சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா தவிர்க்க முடியாத நாடாக விஸ்வரூபம் எடுத்துள்ளது என்றே சொல்லலாம். குறிப்பாக ஐபிஎல் தொடர் வந்தது முதல் பல கோடி ரூபாய்களை வருமானமாக ஈட்டும் பிசிசிஐ ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளை விட பணக்கார வாரியமாக வளர்ந்துள்ளது. அந்த வாரியத்தை நிர்வகிக்கும் முக்கிய பொறுப்பில் ஜெய் ஷா கடந்த 2019 முதல் செயலாளராக செயல்பட்டு வருகிறார்.
சௌரவ் கங்குலி தலைவராக பொறுப்பேற்ற போது செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்ட அவர் சிறப்பாக செயல்பட்டதால் 2வது முறையாக பதவி நீட்டிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு செல்லாமல் 2023 ஆசியக் கோப்பையை இலங்கையில் நடத்தியது, முழுமையான மகளிர் ஐபிஎல் தொடரை துவக்கியது, ஐபிஎல் தொடரில் 10 அணிகளை கொண்டு வந்து விரிவுப்படுத்தியது போன்ற அம்சங்கள் ஜெய் ஷா எடுத்த முக்கிய முடிவுகளாக பார்க்கப்படுகிறது.
ஜெய் ஷா சாதனை:
இந்நிலையில் 2020ஆம் ஆண்டு லாக் டவுன் காரணமாக ஒலிம்பிக், ஈபிஎல், பிரென்ச் ஓபன் போன்ற முக்கிய தொடர்கள் ரத்து செய்யப்பட்டதாக ஜெய் ஷா தெரிவித்துள்ளார். ஆனால் மொத்த உலகமும் யோசித்த போது ஐபிஎல் தொடரை வெற்றிகரமாக துபாயில் நடத்தியது பிசிசிஐ செயலாளராக தாம் செய்த சாதனையாக பார்ப்பதாக ஜெய் ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.
“ஒலிம்பிக்ஸ், ஈபிஎல், பிரென்ச் ஓப்பன் போன்ற தொடர்கள் ரத்து செய்யப்பட்டன அல்லது தள்ளி வைக்கப்பட்டன. ஆனால் அப்போது பிசிசிஐ நினைத்தால் என்ன சாதிக்க முடியும் என்பதை நாங்கள் உலகிற்கு காண்பித்தோம். 2020 ஐபிஎல் தொடரை துபாயில் நடத்தியது என்னுடைய மிகப்பெரிய சாதனையாகும். மேலும் தேர்வுக்குழுவினர் ஐபிஎல் செயல்பாடுகளை வைத்து இந்திய அணியை தேர்வு செய்ய முடியாது”
“வெளிநாடுகளில் வெளிப்படுத்தும் செயல்பாடுகள் முக்கியம். ஐபிஎல் தொடரில் பிட்ச்கள் பேட்டிங்க்கு சாதகமாக இருக்கிறது என்பதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். எடுத்துக்காட்டாக நீங்கள் லக்னோ மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதிய போட்டியை பாருங்கள். அதில் ஹைதராபாத் 9 ஓவரில் விக்கெட் இழக்காமல் வெற்றி பெற்றது. எப்போதும் பிட்ச்கள் வெளிப்படையாக பிசிசிஐ நடுநிலையாளரின் மேற்பார்வையின் கீழ் நன்றாக தயாரிக்கப்படுகிறது” என்று கூறினார்.
இதையும் படிங்க: அபிஷேக் சர்மாவின் அம்மாவுக்கு சுப்மன் கில் கொடுத்த வேற லெவல் மரியாதை.. நெஞ்சை தொட்ட தருணம்
அத்துடன் 2023 – 2027 ஐபிஎல் தொடரின் ஒளிபரப்பு உரிமத்தை 48,390 கோடிக்கு விற்றதும் மகளிர் ஐபிஎல் தொடருக்கு கொடுத்ததும் தம்முடைய கேரியரின் சாதனையாக பார்ப்பதாக ஜெய் ஷா தெரிவித்துள்ளார். மேலும் சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் மற்றும் எம்எஸ் தோனி ஆகியோர் தமக்கு மிகவும் பிடித்த ஆல் டைம் இந்திய கிரிக்கெட் வீரர்கள் என்று அவர் கூறியுள்ளார். அத்துடன் தற்போதைய வீரர்களில் விராட் கோலி, ரோஹித் சர்மா, பும்ரா, ஹர்டிக் பாண்டியா ஆகியோர் பிடிக்கும் என்று அவர் தெரிவித்தார்.