ஒரே ஓவரில் 24 ரன்கள்.. துவம்சம் செய்த ஆஸி.. 150 கி.மீ ஃபாஸ்ட் பவுலரான ஹரிஷ் ரவூப் மோசமான சாதனை

Haris Rauf
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 20ஆம் தேதி பெங்களூரு நகரில் நடைபெற்ற 18வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அதில் இந்தியாவிடம் சந்தித்த தோல்வியிலிருந்து வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு துவக்க வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் மிட்சேல் மார்ஷ் ஆகியோர் பவர் பிளே ஓவர்களிலிருந்தே பாகிஸ்தான் பவுலர்களை பந்தாடி விரைவாக ரன்களை சேர்த்தனர். குறிப்பாக 10 ரன்களில் கொடுத்த கேட்ச்சை பாகிஸ்தான் தவறவிட்டதை பயன்படுத்திய டேவிட் வார்னர் அதிரடியாக விளையாடியதை போலவே மார்ஷ் தம்முடைய பங்கிற்கு சேர்ந்து வெளுத்து வாங்கினார்.

- Advertisement -

மோசமான சாதனை:
அந்த நிலைமையில் பாகிஸ்தானின் நட்சத்திர பவுலர் ஹரிஷ் ரவூப் ஆஸ்திரேலியாவின் ரன் குவிப்பை கட்டுப்படுத்துவதற்காக 9வது ஓவரை முதல் முறையாக வீசினார். ஆனால் அதில் வார்னர் மற்றும் மார்ஷ் ஆகியோர் ஜோடி சேர்ந்து 4, 6, 1, 1ஒய்ட், 4, 4, 4 என ஒரே ஓவரில் மொத்தம் 24 ரன்களை அடித்து நொறுக்கி ஹரிஷ் ரவூப்பை பந்தாடினார்கள்.

குறிப்பாக 150க்கும் மேற்பட்ட கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடியவராக கருதப்படும் ஹரிஷ் ரவூப் நல்ல லைன், லென்த் போன்றவற்றை பின்பற்றாததால் சரமாரியாக அடி வாங்கி உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு ஓவரில் அதிக ரன்களை வாரி வழங்கிய 3வது பாகிஸ்தான் பவுலர் என்ற மோசமான சாதனை படைத்தார். இதற்கு முன் 2011 உலகக் கோப்பையில் இலங்கையின் கண்டி நகரில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் பவுலர் அப்துல் ரசாக் ஒரே ஓவரில் 30 ரன்கள் வழங்கி இந்த மோசமான சாதனை பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்.

- Advertisement -

அதே போட்டியில் சோயப் அக்தர் 28 ரன்கள் வழங்கி 2வது இடத்தில் இருக்கும் நிலையில் 3வது இடத்தை இன்று ஹரிஷ் ரவூப் பிடித்துள்ளார். அந்த வகையில் தொடர்ந்து சிறப்பாக பேட்டிங் செய்து 259 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து உலக கோப்பையில் அதிக ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த ஆஸ்திரேலிய ஜோடியாக சாதனை படைத்த அவர்களில் மார்ஷ் சதமடித்து 121 (108) ரன்களில் அவுட்டானார். அவரை போலவே மறுபுறம் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய டேவிட் வார்னர் சதமடித்தும் ஓயாமல் 163 (124) ரன்கள் விளாசி அவுட்டானார்.

இதையும் படிங்க: பாகிஸ்தானை பந்தாடிய வார்னர்.. ரோஹித் உட்பட யாருமே செய்யாத தனித்துவ உலக கோப்பை சாதனை

ஆனால் அடுத்ததாக வந்த மேக்ஸ்வெல் 0, ஸ்மித் 7, லபுஸ்ஷேன் 8, ஸ்டோனிஸ் 21, ஜோஸ் இங்லிஷ் 13 என முக்கிய பேட்ஸ்மேன்கள் குறைந்த ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 400 ரன்கள் தொடும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலியாவை 50 ஓவரில் 367/9 ரன்களுக்கு கட்டுப்படுத்திய பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக சாகின் அப்ரடி 5 விக்கெட்டுகளும் ஹரிஷ் ரவூப் 3 விக்கெட்டுகளும் எடுத்து நல்ல கம்பேக் கொடுத்தார்கள். இருப்பினும் 83 ரன்கள் கொடுத்த ரவூப் ஒருநாள் கிரிக்கெட்டில் தன்னுடைய மோசமான பந்து வீச்சை (3/83) பதிவு செய்தார்.

Advertisement