பாகிஸ்தானை பந்தாடிய வார்னர்.. ரோஹித் உட்பட யாருமே செய்யாத தனித்துவ உலக கோப்பை சாதனை

Pak vs Aus
- Advertisement -

இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 20ஆம் தேதி பெங்களூருவில் மதியம் 2 மணிக்கு நடைபெற்ற 19வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. அதில் கடந்த போட்டியில் இந்தியாவிடம் சந்தித்த தோல்வியிலிருந்து வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத்தொடர்ந்து பேட்டிங்கை துவக்கிய ஆஸ்திரேலியாவுக்கு டேவிட் வார்னர் மற்றும் மிட்சேல் மார்ஷ் ஆகிய துவக்க வீரர்கள் பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி வேகமாக ரன் குவிப்பில் ஈடுபட்டனர். அதில் 10 ரன்களில் இருந்த போது கொடுத்த கேட்ச்சை பாகிஸ்தான் தவற விட்டதை பயன்படுத்திய வார்னர் முதலாவதாக 50 ரன்கள் கடந்தார். அவருடன் மறுபுறம் மார்ஷ் அதிரடியாக விளையாடி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆஸ்திரேலியாவுக்கு நல்ல துவக்கத்தை கொடுத்தார்.

- Advertisement -

நேரம் செல்ல செல்ல சுமாராக பந்து வீசிய பாகிஸ்தான் பவுலர்களை பந்தாடி 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய சவாலாக மாறிய இந்த ஜோடியில் டேவிட் வார்னர் முதல் ஆளாக சதமடித்தார். அவருடன் தம்முடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்ஷும் அடுத்த பந்திலேயே சதமடித்தார். அந்த வகையில் 33 ஓவர்கள் வரை நிலைத்து நின்று அசத்திய இந்த ஜோடி 259 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் குவித்த ஆஸ்திரேலிய ஜோடியாக சாதனை படைத்தது.

அப்போது மார்ஷை 10 பவுண்டரி 9 சிக்ஸருடன் 121 (108) ரன்களில் அவுட்டாக்கிய ஷாஹீன் அஃப்ரிடி அடுத்ததாக வந்த மேக்ஸ்வெலை கோல்டன் டக் அவுட்டாக்கினார். அவரைத் தொடர்ந்து வந்த ஸ்டீவ் ஸ்மித் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 7 ரன்களில் அவுட்டாக மறுபுறம் தொடர்ந்து அசத்திய டேவிட் வார்னர் 14 பவுண்டரி 9 சிக்சருடன் 163 (124) ரன்கள் குவித்து ஒரு வழியாக ஆட்டமிழந்தார்.

- Advertisement -

முன்னதாக 2015 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 179 ரன்கள் அடித்த வார்னர் 2019 உலகக் கோப்பையில் வங்கதேசத்திற்கு எதிராக 166 ரன்கள் அடித்துள்ளார். தற்போது அடித்த 163 ரன்களையும் சேர்த்து உலகக் கோப்பை வரலாற்றில் 3 முறை 150க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையும் வார்னர் படைத்துள்ளார்.

இதையும் படிங்க: அல்வா கேட்ச் விட்ட பாகிஸ்தான் வீரர்.. அடித்து நொறுக்கி சதமடித்த வார்னர்.. மார்ஷுடன் சேர்ந்து மாஸ் சாதனை

அவரை தவிர்த்து வேறு யாருமே 2 முறை கூட அடிக்காத நிலையில் கெயில், கப்டில், ரோஹித் சர்மா உள்ளிட்ட 27 வீரர்கள் தலா 1 முறை மட்டுமே அடித்துள்ளனர். இருப்பினும் அடுத்ததாக வந்த ஸ்டோனிஸ் 21, இங்லிஷ் 13, லபுஸ்ஷேன் 8 ரன்களில் அவுட்டாக்கி ஆஸ்திரேலியாவை 400 ரன்கள் தொடவிடாமல் 50 ஓவரில் 367/9 ரன்களுக்கு கட்டுப்படுத்திய பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஹரிஷ் ரவூப் 3, ஷாஹீன் அஃப்ரிடி 5 விக்கெட்டுகளை எடுத்து கம்பேக் கொடுக்க உதவினர்.

Advertisement