9வது இடத்தில் மாஸ் காட்டிய இலங்கை வீரர்.. இந்திய வீரரின் 41 வருட உலக சாதனையை உடைத்து அபாரம்

Milan Rathnayake
- Advertisement -

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அந்தத் தொடரின் முதல் போட்டி ஆகஸ்ட் 21ஆம் தேதி மான்செஸ்டர் நகரில் துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணி தடுமாற்றமாக விளையாடி 236 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் தனஞ்செயா டீ சில்வா 74, மிலன் ரத்நாயகே 72 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக கிரிஸ் ஓக்ஸ் மற்றும் சோயப் பஷீர் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து முதல் நாள் முடிவில் 22/0 ரன்கள் எடுத்துள்ளது.

- Advertisement -

புதிய உலக சாதனை:

களத்தில் பென் டக்கெட் 13*, டான் லாரன்ஸ் 9* ரன்களுடன் உள்ளனர். முன்னதாக இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணிக்கு முக்கிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் எடுக்கத் தவறினர். அதனால் 113/7 என தடுமாறிய இலங்கை 150 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது கேப்டன் தனஞ்ஜெயா டீ சில்வா நிதானமாக விளையாடினார்.

அவருடன் 9வது இடத்தில் களமிறங்கிய அறிமுக வீரர் மிலன் ரத்நாயகே இங்கிலாந்து பவுலர்களை கடுப்பேற்றும் வகையில் நிதானமாக விளையாடினார். நேரம் செல்ல செல்ல நங்கூரமாக நின்று அவர் தம்முடைய கேப்டனுடன் சேர்ந்து 9வது விக்கெட்டுக்கு 63 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இலங்கை 200 ரன்கள் தாண்டுவதற்கு முக்கிய பங்காற்றினார். அந்த வகையில் அறிமுக போட்டியிலேயே அரை சதமடித்த அவர் 6 பவுண்டரி 2 சிக்சருடன் 72 (135) ரன்கள் குவித்தார்.

- Advertisement -

1 ரன்னில் உடைந்த சாதனை:

அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 9வது இடத்தில் களமிறங்கி அதிகபட்ச ஸ்கோர் அடித்த வீரர் என்ற புதிய உலக சாதனையையும் மிலன் ரத்னநாயகே படைத்துள்ளார். இதற்கு முன் கடந்த 1983ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத்தில் நடைபெற்ற போட்டியில் இந்தியாவின் பல்விந்தர் சந்து 9வது இடத்தில் களமிறங்கி 71 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும்.

இதையும் படிங்க: இந்தியா 36க்கு ஆல் அவுட் மாதிரி.. நம்மலும் அந்த வலையில் சிக்கலாம்.. ஆஸியை எச்சரித்த ஹைடன்

தற்போது அவருடைய 41 வருட சாதனையை ரத்நாயகே தனது அறிமுக போட்டியிலேயே 1 ரன் கூடுதலாக எடுத்து உடைத்துள்ளார். இந்த சாதனை இலங்கை ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து 2வது நாளில் இங்கிலாந்தை விரைவாக ஆல் அவுட் செய்யும் முனைப்புடன் இலங்கை அணி போராடி வருகிறது.

Advertisement