
ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதில் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் மும்பை இந்தியன்ஸ் முதல் அணியாக லீக் சுற்றுடன் பரிதாபமாக வெளியேறியது. வருங்காலத்தை கருத்தில் கொண்டு இந்த வருடம் ரோஹித் சர்மாவை கழற்றி விட்ட மும்பை நிர்வாகம் ஹர்திக் பாண்டியாவை வலுக்கட்டாயமாக வாங்கி தங்களுடைய கேப்டனாக அறிவித்தது.
அதற்கு மும்பை ரசிகர்களே இப்போது வரை கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அந்த எதிர்ப்புக்கு மத்தியில் பேட்டிங், பவுலிங் ஆகியவற்றில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாத பாண்டியா கேப்டனாகவும் சுமாராகவே செயல்பட்டார். அதனால் பாண்டியா தலைமையில் 13 போட்டிகளில் 4 வெற்றி 9 தோல்வியை பதிவு செய்துள்ள மும்பை புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் தவிக்கிறது.
பாண்டியா கருத்து:
இந்த நிலையில் மே 17ஆம் தேதி மும்பை அணி தன்னுடைய கடைசி போட்டியில் லக்னோவை எதிர்கொள்கிறது. அப்போட்டியில் வென்று புள்ளிப்பட்டியலில் குறைந்தபட்சம் கடைசி இடத்தைப் பிடிக்கும் அவமானத்தை மும்பை தவிர்க்குமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்நிலையில் மற்ற கேப்டன்களைப் போல் தாம் வெற்றிக்காக விளையாடும் கேப்டன் கிடையாது என்று ஹர்டிக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
மாறாக முடிவைப் பற்றி கவலைப்படாமல் 100% பங்களிப்பை களத்தில் கொடுக்க வேண்டும் என்ற அணுகுமுறையே தமக்கு முக்கியம் என்று பாண்டியா கூறியுள்ளார். அதைச் செய்தாலே வெற்றி தாமாக வரும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “என்னுடைய கேப்டன்ஷிப் மிகவும் எளிது என்று நினைக்கிறேன். அது ஹர்திக் பாண்டியா மற்ற 10 வீரர்களுடன் சேர்ந்து விளையாடுவதாகும்”
“அந்த மந்திரம் மிகவும் எளிதானது. மற்ற வீரர்களை பார்த்து அவர்களுக்கு தேவையான நம்பிக்கையும் ஆதரவையும் அன்பையும் கொடுப்பது என்னுடைய வேலையாகும். அதைப் பெற்றுக் கொண்டு களத்தில் அவர்கள் 100% பங்களிப்பை கொடுப்பார்கள். அதையே நானும் கேட்கிறேன். எப்போதும் நான் வெற்றி முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு செயல்படுபவன் கிடையாது. ஆனால் கண்டிப்பாக அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவேன்”
இதையும் படிங்க: மொத்த உலகமும் யோசித்த போது இறங்கி அடிச்சேன்.. அதான் என்னோட சாதனை.. ஜெய் ஷா பெருமிதம்
“அதாவது வீரர்கள் எம்மாதிரியான அணுகு முறையை காண்பிக்கிறார்கள் என்பதை பார்ப்பேன். அது அவர்களுக்கு பொருத்தமாக இருப்பது போல் எனக்குத் தோன்றினால் அணியின் நலனுக்காக அப்படியே விடுவேன்” என்று கூறினார். இந்த சூழ்நிலையில் ஐபிஎல் தொடரை முடித்துக் கொண்டு 2024 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.