get into the test team #DoddaMathu #CricketTwitter #INDvAUS
— Dodda Ganesh | ದೊಡ್ಡ ಗಣೇಶ್ (@doddaganesha) January 13, 2023
அதனால் ஏமாற்றமடைந்துள்ள முன்னாள் வீரர் இர்பான் பதான் “டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்படும் வீரர்கள் முதலில் ரஞ்சி கோப்பை செயல்பாடுகளை அடிப்படையாக வைத்தே தேர்வு செய்யப்பட வேண்டும்” என்று ட்விட்டரில் விமர்சித்துள்ளார். அந்த அடிப்படை கூட தெரியாமல் இந்திய தேர்வுக்குழு என்ன செய்கிறது என்ற வகையில் அவர் தேர்வுக்குழுவை விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க: உங்க இஷ்டத்துக்கு சான்ஸ் தர முடியாது அதை செஞ்சுட்டு வாங்க – ஜடேஜாவிடம் ஸ்ட்ரிக் காட்டிய பிசிசிஐ, காரணம் இதோ
அதே போல் உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அபாரமாக செயல்பட்டு தேர்வுக்குழுவின் கதவை அடித்து நொறுக்கியும் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது சர்ஃப்ராஸ் கான் நெஞ்சை உடைத்திருக்கும் என்று பிரபல வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே தெரிவித்துள்ளார். மேலும் தயவு செய்து இதை மீண்டும் செய்யாதீர்கள் என்றும் அவர் தேர்வுக்குழுவை விமர்சித்துள்ளார். அவர்களைப் போல இந்திய அணியில் விளையாடுவதற்கு சர்ப்ராஸ் கான் இன்னும் என்ன செய்ய வேண்டும்? என முன்னாள் இந்திய வீரர் டோட்டா கணேஷ் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்