
இங்கிலாந்து மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 22ஆம் தேதி துவங்கியது. மான்செஸ்டரில் துவங்கிய அந்த தொடர் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற்று வருகிறது. அந்தப் போட்டியில் முன்னாள் இந்திய வீரர் ஆர்பி சிங் (சீனியர்) மகன் ஹாரி சிங் இங்கிலாந்து அணிக்காக 12வது வீரராக களமிறங்கி ஃபீல்டிங் செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
அந்தப் போட்டிக்காக ஹாரி சிங், கேஸ் ஃபோன்செகா, சார்லி பர்னர்ட் ஆகியோர் பன்னிரண்டாவது வீரர்களாக செயல்படத் தேர்வாகியுள்ளனர். அதனால் 37வது ஓவரில் ஹரி ப்ரூக் தற்காலிகமாக களத்திலிருந்து வெளியேறிய போது ஹாரி சிங் ஃபீல்டிங் செய்வதற்காக வந்தார். முன்னாள் இந்திய வீரர் ஆர்பி சிங்கின் மகனான ஹரி சிங் இந்த வாய்ப்பைப் பெற்ற பின்னணியை பார்ப்போம்.
உத்தரபிரதேசத்தை சேர்ந்த ருத்ரபிரதாப் சிங் 1982 – 1996 வரையிலான காலகட்டங்களில் உள்ளூர் தொடர்களில் விளையாடினார். வலது கை பேட்ஸ்மேன் மற்றும் இடதுகை வேகப்பந்து வீச்சாளரான அவர் இந்தியாவுக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் 2 போட்டிகளில் விளையாடியுள்ளார். குறிப்பாக 1986ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் டீன் ஜோன்ஸ் அவுட்டாக்கியதே அவருடைய ஒரே விக்கெட்டாகும்.
இருப்பினும் உள்ளூர் கிரிக்கெட்டில் 59 போட்டிகளில் விளையாடிய ஆர்பி சிங் 150 விக்கெட்டுகளையும் 1413 ரன்களையும் எடுத்துள்ளார். கடைசியாக 1991 துலீப் கோப்பையில் விளையாடிய அவர் அதன் பின் இங்கிலாந்துக்கு குடி பெயர்ந்தார். அங்கே அவர் லேன்க்ஷைர் அணியின் பயிற்சியாளராக வேலை செய்ய தொடங்கினார்.
அப்படியே தன்னுடைய மகன் ஹாரி சிங்கையும் அவர் இங்கிலாந்திலேயே உள்ளூர் போட்டிகளில் விளையாட வைத்தார். அவரது பயிற்சியில் வளர்ந்த ஹாரி சிங் இந்த வருடம் லேன்க்ஷைர் அணிக்காக லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அறிமுகமானார். அந்த வாய்ப்பில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள ஹரி சிங் 87 ரன்களை எடுத்துள்ளார்.
இதையும் படிங்க: 9வது இடத்தில் மாஸ் காட்டிய இலங்கை வீரர்.. இந்திய வீரரின் 41 வருட உலக சாதனையை உடைத்து அபாரம்
மேலும் கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அண்டர்-19 அணிக்காக ஹாரி சிங் விளையாடி கவனத்தை ஈர்த்தார். தற்போது லேன்க்ஷைர் அணியின் சொந்த மைதானமான மான்செஸ்டரில் இங்கிலாந்து – இலங்கை அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. அதில் உள்ளூர் அணியை சேர்ந்தவர் என்ற முறையில் அவருக்கு இங்கிலாந்தின் 12வது வீரராக விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.