என்னய்யா இப்டி திட்டுறீங்க? உங்களுக்கு இந்தியாவின் வெற்றி முக்கியமில்லையா – இந்திய ரசிகர்களுக்கு ஹர்ஷா போக்லே பதிலடி

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் இந்தியா முதலிரண்டு போட்டிகளில் 2016க்குப்பின் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து பின்னடைவுக்குள்ளானது. இருப்பினும் முக்கியமான 3வது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா தொடரை வெல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது. கயானாவில் நடைபெற்ற அப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயித்த 160 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவ் இத்தொடரில் முதல் முறையாக தன்னை உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் என்று நிரூபிக்கும் அளவுக்கு அதிரடியாக விளையாடி 84 ரன்கள் குவித்து வெற்றி பெற வைத்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

முன்னதாக அந்த போட்டியில் இளம் வீரர் திலக் வர்மாவை 50 ரன்கள் அடிக்க விடாமல் கேப்டன் பாண்டியா சுயநலமாக நடந்து கொண்டது உச்சகட்ட விமர்சனங்களை எழுப்பியது. அதாவது இந்த தொடரில் அறிமுகமாகி முதலிரண்டு போட்டிகளில் சூரியகுமார் முதல் சஞ்சு சாம்சன் வரை சவாலான பிட்ச்சில் தடுமாறிய பெரும்பாலான இந்திய வீரர்களுக்கு மத்தியில் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்த திலக் வர்மா 39, 51 என அதிகபட்ச ஸ்கோர் அடித்து போராடியும் வெற்றி காண முடியவில்லை.

- Advertisement -

வெற்றி முக்கியமல்லையா:
அதே போல 3வது போட்டியிலும் தொடக்க வீரர்கள் ஏமாற்றிய போது சூரியகுமாருடன் 87 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மிக சிறப்பாக பேட்டிங் செய்த அவர் கடந்த போட்டிகளில் பெற முடியாத வெற்றியை இம்முறை உறுதி செய்து 18.4 ஓவரில் 49 ரன்களை தொட்டார். அப்போது கேப்டனாக அடுத்த பதில் சிங்கிள் எடுத்து அதற்கடுத்த பந்தில் அவரை 50 ரன்கள் தொடுவதற்கு வழிவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட பாண்டியா சிக்ஸர் அடித்து தம்முடைய பெயரில் ஃபினிஷிங் செய்தார்.

அதனால் சிறப்பாக செயல்படும் இளம் வீரருக்கு இன்னும் உத்வேகத்தை கொடுக்கக்கூடிய 50 ரன்கள் தொடும் வாய்ப்பை பாண்டியா சுயநலமாக தடுத்ததாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொந்தளித்து திட்டி தீர்த்தனர். குறிப்பாக 2014 உலகக்கோப்பை செமி ஃபைனலில் ஃபினிஷிங் செய்யும் வாய்ப்பு கிடைத்தும் அதை வெற்றியை போராடிக் கொண்டு வந்த விராட் கோலியிடம் கொடுத்த தோனி போல எப்போதுமே உங்களால் வர முடியாது என்றும் ரசிகர்கள் விமர்சித்தனர்.

- Advertisement -

மேலும் இளம் வீரருக்கு ஃபினிஷிங் செய்யும் வாய்ப்பை கொடுக்காமல் சிக்ஸர் அடிக்க இது என்ன உலக கோப்பையை அல்லது ரன் ரேட்டுக்காக விளையாடுகிறோமா என்று பாண்டியாவை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ராவும் விமர்சித்தார். இறுதியாக போட்டியை “நீயே பினிஷிங் செய்” என்று ஆரம்பத்தில் சொன்ன பாண்டியா கடைசியில் தாமே சிக்சர் அடித்து போட்டியை முடித்து திலக் வர்மாவை ஏமாற்றியது ஸ்டம்ப் மைக்கில் பதிவான வீடியோ வெளிவந்து ரசிகர்களிடம் மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் எந்த வகையான கிரிக்கெட்டாக இருந்தாலும் சாதனைகளை விட அணியின் வெற்றி தான் முக்கியம் என்பதை மறந்து இந்திய ரசிகர்கள் கேப்டன் பாண்டியாவை விமர்சிக்கலாமா என பிரபல வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். மேலும் டி20 கிரிக்கெட்டில் 50 ரன்களை விட ஸ்ட்ரைக் ரேட் தான் முக்கியம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி ட்விட்டரில் பதிவிட்டது பின்வருமாறு.

- Advertisement -

“திலக் வர்மா 50 ரன்களை தவறவிட்டதைப் பற்றிய விவாதத்தில் நான் குழப்பமடைகிறேன். ஏனெனில் டி20 கிரிக்கெட்டில் உண்மையாக அது ஒரு மைல்கல் அல்ல. உண்மையில் சதம் மற்றும் வேறு அரிதான சாதனைகள் தவிர்த்து டி20 கிரிக்கெட்டில் அடையாளங்கள் எதுவுமில்லை. இருப்பினும் அணி விளையாட்டில் நாம் தனிநபர் சாதனைகள் பற்றி வெறித்தனமாக இருக்கிறோம்”

இதையும் படிங்க:தன்னால் காயமைடைந்த சிறுமிக்கு போட்டி முடிந்ததும் பாண்டியா வழங்கிய அன்புப்பரிசு – நெகிழவைக்கும் தகவல் இதோ

“மேலும் டி20 கிரிக்கெட்டில் 50 ரன்கள் ஒரு தனிநபர் சாதனையாக பதிவிடப்படும் என்பதை நான் நம்பவில்லை. மாறாக வேகமாக ரன்கள் குவித்து சராசரி மற்றும் ஸ்ட்ரைக் ரேட் அதிகரிப்பதே முக்கியமானதாகும்” என்று குறிப்பிட்டுள்ளார். அதை பார்த்த தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஏபி டீ வில்லியர்ஸ் “நன்றி நன்றி நன்றி. கடைசியில் இதைப் பற்றி யாரோ ஒருவர் பேசியுள்ளார்” என்று பதிலளித்து இந்திய ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisement