அபிஷேக் சர்மாவின் அம்மாவுக்கு சுப்மன் கில் கொடுத்த வேற லெவல் மரியாதை.. நெஞ்சை தொட்ட தருணம்

Shubman Gill GT 2
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் 66வது லீக் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. மே 16ஆம் ஹைதராபாத் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வீச விடாமல் ஆரம்பம் முதலே மழை வெளுத்து வாங்கியது. அதனால் இரவு 10 மணி வரை காத்திருந்த நடுவர்கள் போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவித்ததை தொடர்ந்து ஹைதராபாத் மற்றும் குஜராத் அணிகளுக்கு தலா ஒரு புள்ளி கொடுக்கப்பட்டது.

அந்த ஒரு புள்ளியையும் சேர்த்து 13 போட்டிகளில் 15 புள்ளிகளை பெற்ற ஹைதராபாத் ப்ளே ஆஃப் சுற்றுக்கு மூன்றாவது அணியாக தகுதி பெற்றது. மறுபுறம் ஏற்கனவே லீக் சுற்றுடன் வெளியேறிய குஜராத் அந்த ஒரு புள்ளியையும் சேர்த்து 14 போட்டிகளில் 12 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. அதனால் ஆறுதல் வெற்றியைக் கூட பதிவு செய்ய முடியாமல் குஜராத் பரிதாபமாக வெளியேறியது.

- Advertisement -

வேற லெவல் மரியாதை:
இருப்பினும் அப்போட்டி முடிந்ததும் வழக்கம் போல இரு அணிகளைச் சேர்ந்த வீரர்கள் கை கொடுத்துக் கொண்டனர். அப்போது ஹைதராபாத் அணியின் துவக்க வீரர் அபிஷேக் சர்மா தன்னுடைய குடும்பத்தை குஜராத் கேப்டன் சுப்மன் கில்லிடம் அறிமுகப்படுத்தினார். அவர்களைப் பார்த்த சுப்மன் கில் நேரடியாக அபிஷேக் சர்மா அம்மா மஞ்சு சர்மாவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி வேற லெவல் மரியாதை கொடுத்தார்.

அதை சற்று எதிர்பாராத மஞ்சு சர்மா அவரை எழுப்பி தன்னுடைய மகனைப் போல் கன்னத்தை தடவி முத்தமிட்டு வாழ்த்தினார். அதைத் தொடர்ந்து அவரது அருகில் இருந்து அபிஷேக் சர்மாவின் தங்கையிடமும் கை கொடுத்து சுப்மன் கில் புகைப்படம் எடுத்துக்கொண்டார். ரசிகர்களின் நெஞ்சைத் தொடும் அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

முன்னதாக உள்ளூர் கிரிக்கெட்டில் பஞ்சாப் அணிக்காக அபிஷேக் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் 2017 சீசனில் ஒன்றாக அறிமுகமானார்கள். அங்கே சிறப்பாக செயல்பட்டதால் 2018 அண்டர்-19 உலகக் கோப்பையில் விளையாடிய அவர்கள் பிரித்வி ஷா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்வதற்கு முக்கிய பங்காற்றினர். குறிப்பாக கில் அதிக ரன்கள் அடித்து வெற்றியில் முக்கிய பங்காற்றியதால் அடுத்த வருடமே இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

இதையும் படிங்க: கிரிக்கெட்ல இந்த மாற்றம் வந்தா தான் பவுலர்கள் தப்பிப்பாங்க.. முதல்ல அதை பண்ணுங்க – அணில் கும்ப்ளே கருத்து

மறுபுறம் உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ந்து போராடி வரும் அபிஷேக் சர்மா இந்த வருடம் ஹைதராபாத் அணிக்காக அடித்து நொறுக்கி எதிரணிகளை பந்தாடி வருவதை அனைவரும் அறிவோம். இதுவரை 12 போட்டிகளில் 426 ரன்கள் அடித்துள்ள அவர் விரைவில் இந்திய அணிக்காக விளையாடுவார் என்று நம்பப்படுகிறது. அந்த வகையில் ஆரம்ப காலத்தில் இருந்தே நண்பர்களாக இருப்பதாலேயே அபிஷேக் சர்மா அம்மாவின் காலில் விழுந்து கில் ஆசீர்வாதம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

Advertisement