
பாகிஸ்தானில் நடைபெற்றுவரும் பிஎஸ்எல் 2022 டி20 கிரிக்கெட் மிகவும் விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி மாதம் இறுதியில் துவங்கிய இந்த தொடரில் மொத்தம் பங்கேற்ற 6 அணிகளும் 30 போட்டிகள் கொண்ட லீக் சுற்றில் முழு பலத்துடன் மோதி வந்தன. இந்த தொடரில் நேற்று பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகரில் இருக்கும் கடாபி கிரிக்கெட் மைதானத்தில் கடைசி லீக் சுற்றுப் போட்டி நடைபெற்றது. அதில் பெஷாவர் மற்றும் லாகூர் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
சூப்பர் ஓவர்:
அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பெஷாவர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 158/7 ரன்களை எடுத்தது. அந்த அணிக்கு அதிக பட்சமாக அனுபவ வீரர் சோயப் மாலிக் 28 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார். லாகூர் அணியின் சார்பில் அதிகபட்சமாக பாவத் அஹமத் 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.
அதை தொடர்ந்து 159 என்ற இலக்கை துரத்திய லாகூர் அணிக்கு அனுபவ வீரர் முகமது ஹபீஸ் 49 ரன்களும் நட்சத்திர வீரர் மற்றும் கேப்டன் சாகித் அப்ரிடி கடைசி நேரத்தில் 20 பந்துகளில் 39* ரன்கள் விளாசியதால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணியும் மிகச்சரியாக 158/8 ரன்கள் எடுத்ததால் போட்டி டை ஆனது. இதையடுத்து இந்த போட்டியின் வெற்றியாளரை தீர்மானிக்க நடத்தப்பட்ட பரபரப்பான சூப்பர் ஓவரில் பெஷாவர் 8 ரன்கள் எடுக்க அதன்பின் 9 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லாகூர் 5 ரன்கள் மட்டுமே எடுத்ததால் பெஷாவர் சூப்பர் ஓவரில் திரில் வெற்றி பெற்றது.
கேட்ச் விட்ட வீரர்:
முன்னதாக இந்த போட்டியின் போது ஒரு பாகிஸ்தான் வீரர் சக வீரரின் கன்னத்தில் அறைந்தது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்த போட்டியில் பெஷாவர் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது 2வது ஓவரை லாகூர் அணி பந்து வீச்சாளர் ஹரிஷ் ரவூப் வீச அதில் ஒரு பந்தை பெஷாவர் அணியின் பேட்டர் ஹசரத்துல்லா சாசாய் சிக்ஸர் அடிக்க முயன்றார். ஆனால் அது கேட்ச்சாக மாறி லெக் சைட் பகுதியில் நின்று கொண்டிருந்த கம்ரான் குலாம் கைக்கு சென்றது. இருப்பினும் இரவு நேரப்போட்டி என்பதால் பனியின் தாக்கம் இருந்த காரணத்தால் அந்த கேட்ச்சை அவர் கோட்டை விட்டுவிட்டார்.
இதனால் அந்த பந்தை வீசிய ஹாரிஸ் ரவூப் விக்கெட் கிடைக்காத ஏமாற்றத்தில் கடும் கோபமடைந்தார். ஆனால் அதே ஓவரின் 5-வது பந்தை வீசிய ஹரிஷ் ரவூப் பெஷாவர் பேட்டர் முகமத் ஹரிஷை 6 ரன்களுக்கு வெற்றிகரமாக அவுட் செய்தார். ஒருசில பந்துகளுக்கு முன் கைநழுவிய விக்கெட் மீண்டும் அதே ஓவரில் கிடைத்ததை நினைத்து அவர் அந்த விக்கெட்டை கொண்டாட துவங்கினார். அப்போது மைதானத்தில் இருந்த சக வீரர்களும் அவரின் அருகே வந்து அந்த கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
கன்னத்தில் பளார்:
அப்போது அதே ஓவரில் ஒரு சில பந்துகளுக்கு முன்பாக கிடைத்த கேட்ச்சை கோட்டை விட்டதை மறந்து விட்டு அந்த கொண்டாட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொள்ள வந்த கம்ரான் குலாம் கன்னத்தில் கையில் கிடைத்த கேட்ச்சை நழுவ விட்டதற்காக ஹரிஷ் ரவூப் பளாரென கோபத்தில் ஒரு அறை விட்டார். இருப்பினும் ஹரிஷ் ரவூப் கன்னத்தில் அறைந்தது பற்றி பெரிதாக எடுத்துக்கொள்ளாத கம்ரான் குலாம் அவரை உற்சாகப் படுத்தும் வண்ணம் சிரித்த முகத்துடன் அவரது நெஞ்சில் தட்டிக் கொடுத்தார்.
இதை பார்த்த பாகிஸ்தான் ரசிகர்கள் ஹரிஷ் ரவூப் மீது கடும் கோபம் அடைந்தார்கள். அதேசமயம் அந்த விஷயத்தை பெரிது படுத்தாமல் கன்னத்தில் அறைந்தவரின் நெஞ்சில் தட்டிக்கொடுத்து பாராட்டிய கம்ரான் குலாம் பல ரசிகர்களின் பாராட்டை பெற்றுள்ளார். இந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : கிரிக்கெட் வீரர்களை ஆடுமாடு போல நடத்தும் ஐபிஎல் ஏலத்தை நிறுத்துங்க – சி.எஸ்.கே வீரர் கோரிக்கை
பொதுவாகவே பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் சூதாட்டம் மற்றும் களத்தில் இதுபோன்ற சண்டைகளில் ஈடுபடுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. அந்த நிலையில் மீண்டும் பாகிஸ்தான் வீரர்களுக்கு இடையே இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.